‘இறைவி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

iraivi

iraivi

குலதெய்வமாகக் கொண்டாடப்பட வேண்டிய ‘இறைவி’களின் உன்னதம் உணராமல், அவமதித்து, தங்களது சுய உணர்ச்சி ஆதாயங்களுக்காக நெறி பிறழ்ந்தும் கூட எதையும் செய்யும், கொஞ்சம் கொஞ்சமாய் ‘இறைவி’களின் வாழ்வை விற்றுவிடும் ‘நெடில்’ கொண்ட ‘ஆ’ண்களின் கதை.

விமர்சனம் செய்பவர்கள் கதையை சொல்ல வேண்டாம் என்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளதால், இதற்குமேல் சொல்லவில்லை.

மூலக்கதை சுஜாதாவுடையது என்று குறிப்பிட்டதற்காகவே இயக்குனரை பாராட்டலாம்.

கலாச்சாரக் காதலர்கள், படத்தில் வரும் ஒரு பாத்திரத்தின் வண்ணம் கண்டு  கடுமையாக விமர்சிக்கிறார்கள். அவர்கள் பார்வையில் கலாச்சார நியாயம் இருக்கிறது.  ‘லிவிங் டுகெதர்’ கால சமூகத்தில் நிகழ்வில் இருப்பதையே படத்தில் வைத்து புனைந்திருக்கிறேன் என்ற பார்வையில் படம் செய்திருக்கிறார் இயக்குனர்.  அந்நாளைய கே. பாலச்சந்தர் படங்களில் வரும் பெண் பாத்திரங்கள் போன்ற அந்தப் பெண் பாத்திரத்தின் வடிவமும், துணிவும், வீச்சும் பெரிதாகவே இருக்கிறது. திருமணம் ஆகியும் தொடர்பவனை துண்டிக்கும் அந்த இடம் அழுத்தமாகவே இருக்கிறது.

எல்லா ஆண்களுமே கெட்டவர்கள் மாதிரியும், எல்லாப் பெண்களும் இப்படியே நடத்தப்படுவது மாதிரியும் காட்டியிருக்கிறாரே என்று கேள்வி கேட்க வேண்டிய அவசியமில்லை. சில ஆண்கள், சில பெண்களின் கதை என்பதை பதிவு செய்திருக்கிறார்.

‘கமலஹாசன் இல்லன்னா பரவாயில்ல, தல தளபதி கூட ஓக்கே!’ எனும் பெண், ‘முடிவு எடுத்திட்டேன்!’ எனும் இளம் பெண்மணி, ‘இன்னும் எவ்ளோ நாளைக்குத்தான் இப்படியே தாங்கறது?’ என்று கண்ணீர் விடும் முதிர்ந்த பெண்மணி என்று வாழ்வின் வேறுவேறு நிலைகளில் இருப்பவர்கள் என ஒரு மழையில் தொடங்கி ஒரு மழையில் முடித்த விதம் நன்று.

வசனங்களுக்கும், நடிகர்களுக்கும் போட்டி படம் முழுக்க. அஞ்சலி, கமலினி, ராதா ரவி, வடிவுக்கரசி, எஸ் ஜே சூர்யா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, தேவ்ரியா என சகலரும் நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

இரண்டாம் பாதியில் ஒரு பாடலையும், சில காட்சிகளையும் நறுக்கியிருந்தால் நச்சென்று இழுவையில்லாமல் இருந்திருக்கும்.

படத்தின் பல இடங்கள் சமூகத்தை அறைகின்றன.

பழைய மகாபலிபுரம் சாலையில்  பயணித்துக் கொண்டிருந்த போது, முன்னே சென்றுகொண்டிருந்த 11 இருக்கை வாகனத்தில், இறுகிப்போன முகங்களுடன் நிறைய ஐ.டி கம்பெனிப் பெண்கள். எல்லோரும் ஒவ்வொரு ‘இறைவி’யாக தெரிந்தார்கள்.  இது படத்தின் வெற்றி!

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘இறைவி’ – பாருங்கள்.

திரைவிமர்சனம் – பரமன் பச்சைமுத்து

2 Comments

  1. lakshmi duttai.A

    மதிப்புடன். வணக்கம்.
    பல காலத்திற்கு பிறகு அமர்ந்து பார்த்த தமிழ்த் திரைப்படம்.இருந்தும் சில கேள்விகள்.பெண் என்பவள் மறைமுகமாக அமைதியானவளாகத்தான் இருக்க வேண்டும் என்பது வடிவுக்கரசியின் கதாப்பாத்திரம் கூறுவதாக அமைகின்றது. கலாச்சாரம் என்பது பெண்ணுக்கு மட்டுமே பேசும் சமுகம் நம்முடையது. அதே நேரம் சங்க சமூகத்தில் பெண்களுக்கு உழைக்கும் உரிமையும் இருந்தது கணவனைத் தெரிவுசெய்யும் உரிமையும் இருந்தது.அதில் இன்று அதிகம் ஏற்புடையது உழைப்பு மட்டுமே. கணவனே கண்கண்ட தெய்வம்,எப்படிப்பட்ட தவறு செய்கின்ற கணவனானாலும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்தை மாற்றவேண்டும் என்பதே இயக்குநரின் சிறப்பான எண்ணம்.ஆனால் இன்றைக்கு பெண்களுக்காகப் பேச நினைக்கும் ஆண்களும் கூட பாலியல் உரிமையை மையப்படுத்தியே பேசுகின்றனர். உரிமைகள் பாலியலோடு நின்றுவிடுவதா? அதைத் தாண்டி பல சிக்கல்களைப் பெண்கள் எதிகொள்கின்றனர். 30 சதவிகிதத்திற்கும் குறைவான பெண்களின், பொருளாதார,கல்வி, தைரியம்,வேலைவாய்ப்பு, சிக்கலற்ற குடும்பவாழ்க்கையை மனதின் நிறுத்தியதால் வந்த விபரீத சிந்தனையே இந்த பாலியல் சுதந்திரம் என்ற எண்ணம். அண்ணியைக் கொடுமை படுத்தும் அண்ணனின் செயல்களை விமர்சிக்காத தம்பி தான் விரும்பும் பெண்ணின் கணவனை விமர்சிப்பது எதனால்? கூட்டுக்குள் வாழ நினைத்தப் பெண் மழையில் நனைந்து சுதந்திரமான எண்ணத்தைப் பதிவுசெய்கின்றாள். தான் இப்படித்தான் வாழவேண்டும் என்று நினைத்தவள் கூட்டுக்குள் அடைபடுகின்றாள். எந்தவகையில் பார்த்தாலும் பெண்கள் ஒரு வழியல்லது மற்றொரு வழியில் கூட்டுக்குள் அடைதல் வேண்டுமா? இன்றையத்திரைப்படங்கள் பெண்ணை இறைவியாகக் காட்டவில்லை என்றாலும் பராவியில்லை பெண்ணாகவாவது காட்டுங்களேன்!. இந்த செய்தி இறைவி படம் போன்ற இயக்குநர்களுக்கு இல்லை.

    Reply
  2. lakshmi.duttai.A.

    பெண்களுக்கான பாலியல் சுதந்திரத்தைக் கூட ஆண்கள் தான் முடிவு செய்ய வேண்டும் என்பதுதான் இந்த சமூகம் காட்டும் உண்மை இதையாராலும் மறுக்க முடியாது. தேவாங்கு என்று கூறியதற்காக ஒரு பெண் கொலை செய்யப்பட்டல் என்பது சமூகத்தில் ஆண்களின் அதிகாரத்தன்மையைக் காட்டுவது. இறைவி படத்தில் அருண் கதாப்பத்திரத்தின் கடைசி வசனம் மிக முக்கியமானது. அமைதியாகப் போக நான் ஒன்றும் பொம்பள இல்லையே எனவருத்தப்படுவதாகக் காட்டுகின்றார். ஆண்கள் இழிந்தபிறவி என்று கூறினாலும் தந்தைவழிச் சமூக மக்களாகிய பெண்களுக்குப் பெண் அமைதியானவள் என்பதே நிற்கும். பல விடயங்கள் உள்கிடைக்கையில் உண்டு. சில நேரங்கள் அதற்கு வாகாக அமையும் சில நேரங்கள் பொய்த்துப் போகும்.

    சில நிகழ்வுகளின் காட்சிகள் குடும்பத்துடன் அமர்ந்து பார்க்கையலவில்லை. பெண் மதிக்கப்படவேண்டியவள் என்பதை இன்று நாம் இளையத் தலைமுறைக்குத் தான் அதிகம் சொல்லவேண்டியுள்ள்து. பார்க்க முடியாததால் விளக்கமுடியவில்லை.

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *