இயேசு பெருமானின் உள்ளத்து உயரத்தில் அசந்து போகிறேன்!

jesus

jesus

 

வட இந்திய சிறு நகரம் ஒன்றிக்கு புதிதாக சென்ற ஒரு கணவனும் அவனது இளம் மனைவியும் அவ்வூரின் தெருவிலிறங்கி விலாசம் விசாரிக்கிறார்கள். இளம்பெண்ணைக் கண்ட ஒருவன் பின் புறத்திலிருந்து தவறாகத் தொட முயற்சிக்கிறான், அவளது துப்பட்டாவைப் பிடித்திழுக்கிறான். ‘ஏன் இப்படி செய்கிறீர்கள்?’ என்று நியாயம் கேட்ட கணவனை அடிக்க வருகிறான் அவ்வூர் இளைஞனொருவன். அவனைத் தடுக்க வந்த பெண்ணின் மீது தாக்குதல் நடக்கிறது. அவளும் கையை ஓங்கி அடிக்க ஆரம்பிக்கிறாள். ஒரு கட்டையை எடுத்து வந்து அவள் மண்டையில் ஓங்கி இறக்குகிறான் பின் புறத்திலிருந்து வந்த இன்னொருவன். அவள் மண்டை உடைந்து ரத்தம் பீறிட்டு நெற்றியின் வழியே மூக்கின் வழியே வழிந்து நிலத்தில் விழுகிறது. சூழ்ந்து கொண்டு பார்க்கிறார்கள், செல்லிடப் பேசியில் படமெடுக்கிறார்கள். ஆனால் யாரும் கேட்கவில்லை. தொலைக்காட்சிகளில் தொடர்ந்து காட்டப் பட்ட இந்தக் காணொளித் துண்டில் இந்த நிகழ்வு நடந்த அந்த இடம் முழுக்க வன்மம் பரவி ஒருவித வெப்பமாய் நிற்பதை இங்கிருந்தே உணர முடிகிறது. வன்மம் பரவி நிற்கும் இடத்தில் கேள்வி எழுப்ப, லேசாய் குரல் கொடுக்கக் கூட மக்கள் அஞ்சுகிறார்கள்.
 
வன்மம் ஒரு வகையில் விடத்தை விடக் கொடியது. விடம் உண்டவனை அழிக்கும். வன்மம் முதலில் சிறு துளியாய் உள்ளிருந்து வெளிப்பட்டு பிறகு பரவி பேருருவம் எடுத்து, தன் பூதக் கைகளால் கொண்டவனை ஆட்கொண்டு அவனது தன்னிலையை அழித்து, பின் எதிரிலிருப்பவனையும் தாக்கி அழித்து விடுகிறது. வன்மம் கொலையை விடக் கொடுமையானது. கொலையின் நோக்கம் அடுத்தவன் உயிர். வன்மத்தின் நோக்கம் உயிர் அல்ல, வலி. அவனுக்கு வலிக்க வேண்டும் என்பதே அதன் இலக்கு. கல்லால் அடிப்பது வன்மத்தின் உச்சகட்ட வெறி. ஓங்கி எறியப்படும் கல் வேகமாய் சென்று எதிரில் இருப்பவனின் உடம்பில் இறங்கினால் எப்படி இருக்கும் அவனுக்கு? எந்தப் பாகத்தில் படும், சதை பிய்யுமா, நரம்பு அறுபடுமா, எலும்பு உடையுமா, குருதி கொப்பளித்து வழிந்து ஊற்றுமா என எதைப் பற்றியும் கவலை இல்லை எறிபவனுக்கு. அவன் நோக்கம் எதிரில் இருப்பவன் வலியில் துடிக்கவேண்டும். வன்மம் தீர தீர அவன் அடிக்க எதிரில் இருப்பவன் வலியில் துடிக்க துடிக்க அனுபவிக்க வேண்டும்.
 
ஒரு ஊரே ஒன்றாய் கூடி ஒருவரை கல்லால் அடித்தால் எப்படி இருக்கும்? ஒரு மனிதனின் வன்மமே காற்றில் பரவி எவரையும் குரல் கொடுக்க முடியாமல் செய்யுமென்றால், ஊரிலுள்ளோர் எல்லோரும்ஓர் இடத்தில் சூழ்ந்து நின்று ஒருவரை காட்டுத்தனமாய் வெறி கொண்டு கல்லால் அடித்தால், அந்த இடத்தில் எவ்வளவு வன்மம் பரவி நிற்கும். எவருக்கு துணிவு வரும் குரலெழுப்பி நியாயம் கேட்க?
கேட்டான் ஒருவன்! இந்த ஒரு நிகழ்விற்காகவே கையெடுத்து வணங்கலாம் அவனை. முச்சந்தியில் ஒரு பெண்ணை நிறுத்தி ‘வேசி! சோரம் போனவள்! மானங்கெட்டவள்! பாவம் புரிந்தவள்! சீ…தூ!’ என்று துப்பி சதை பிய்ய பிய்ய உதிரம் சொட்ட சொட்ட கல்லால் அடித்தார்கள். அந்த நிலையில் அங்கே காற்றில் பரவியிருந்த வன்மத்தைத் தாண்டி, வன்முறைக்கு தன்னிலையை இழந்து விட்டு வெறியாளர்களாய் நிற்பவர்களுக்கு எதிராக குரலெழுப்ப வேண்டுமென்றால் அவன் எப்பேற்பட்டவனாக இருக்க வேண்டும்? அதில் ஒரே ஒரு கல் குரலெழுப்பும் இவன் மீது திரும்பினால் போதும் மொத்த கூட்டமும் இவன் மீது திரும்பும் அபாயம் இருந்த போதும், ‘நிறுத்துங்கள்! உங்களில் இது வரை யார் எவரும் ஒரு பாவமும் புரிந்ததேயில்லையோ, அவர்கள் மட்டும் அவள் மீது கல்லெறியுங்கள்!’ என்று ஒருவன் அந்த நிலையில் சொல்கிறானென்றால் அவனுள்ளே எப்பேர்பட்ட சக்தி இருக்கவேண்டும்? எங்கும் நிறைந்த தனது தகப்பன் மீது எவ்வளவு ஆழ்ந்த அசைக்க முடியா நம்பிக்கை கொண்டிருந்திருப்பான் அவன்! அதற்காகவே மதிக்கிறேன் அவனை.
 
அன்பென்பது அழிப்பது அல்ல, அது அளவிட முடியா சக்தி கொண்டது!
 
இயேசு பெருமானின் உள்ளத்து உயரத்தில் அசந்து போகிறேன்! இதனால்தான் இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும் அவரது பிறந்தநாள் கொண்டாடப் படுகிறது போலும்!
 
கிறித்துமஸ் தின வாழ்த்துகள்!
 
-பரமன் பச்சைமுத்து
25.12.2016
பொள்ளாச்சி
 
Facebook.com/ParamanPage
 
 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *