காட்டிலிருந்து…

​ஒரு காலத்தில் விலங்குகள் அதிகம் திரிந்த அதிகம் வேட்டையாடப்பட்ட காட்டுப் பகுதியாயிருந்து, வேட்டைக்காரர்கள் மெல்ல மெல்ல குடியேறிய பகுதியாய் மாறி ‘வேட்டைக்காரன்புதூர்’ என்றான பகுதிக்கும் டாப்ஸ்லிப்பிற்கும் இடையில் இருக்கிறேன். நேற்றிரவு காட்டுக்குள் இங்கிருப்போர் துணையோடு வண்டியெடுத்துக் கொண்டு போனதில், கண்களில் அதிகம் மாட்டாத கருஞ்சிறுத்தைகள் இரண்டை பார்க்கும் பெரும் வாய்ப்பு கிட்டியது. மின்னும் கண்களை வைத்து சிறுத்தையை கண்டுணர்ந்து எங்களுக்கு காட்டிய சிறுவன் என்னுடன் வந்தது என் பாக்கியம். காட்டுப் பன்றியும், ‘ஏய்… சும்மா லைட்ட நிறுத்து! போ!’ என்பது மாதிரி இருந்த ஒரு முழ உயர ஆந்தையும் இன்னும் பிற காட்டு சங்கதிகளும் வியப்பு தந்தவை. 
அதே பாதையில் பத்து கிலோமீட்டருக்கு அதிகாலை நடந்தது வேறொரு அனுபவம். யானை வந்து விட்ட போன தடங்களை பார்த்ததும், யானை தோட்டத்துக்குள் வந்தால் கீழே விழும் தொங்கும் கல் கொண்ட விசையும் வெடிக்கும் வெடியும் விவசாயிகளின் சங்கடங்களை தெரிவித்தன.
பக்கத்துப் புதரிலிருந்து படீரென (தாழ்வாக) பறந்து மரங்களிலமர்ந்த மயில்கள் பரவசப்படுத்தின. (விவசாயிகள் மயில்களையும், யானைகளையும், பன்ளிகளையும் வெறுக்கிறார்கள்)
தொட்டு நனைத்து வெளியில் எடுத்து உதறிய பின்னும் விரல்களில் வலி வருமளவிற்கு குளிர்ச்சி கொண்ட காட்டாற்று நீர் ‘கூ…ல்…!’.

 

இது எல்லாவற்றையும் விட காடு உற்சாகம் தருகிறது. பூச்சிகளின் இடைவிடா சத்தத்தையும் தாண்டி ஓர் அமைதியை இரவிலும் சத்தமே இல்லாத அதிகாலையில் ஓர் ஆர்பாட்டத்தையும் தன்னோடு கொண்டிருக்கிறது காடு.  ஒரே காடு இரவில் ஒன்றாகவும், பகலில் வேறொன்றாகவும் தெரிந்து அதிசயப்படுத்துகிறது.
உடற்பயிற்சி தினமும் செய்கிறேன் என்றாலும், நுரையீரல் நிரப்பும் இந்த பச்சை காட்டு வாசம் கொண்ட பத்து கிலோ மீட்டர் நடை, மட்டை அரிசி சாப்பாடு, இன்று சிலிப்பிய நாட்டுமாட்டு வெண்ணெய், கரும்புச் சக்கரை, செக்கில் ஆட்டிய எண்ணெயில் சமைத்த உணவு என இந்த சூழலிலேயே இருந்தால் நூற்றியம்பது வயது வரை வாழலாம் போல!
பரமன் பச்சைமுத்து

13.12.2016

பெருஞ்சோலை, 

டாப்ஸ்லிப்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *