‘உங்களுக்கு ஒரு ஆறு லட்சம் ரூபாய் வந்தால் என்ன செய்வீர்கள்?’

Mohammaed koya

Mohammaed koya

பத்தாயிரம் சம்பாதித்தபோது ‘ஒரு பதினஞ்சாயிரம் வந்தா கொஞ்சம் சேக்கலாம். எதாவது செய்யலாம்!’ என்று நினைத்தோம். பதினைந்தாயிரம் வந்தபோது இரண்டாம் மாதத்திலிருந்து அதுவும் பற்றாமல் போனது. ‘ஒரு முப்பதாயிரம் வந்தால் எதாவது செய்யலாம்’ என்று சொல்லிக்கொண்டோம். ஆண்டுகள் ஓடின, ஊதியங்கள் ஏறின, வாழ்வின் தேவைகள் மாறின, நாம் சொன்ன அந்த ‘இன்னும் கொஞ்சம் கூட இருந்தா நல்லா இருக்கும்!’ என்ற காரணம் மட்டும் மாறவில்லை நம்மில் பலருக்கு.

‘என்ன வேலை பாக்கறான், எவ்வளவு சம்பாதிக்கறான் பையன்?’ ‘எவ்வளோ சம்பளம்?’ என்ற கேள்விகளே முக்கியமாகக் கொள்ளப்பட்ட இதே சமூகத்தில் இருக்கும் ஒரு சாமானிய மனிதன், வாழ்வை வேறு மாதிரி பார்க்க வைக்கிறார்.

புதுசுக்கும் பழசுக்கும் இடையிலான வகை கொண்ட கட்டம் போட்ட ஒரு லுங்கி, பழுப்பு வண்ண சட்டை, வெள்ளை வெளேர் முடி, அதிகம் திறந்திராத கண்கள் – இதுதான் முஹம்மது கோயா. அமிஞ்சிக்கரை என்றழைக்கப்படும் சென்னையின் அமைந்தகரைப் பகுதியில் வெயில் மழை பனி புயல் என்று எதையும் பார்க்காமல் அலுவலகங்கள், கடைகள், சந்தைப் பகுதி என்று தனது வாடிக்கையாளர்களுக்கு தினமும் சைக்கிளில் சென்று டீ கொடுப்பவர். உக்கிர வெய்யிலில் வியர்வை வழிய டீ ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தவரை மறித்து நிறுத்தினோம்.

‘எந்த ஊரு உங்களுக்கு?’

‘புளியங்குடி. கடையநல்லூர் பக்கத்தில இருக்கு’

‘எப்படி வந்தீங்க ஐயா இந்த வேலைக்கு?’

‘அப்ப எனக்கு இருவத்திரெண்டு வயசு. எங்கூருக்காரர் ஒருத்தர் காய்கடை (காய்கறிக் கடை!) வச்சிருந்தார். சென்னையில யாரையும் தெரியாது. அவருகிட்ட வந்திட்டேன். அப்போ…இந்த ‘டவர் பார்க்’ கட்டறாங்க (அண்ணா நகர் பார்க்). அத சுத்தி எல்லாம் ஒரே காடு. ஒண்ணுமே இல்லை. கட்டிடங்கள் கட்டற வேலைங்க நடந்தது. அட.. இவங்களுக்கு டீ குடுக்கலாமேன்னு ஆரம்பிச்சதுதான் இது.’

‘இப்ப உங்களுக்கு வயசு?’

‘அறுபத்திரண்டு’

நாற்பது ஆண்டுகளாக தினமும் சைக்களில் டீ சப்ளை செய்து தனது வாடிக்கையாளர்களை உற்சாகமாக வைத்திருக்கும் அந்த மனிதரை வியந்து பார்க்கிறேன். வழியும் வியர்வையை துடைக்கக் கூட முயலாமல், ‘ அடுத்தது என்ன?’ என்பது மாதிரி பார்கிறார்.

‘காலையில் எப்ப எழுந்திருப்பீங்க?’

‘அஞ்சு மணி ஆயிறும். எழுந்து நம்ம வேலையையெல்லாம் செஞ்சிட்டு மார்கெட்டுக்கு போயி வீட்டுக்கு வேண்டியத வாங்கிட்டு வர சரியா இருக்கும்.’

‘ஃபஜர்க்கு (இஸ்லாமின் அதிகாலைத் தொழுகை) போவீங்களா? தொழுகையெல்லாம் உண்டா?’

‘வெள்ளிக்கிழமை தொழுகைக்குப்போவேன்’

‘எப்போ தொடங்குவீங்க இந்த வேலையை?’

‘ஏழு மணிக்கு கேன் எடுத்திட்டு கிளம்பினா அப்படியே போயி எல்லாரையும் பார்த்திட்டு முடிச்சிட்டு வர ஒன்றரை மணியாயிடும்.’

‘திரும்ப எப்ப கெளம்புவீங்க?’

‘மூணு மணிக்கு’

‘நடுவுல கொஞ்சம் தூங்குவீங்களா?’

‘ஒன்றரைக்கு வந்து சாப்பிட்டுட்டு திரும்பக் கெளம்பவே சரியா இருக்குமே, தூங்கறதுல்லாம் இல்ல!’

‘இரவு எப்போ படுப்பீங்க?’

‘பத்து மணிக்கு’

‘வண்டி ஏதும் வாங்கிக்கலாம்ன்னு தோணலியா உங்களுக்கு?’

‘சைக்கிள்தானே இந்த வேலைக்கு வசதி. மார்கெட்குள்ள அங்க இங்கன்னு போக முடியும்!’

‘தினமும் ரெண்டு வேளை டீ குடுக்கறீங்க. எவ்வளோ வாடிக்கையாளர்கள் இருக்காங்க?’

‘அமிஞ்சிகரை மட்டும்தான் நான் பாக்கறேன். மொத்தமா ஒரு நூறு இடம்ன்னு வச்சிக்கோங்க. தினமும் ரெண்டு வேளை குடுக்கறேன்’

‘காபி, டீ இது ரெண்டும் தருவீங்க இல்லையா?’

‘காப்பி, டீ, பூஸ்ட், ஹார்லிக்ஸ் எல்லாம்தான்!’

‘பாலைக் கொதிக்கவச்சி கேன்ல கொண்டாந்துருவேன். இங்க வந்து என்ன வேணுமோ அத குடுப்பேன். என் மனைவி பாலைக் கொதிக்கவச்சித் தந்துருவாங்க!’

‘அதிகாலையில் தொடங்கி இரவு வரை வீதியில் சைக்கிள் மிதிச்சிகிட்டு அமிஞ்சிக்கரை முழுக்க போய் டீ தரீங்க. வெளிய ஒருநாள் ஹோட்டலுக்கு போவோம் சினிமாவுக்குப் போவோம்ன்னு போவீங்களா?’

‘அதெல்லாம் எதற்கு?’ என்பது போல நம்மைப் பார்த்தவர் சொன்னார், ‘அதெல்லாம் அந்த வயசில போனோம்! இப்ப இல்ல’

‘இந்த வேலை பிடிச்சிருக்கா?’

‘அதனாலதான செய்யறோம்!’

‘இதுல என்ன கஷ்டம்?’

புரியாமல் பார்கிறார். கேள்வி புரியவில்லை என்று நினைத்து மறுபடியும் கேள்வியை வேறு மாதிரி முன் வைக்கிறோம்.

‘இந்த வேலையில இருக்கற கஷ்டம்? உங்க கஷ்டம்?’

அவருக்கு கேள்வி புரியாமல் இல்லை என்பது வந்து விழுந்த பதிலில் தெரிந்தது.

‘ஒரு கஷ்டமும் இல்லையே! இது நம்ம வேலை!’

‘உங்களுக்கு ஒரு ஆறு லட்சம் ரூபாய் வந்தால் என்ன செய்வீர்கள்?’

‘எவ்ளோ வந்தாலும் இதே வேலைதான் செய்வேன். அட்வான்ஸ் குடுத்து கடை வைச்சி இதையே ஒரு இடத்துல ஒக்காந்து செய்வேன்’

லுங்கியும் சட்டையும் கொண்டு இவர் நாற்பது ஆண்டுகளாகஅண்ணாநகர் காடாக இருந்தகாலத்திலிருந்து டீ விற்கிறார். சுயக் கட்டுப்பாடும் ஒழுக்கமும் கொண்டு தினமும் தெருவிலிறங்கி வியர்வை சிந்தி வேலை செய்யும் இவர்உண்மையில் கண்டதென்ன? இந்த எண்ணங்களை மனதில் கொண்டு அடுத்து சில கேள்விகளைக் கேட்கிறோம்.

‘ஆட்சி மாறுது, ரூபாய் நோட்டுகள் செல்லாது போன்ற விஷயங்கள் உங்களை என்ன செய்யுது?’

‘ஒண்ணும் செய்யாது. நம்ம வேலையை நாம் பாக்கணும். ஒழைக்கறோம். மேல வரலாம்!’

‘வீட்டில யாரெல்லாம் இருக்கா?’

‘ரெண்டு பொண்ணுங்க, டிகிரி படிக்க வச்சி கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சி. ஒரு பையன். அவன் படிக்கல. அவனும் வேலைக்குப் போறான். இப்போ வீட்டில நான், மனைவி, பையன்.’

‘வீடு வாடகை வீடா?’

‘இல்லை சொந்த வீடு!’

‘டீ விக்கறவன் சிட்டிக்கு நடுவுல சொந்த வீடு வச்சிருக்கேன்னு பாக்கறீங்களா?’ என்பது மாதிரி நம்மைப் பார்த்தவர் சொல்கிறார், ‘எடம் கூட வாங்கிப் போட்டுருக்கேன்! எல்லாம் இந்த டீ விக்கறதுல வந்ததுதான்!’

எதையோ நம்மில் விதைத்துவிட்டு தனது சைக்கிளை தள்ளிக் கொண்டு அடுத்த அலுவலகம் நோக்கிப் போகிறார் திரு முஹம்மது கோயா.

மடிப்புகள் கொண்ட கட்டம் போட்ட லுங்கி பழுப்பு வண்ண சட்டை வெளுத்த தலைமுடி என்று வெளியே தெரியும் இந்த சாமானிய மனிதருக்குள் வாழ்வின் அனுபவங்கள் படிந்து வலுவாக நிற்கின்றன. மாநகரின் மையப் பகுதியில் வீடு, இரண்டு பெண்களைப் படிக்க வைத்து திருமணம் முடித்த முழுமை, அறுபத்தியிரண்டு வயதிலும் தினமும் சைக்கிள் மிதித்து வேலை செய்யும் எளிமை என்று வாழும் இந்த மனிதரிடம் கற்க நிறைய இருக்கிறது என்றாலும் இரண்டு பாடங்கள் மேலே நிற்கின்றன:

ஒன்று – ‘எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது அல்ல. சம்பாதித்தை வைத்து என்ன செய்கிறோம் என்பதே முக்கியம்!’

இரண்டு – ‘எல்லா வேலையும் நல்ல வேலையே!’

அவரிடமிருந்து விடை பெறுகிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பத்திரிக்கையின் நேர்காணலுக்காக காளீஸ்வரி ஆயில் நிறுவனத்தின் உரிமையாளர் ‘கோல்ட் வின்னர்’ சாமி அண்ணாச்சியை சந்தித்தபோது அவர் சொன்ன பதில் ஒன்று நினைவுக்கு வருகிறது.

‘பரமன் தம்பீ… வேலையில தப்பான வேலை சரியான வேலைன்னு ஒண்ணும் இல்லை. ஆளுங்க தப்பானவங்களா இருக்கலாம். வேலைங்க எப்பயும் சரியான வேலைங்கதான்!’

#வளர்ச்சி சுய முன்னேற்ற இதழ்
: பரமன் பச்சைமுத்து
சென்னை
21.03.2017

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *