’24’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

24 one

24-2இந்த மணித்துளியிலிருந்து இருபத்தி நான்கு மணி நேரம் முன்னும் பின்னும் பயணிக்க வைக்கும் ஒரு கால எந்திர கைக்கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டால், அதை களவாடி கைப்பற்றித் தனதாக்கிக் கொள்ள ஒருவன் முயற்சித்தால், அதனால் ஏற்படும் விளைவுகளை இருபத்தியாறு வருடங்கள் கழித்து இருவர் சரி செய்யும் முயற்சியில் பின்னோக்கிப் பயணித்தால்… எப்படி இருக்கும்? அந்த ’24’லிருந்து ’26’ என்பதே திரைப்படம்.

பனைமரத்தைத் தாண்டி உயரப் பறக்கும் டாடா சூமோக்கள், அரசியல் பஞ்ச்கள், காமெடிப் பேய்கள், திரை முழுக்க லிட்டர் கணக்கில் ரத்தம் தெளிக்கும் கதைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, மிக வித்தியாசமான கால எந்திரக் கதையை கொண்டு வந்ததற்கே பாராட்டலாம் இயக்குநர் விக்ரம் குமாரை. இப்படியொரு கதையை இன்னும் பரபரவென்று தந்திருக்கலாம்தானே! துவக்கத்தில் கொஞ்சம் இழுக்கிறது.

சூர்யா… உழைத்திருக்கிறார். மூன்று பாத்திரங்களிலும் வித்தியாசம் காட்ட உழைத்திருக்கிறார். பெரிய வெற்றியும் பெற்றிருக்கிறார்.  பொதுவாக இரண்டு அல்லது மூன்று பாத்திரங்களை ஒரு நாயகன் செய்யும் போது, ஒரு பாத்திரத்திற்கு வலு கூட்டுவதற்காக மற்ற பாத்திரம் கொஞ்சம் கோணையாக குறைத்து காட்டப்படுவது வழக்கம். ‘மாதாஜீ!’ ‘ஐ ஆம் அ வாட்ச் மெக்கானிக்’ என்று வரும் மணி,  ‘நான் இன்னும் கண்டேபிடிக்காததை இதில  இவன் சேத்துருக்கான்’ என்னும்  டாக்டர் சேதுராமன், ‘ஆத்த்த்…ரே…யாடா!’ என்று தன்னை வெளிப்படுத்தும் வில்லன் என எல்லாப் பாத்திரங்களும் இணையாக நிற்கின்றன அவருக்கு.

கொஞ்ச நேரம் வந்தாலும் நிறைவாக நித்யா மேனன். சமந்தா அழகு. அழகு, காதல் என்றே சுத்தினாலும், காசோலையில் கையெழுத்தைப் பார்த்துவிட்டு ஆழமாகப் பார்ப்பதில் கண்களால் நடிக்கவும் செய்கிறார்.

மேகமலை, பாடல் காட்சிகள் என ஒளிப்பதிவு அட்டகாசம், குறிப்பாக ஆராய்ச்சிக் கூடத்தில் அமரும் கழுகின் பார்வையில் காட்சிகளை காட்டுவது நன்று.

இசை ஏ ஆர் ரஹ்மான் என்று போடுகிறார்கள், அப்படியா! இருபத்தி நாலு மணி நேரத்தில் நடக்கும் கதை என்பதை இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் இசை அமைக்க வேண்டும் என்பது மாதிரி சொல்லிவிட்டார்களோ என்னவோ! பின்னணி இசை அப்படி இருக்கிறது. ‘அழகியே…’ பாடலில் ரஹ்மான் தெரிகிறார்.

பாலா பட்டறையில் கற்றதை நடிப்பில் காட்டும் அதே சூர்யா, ஹரி பட தோஷத்தால் அதே மாதிரி கத்தவும் செய்கிறார். ‘ஏய்…பசிக்கு பொங்கல் தின்னா பரவாயில்ல, ருசிக்கு பாயாசம் திருடுனா ஒத்துக்கமாட்டான்டா இந்த துரைசிங்கம்’ என்று கத்திய அந்த பாணி  ஆத்ரேயா பாத்திரத்தில் அங்கங்கே வருகிறது. ரகுவரன், ரஜினி, சிவாஜி பாணி என பல பரீட்சார்த்த முயற்சிகள் அந்தப் பாத்திரத்தில் தெரிகிறது.

24

கால எந்திரத்தில் பயணிக்கும் போது தன்னைத்  தானே போய் பார்த்துக்கொள்ளும் ஆங்கிலப் பட இரண்டு வித கதாபாத்திரங்களைப் போலல்லாமல், பயணிக்கும் காலத்தில் அந்த நிலையில் இருக்கும் பாத்திரமாக வரும் வண்ணம் வடிவமைத்தது புதிது.

சில பல ஓட்டைகள் இருந்தாலும், அறிவியல் புனைக் கதைக் களம் என்பதை ஏற்றுக் கொண்டு பார்க்கலாம்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ’24’ – வித்தியாச ரீலு. பார்க்கலாம்.

திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *