‘கொடி’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ஒருவன் பயந்தவன் மற்றவன் பலமானவன் அவன் இடத்தில் ஒருநாள் இவன் என்ற அதே அரதப்பழசான கதையில்,  அப்பாவின் ஆசைக்காக அரசியலுக்கு வந்த காதலனும் சொந்த ஆசைக்காக அரசியலுக்கு வந்த காதலியும் அரசியல் காய் நகர்த்தலில் எதிரெதிராய் நின்றால் ‘உயிர்’க் காதல் என்னவாகும் மனித மனம் எப்படி இயங்கும் என்றொரு புதுக் கதையை பின்னி இணைத்து களம் அமைத்து விட்டார்கள்.

பாம்புக்கு அஞ்சாமல் கையில் பிடிக்கும் கூடவே ‘இந்தியாவில் தொன்னூறு சதவீத பாம்புகளுக்கு விஷம் இல்லை’ என்று சொல்லி சாயும் அந்தக் காட்சியிலேயே அந்த முக்கியப் பாத்திரம் என்னவெல்லாம் செய்யும் என்று உருவகம் செய்து காட்டிவிட்டார்கள். பொள்ளாச்சிக்கு மேலே ஆனைமலை சரகத்தில் ஆட்களை அடிக்கும் சிறுத்தை, ஆழியாறு அணை, பொள்ளாச்சி பழனி சாலை என நிறைய நிஜங்களை சேர்த்துக் கோர்த்திருக்கிறார்கள்.

கொடுத்த வேடத்தை சரியாக செய்யும் தனுஷ்,பாவமானன் பவர்புஃல்லானவன் என இரு வேடங்களிலும் வெளுத்து வாங்குகிறார்.  விஜய், சிவகார்த்திகேயன், பிரபுதேவா என கோடம்பாக்கமே ரஜினி மேனரிசத்தில் போட்டி போடும் போது, தனுஷ் மட்டும் விடுவாரா? கருப்புக் கயிறு உத்ராட்சம், கையில் செம்புப் பட்டை படம் முழுக்க மேனரிசம் என முடிந்தவரை செய்திருக்கிறார். ஆள்மாறாட்ட அடிதடி சண்டையில் அப்படியே ‘ராஜாதிராஜா’ சின்னராசுவும் சின்னமலை எஸ்டேட் அதிபர் ராஜாவும் வந்து போகின்றனர் மேனரிசத்தில். ‘வீரத்துரந்தரா’ பாடல் போன்றே ஒரு பாடலையும் அதே குரலில் வைத்தும் விட்டார்கள்.

ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டியது கண்டு த்ரிஷா கோபிக்கும் தருணத்தில், அதை எதிர் கொள்ளும் அந்த இடத்தில் தனுஷ் தேர்ந்த நடிகர் என்று காட்டுகிறார்.  

த்ரிஷா பாத்திரம் தீபாவளி போனஸ். அன்பாகப் பேசி நம்ப வைத்து செய்யும் ‘அழகான ராட்சசி’ பாத்திரம் தனுஷுக்கு இணையான பாத்திரம். குரல் கொடுத்தவர் யாரோ! சரியாகப் பொருந்துகிறது. நன்றாகச் செய்திருக்கிறார். 

த்ரிஷா அடுத்த நிலைக்கு உயர்ந்துள்ளதால், பளிச்சென்று ஒரு நாயகி படத்துக்குத் தேவைப்பட அதை நிரப்புகிறார் மலையாள நாயகி. 

‘எவர்சில்வர நேரடியா சாப்டற அளவுக்கு ஜீரண சக்தி  இன்னும் வர்ல!’ போன்ற ஆரம்பக் காட்சி வசனங்கள் சிரிக்க வைக்கின்றன. 


‘ஏ சுழியா…’ மற்றும் பின்னணி இசைச் சேர்ப்பில் சந்தோஷ் நாராயணன் தெரிகிறார்.

எஸ் ஏ சந்திரசேகர், த்ரிஷா, தனுஷ், இயக்குனர் என நால்வருக்குமே இது ‘கம் பேக்’ படம்.

ஆனாலும்… ஆனைமலை பாதரச ரகசியம், அதைவைத்து மாற்றி மாற்றி த்ரிஷாவும் தனுஷும் செய்யும் அதிரடிகள், தோப்பு வீட்டிற்குக் கூட்டிப் போய் அதன் பின்னே நடக்கும் திருப்பம் என பார்த்துப் பார்த்து செய்தவர்கள், முதல் பாதியில் படம் விழுந்து இரண்டாம் பாதியில் எழுந்து நிற்பதை கொஞ்சம் கவனித்து சரி செய்திருக்கலாம். 

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘கொடி’ – கொஞ்ச நேரம் கழித்து பறக்கிறது. பார்க்கலாம். 

: திரைவிமர்சனம் – பரமன் பச்சைமுத்து 

Www.ParamanIn.com 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *