காட்டு ஐயனார் கோவில்…

​ஊருக்கு வெளியே காவல்தெய்வங்களாக உட்கார வைக்கப் பட்டிருக்கும் எல்லைச்சாமிகளை பார்த்திருக்கிறீர்களா? காடுகள் அல்லது மரங்களடர்ந்த பகுதிகளில் தனியாக வைக்கப் பட்டுருப்பவை அவை.

‘ஐயனார் ராத்ரியில் குதிரையில வேட்டைக்குப் போனாரு…’  ‘கருப்பு தொரத்துது!’ போன்ற கட்டுக் கதைகளையும், யூகங்களையும் காலங்காலமாக சேர்த்து வைத்திருக்கும் பிரதேசங்கள் இவை.  சிலைவழிபாடு, தெய்வம் என்பதைத் தாண்டி பயம் தரும் விஷயம் என்பதால் அதன் மீது ஈர்ப்பு எனக்கு.  

பேய்கள் எப்படி இருக்கும், பாம்புக்கு காது இருக்கிறதா என்றெல்லாம் சிறுவயதில் ஆளவந்தாரோடு இணைந்து நான் ஆராய்ச்சியில் இறங்கியதற்குக் காரணமான முக்கிய புள்ளி எங்கள் ஊர் ஐயனார் கோவில். நெல்வயல்களைக் கடந்து நீர் தளும்பும் வாய்க்காலைக் கடந்து மஞ்சள் நிற பூக்கள் கொண்ட ஆவாரம் செடிகளை கடந்தால் அந்த பய பிரதேசம் வரும். 

ராஜராஜசோழனால் தமிழகத்தின் கிழக்குக் கடற்கடைக்கு கொண்டு வரப்பட்ட சுனாமியைத் தடுத்து நிறுத்தும் வல்லமை கொண்ட அலையாத்தி மரங்கள் அடந்த காடு, அதன் உள்ளே நுழைந்து குனிந்து போனால் சிலை இருக்கும். முகலாய படையெடுப்பில் வெட்டுப்பட்டு தலை துண்டிக்கப்பட்ட சிலைகள் அங்கங்கே கிடக்கும்.

சிறு வயதில் ஆளரவமற்ற இந்த  ஐயனார் கோவில் காட்டில் ராஜவேல் சித்தப்பாவோடு படிக்க வருவதுண்டு. அவர் படிப்பதும், நான் பெரிய பெரிய பாம்புகளை பார்த்து பயம் தெளிந்ததும் இந்தக் காடுகளில்தான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இருவரும் அதே இடத்தில். வாழ்வின் அனுபவங்கள் ஏறி நாங்களும், மரங்கள் குறைந்து காடும் சூழலும் என எல்லாமே மாறியிருக்கின்றன.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *