‘தெறி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Theri - Copy

Theri

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் ஒரு ‘நிர்பயா’ இறக்கும் தருவாயில் ‘அண்ணே’ என்று சொல்லி உயிர் விட, அண்ணனாக பொறுப்பேற்ற நாயகன் அந்த அபலையின் சம்பவத்திற்கு காரணமானவனை கண்டுபிடித்து அதேவிதமாகத்  தண்டிக்க, அதனால் வெகுண்டெழுந்த அவனது பெரும்புள்ளி அப்பா பதிலுக்கு என்னவெல்லாம்  செய்கிறார், எப்படியெல்லாம் எதிர்கொள்ளப் படுகிறார் என்பதைச் சொல்லும் கதைக் களம்.

விஜய்யின் உடையலங்காரம் மிக மிக நன்று. வயதாக வயதாக இன்னும் சுறுசுறுப்பாய் இருக்கிறார்.

விஜய் மாதிரி ஒரு ஹீரோவை வைத்துக்கொண்டு எப்படித் ‘தெறி’க்க விட்டிருக்க வேண்டும்! அட்லீ மிஸ் பண்ணிவிட்டார்.

மனைவியிடம் கனவு பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது நிகழும் காட்சி, ‘பாலியல் பலாத்காரம் பண்ணவன் உன் கையில் கிடைச்சா என்ன பண்ணுவ?’ என்று கேட்டு அதைத் தொடர்ந்து வரும் காட்சி, நாயகனை வளைத்து விட்டதாக மகேந்திரன் பேசும் காட்சி என பல இடங்கள் நன்றாக இருக்கின்றன.

Theri2

விஜய்யின் முகம், கழுத்து, கை என்று மேக்கப்போட்டு கலராக காட்ட முயற்சித்தவர்கள், திரையில் மற்றவர்களும் சமமாக இருக்க வேண்டுமே என்று மொட்டை ராஜேந்திரன், மகேந்திரன் தவிர சமந்தா, ராதிகா என்று எல்லோருக்கும் ஓவர் மேக்கப் போட்டுவிட்டார்கள். மேக்கப் அப்பட்டமாய் ‘தெறி’கிறது சில சீன்களில்.

இழுத்து இழுத்து பேசுவது, ‘மிஸ்டர். சந்த்ரமௌலி’ மாதிரியே ‘வார்டன்’ என்று கார்த்திக்கின் குரல், மேனரிசம் எல்லாம் ஏன் விஜய்க்கு வருகிறது!? ‘புலி’ இம்ப்பாக்ட் இன்னும் போகவில்லையோ!

சமந்தா – விஜய் மிக நல்ல இணையாகத் தெரிகிறார்கள். அழகிய பெண்ணை இன்னும் அழகாகத் தானே காட்ட வேண்டும் –  எமி ஜாக்ஸனை ஏன் அப்படிக் காட்ட வேண்டும்?

மீனாவின் பெண் நைநிகா கொடுத்தஹ்டை செய்துவிட்டார்.

யார் வம்பிற்கும் போகாமல் வேறு ஊரில் ஒதுங்கி வாழ்தல் அடிவாங்கவே பிறந்தவன் போல ரௌடியிடம் அடி வாங்கி சகித்தல்- பெண் மீது கை வைக்க முயற்சித்ததும் ‘பாட்ஷா… பாட்ஷா’ என்ற வகையில் எழுதல் – எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒதுங்கி வாழும் முன்னால் காவலரை தேடிப்பிடித்து வம்பிற்கிழுக்கும் வில்லனை நோக்கி புறப்படும் ‘சத்ரியன்’ நாயகன் – என சில படங்களை துவக்கத்திலும் இறுதியிலும் நினைவுகூற வைத்தாலும், நடுவில் திரைக்கதையில் ஒன்றும்படி வைத்து விட்டார்கள்.

க்ளைமாக்சில் விஜய் பேசும் ‘தகப்பானாக வெற்றி பெற்றவன்’ நன்று!

பலம் – விஜய்.
பலவீனம் – இழுவையாகப் போகும் ஆரம்பக் காட்சிகள், பாடல்கள் (‘ஜீத்து ஜில்லாடி’ தவிர வேறுதுவும் முதல் முறை ஈர்க்கவில்லை!).

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘தெறி’ – ‘தெறி’ – விஜய் ரசிகர்களுக்கு, ‘பொரி’- பெரும் பசி கொண்ட மற்றவர்களுக்கு. பார்க்கலாம்.

திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *