தனிமைத் தவம்

கூட்டமாய் குதூகலித்து மகிழ எவ்வளவு பிடிக்குமோ, தனித்து இருக்கவும் அவ்வளவு பிடிக்கும் எனக்கு. சில திரைப்படங்களை சிலரோடு மட்டுமே பார்க்க வேண்டும் என்பதுபோல, சில படங்களை தனியாகவே பார்க்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன் நான்.

தனியாக இருக்க பயம் கொள்பவன், தூங்கும் நேரம் தவிர மீதி நேரமெல்லாம் துணை வைத்துக்கொள்கிறான். தூங்கும் போது மட்டுமே தனியாக இருக்கிறான், பாதி தூக்கத்தில் பயந்து எழுகிறான்.  தனிமையைத் தீர்ப்பதாய் எண்ணி உறவு என்னும் போர்வையில் ஒளிந்து கொள்ள முயல்கிறான். நாளாக நாளாக இந்த உறவும் போய்விடுமோ என்ற பயத்தில் உள்ளம் கொதிக்கிறான். உணர்வு வழிந்து வார்த்தைகளில் கலந்து உணர்ச்சிப் பிரவாகத்தில் உறவை சிராய்க்கிறான்.

எத்தனைக் கூட்டத்திற்கு இடையே இருந்தாலும் தனித்து இருக்கக் கற்றவன், சேர்ந்து இருப்பதிலும் சிறக்கவே செய்வான்.

தனித்து இருக்கும் நேரங்களில்தான் தலைசிறந்த எண்ணங்கள் உதிக்கின்றன என்பது என் கருத்து.

‘என் மனைவியும் என்னோடுதான்  இருக்கிறாள், ஆனால் உடன் இருந்தும் தனியாகத்தான் வாழ்கிறாள்!’ என்பர் சிலர். நான் சொல்லும் தனிமை வேறு. ‘Alone’க்கும் ‘Aloof’க்கும் வித்தியாசங்கள் உண்டல்லவே!

பழகத் தெரியாமல், பிரச்சினைகளுக்கு அஞ்சி, தாழ்வு மனப்பான்மையால், கூச்ச சுபாவத்தால் உலகத்தோடு ஒட்டாமல் தன்னைத் துண்டித்துக் கொண்டு ‘தனியாக’ ‘தள்ளி’ வாழும் நிலை பற்றி சொல்லவில்லை. எல்லாம் இருந்தும் வேண்டும் போது தனித்து நின்று ‘தனிமைச் சுகம்’ காணும் கலை பற்றியது என் சிலாகிப்பு.

தள்ளி இருப்பதென்பது துண்டித்து நிற்பது;
தனித்து இருப்பதென்பது தன்னோடு இருப்பது.

தனிமை பல வகைகளில் சுகம்,
ஒரு வகையில் தவம்!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
24.06.2016

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *