வெள்ளைக்கார கணவன…

​நண்பர்கள் உட்பட மற்றவர்கள் வரமுடியா ஒரு மனிதனின் உள்வட்ட எல்லைக்குள் வரக்கூடிய உரிமை கொண்ட ஓர் உன்னத உறவு ‘மனைவி’. மனையை ஆள்பவள் என்பதால் ‘ மனையாள்’ என்று காரணப்பெயர்க் கொண்ட இவ்வுறவு பார்க்கப்படும் விதம் அந்தந்த சமூகத்தைப் பொறுத்தும் தனிமனித மனநிலையைப் பொறுத்தும் மாறுபடுகிறது.  தனது குடும்பத்திற்காக தனது விருப்பு வெறுப்புகளை அதிகம் துறந்தது இவர்களாகத்தான் இருக்கும் (ஒன்றிரண்டு பேரை தவிர்த்து விடலாம்).

மற்ற மனிதர்களிடம் மரியாதையும் மாண்பையும் காட்டும் மனிதர்கள் பலபேர் மனைவி என்று வரும்போது ‘என் பொண்டாட்டிதானே!’ என்று அவர்களது உணர்வுகளை கவனிக்க வேண்டும் என்று கூட எண்ணாமல் விட்டுவிடவே செய்கிறார்கள்.  ஒரு மனிதனின் உண்மை முகம் அதிகம் தெரிவது அவனது வீட்டிலிருக்கும் மனைவிக்கும் அவனது தாய்க்குமே.

‘நீ மொதல்ல ஒரு பொஞ்சாதியா புருஷனுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கோ. அப்புறம் என்னோட குறைகளை பத்தி பேசலாம்!’ என்று மனைவியை கண்டிக்கும் ஒரு பெரிய மனிதரை நான் அறிவேன்.  தனக்குப் பிடித்ததை மட்டுமே செய்து, அதையே மனைவியும் பிடித்ததாக ஆக்கிக் கொள்ளவேண்டும் என்று எழுதப்படாத ஒரு சட்டத்தை திணிக்கும் கணவர்கள் கொண்ட உலகில் முற்றிலும் மாறுபட்ட ஒரு கணவனை சந்தித்தேன் இன்று காலை.

ஆதித்த கரிகாலன் நிறைய பங்களித்ததாகவும், கரிகால் சோழன் என்ற பெயரில் தவறாக அவனது சிலை ஒன்று அங்கே வைக்கப் பட்டிருப்பதாகவும் ஒரு வரலாற்று ஆய்வாளர் எழுதியதைப் படித்து ஆர்வங்கொண்டு ஏகாம்பர நாதர் கோயிலின் வெளிமண்டபத்திற்கு போயிருந்தேன்.

ரத்தச்சிவப்பில் ஆடையணிந்த பெண்கள் கூட்டமொன்று காலை தரிசனம் முடித்து வெளியிலமர்ந்து தங்கள் கட்டுசோற்று மூட்டையைப் பிரித்து உண்டு கொண்டிருந்தது. அந்த மண்டபப் பின்னணியில் அத்தனை பெண்கள் ஒரு குழுவாய் செவ்வாடையில் இருந்தது கண்ணைக் கவர்ந்து கடந்து போக முடியாமல் செய்தது. செல்லிடப்பேசியை எடுத்து சத்தம் செய்யாமல் ‘கிளிக்’கிக் கொண்டேன்.

‘மே ஐ கிளிக் அ ஃபோட்டோ?’ என்பது போல குரல் கேட்டுத் திரும்பினேன். ‘நிச்சயம் பிரித்தானியன்தான்!’ என்று சொல்லக்கூடிய அளவில் இருந்த ஒரு வெள்ளைகார மனிதன்.  ‘மே ஐ கிளிக் அ ஃபோட்டோ?’ என்று இவன் அவர்களிடம் அனுமதி கேட்க, அது புரியாமல் அவர்கள் வெட்கத்தில் எழுந்து ஓட முயற்சித்தனர். சிலர் சோறு கேட்கிறான் என நினைத்து புளி சாதத்தை நீட்டினர். அவன் சிரிக்க, வெட்கத்தில் அவர்கள் சிரிக்க ரம்மியமாக இருந்தது.

‘ஹேய், டு யூ வான்ட் ட்டு கிளிக் தெம்?’ என்று நான் கேட்டபோது ஓடி வந்து ‘ஜீசஸ்….! எஸ்!’ என்றான். (‘யப்பா.. இது ஜீசஸ் இல்ல, சிவன்… சிவன் கோவில்பா!’ என்று நான் சொன்னது அவனுக்கு புரிந்திருக்காது!)

சங்கதி தெரிந்ததும் மிக மகிழ்ச்சியாய் ‘எடுத்துக்கோ எடுத்துகோ’ எனபது மாதிரி சிரித்தார்கள் அந்த அக்காக்கள்.

‘வ்வேஏர் ஆர் யூ ஃப்ரம்?’

‘இங்க்லன்டு’

‘யுவர் நேம்?’

‘ஐ ஆம் ஸ்டீவன்’

‘ஒ… ஒகே. வெல்கம் டு இண்டியா! ஈஸ் இட் அ பில்கிரிமேஜ் ஆர் பிசினெஸ் டூர்?’

தூரத்தில் தெரிந்த கோபுரத்தைப் ஆழ்ந்து பார்த்து மூழ்கிக் கொண்டிருந்த ஒரு வெள்ளைக்காரப் பெண்மணியை சுட்டிக்  காட்டினான்.

‘ஷீ ஈஸ் மை ஓய்ஃப்.  ஐ ஆம் கமிங் ஃபார் த ஃபஸ்ட் டைம். ஷீ ஈஸ் விசிடிங் செகண்ட் டைம்.’

‘ம்ம்மும்ம்!’

‘ஷீ காட் சம்திங் இன் திஸ் லேன்ட். இட் புல்ஸ் ஹர்.  ஐ கேம் ஃபார் ஹர்’

அசந்து போனேன்.  

‘யுவர் நேம்?’

‘பாழ்ழமன்… பரமன்  பச்சைமுத்து!’

‘வாட் யு டூ பாழமன்?’

‘ஐ டேக் லைஃப் லீடர்ஷிப் கிளாசஸ்…’

‘ஓ… ட்ரைனர், டீச்சர்? மே ஐ ஹாவ் அ ஃபோட்டோ!’

‘நெக்ஸ்ட் சென்னை, பாண்டிச்சேரி!’ என்று சொல்லிவிட்டு அவன் என்னை விட்டு நகர்ந்து மற்ற இடங்களை க்ளிக்கிய போதும், அந்தப் வெள்ளைக்காரப் பெண்மணி அந்தக் கோபுரத்தையே பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருந்தாள்.  எனக்கு அது விஜயநகரப் பேரரசன் கிருஷ்ண தேவராயன் கட்டிய கோபுரம், இது பல்லவர்கள் செய்த சிற்பம், இந்தக் குளம் பிற்காலச் சோழர்கள் எடுத்தது, இங்குதான் சுந்தரருக்கு கண் பார்வை கிடைத்தது என்ற தகவல்கள் எல்லாம் நினைவுக்கு வந்தன.

அந்தப் பெண்மணிக்கு அவை எதுவும் தேவையே படவில்லை. வெறும் கோபுரத்தில் தெரிந்த எதனூடே கலந்து மூழ்கிப் போனாள் அவள்.

திருக் கச்சிஏகம்பம், ஏலவார்குழலி, மகேந்திர பல்லவன் என்று எதுவும் அவனுக்கும் தேவைப்படவில்லை. தனது மனைவிக்கு இங்கு வருவது பிடிக்கிறது. அதனால் வந்துள்ளேன். மற்றதெல்லாம் போனஸ் என்பதுபோல திரிந்து கொண்டிருந்தான் அவன்.

‘எனக்கு எதுவும் வேண்டாம். என் மனைவிக்கு இது பிடிக்கும், எனக்கு அவளைப் பிடிக்கும் அதனால் வந்தேன்!’ என்ன ஒரு நிலை!  கணவன்!

:பரமன் பச்சைமுத்து

காஞ்சிபுரம்

30.12.2016

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *