‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ : பகுதி – 9

nathi

nathipol_april

9. “ஏற்றிருக்கும் பொறுப்பின் மீது காட்டப்படும் விருப்பு வெறுப்புகளை தனக்கென்று தனிப்பட்ட முறையில் எடுத்துக்கொள்பவன் தன்னிலை இழந்து காயம்படுவான்”.
எவ்வளவு பெரிய பிரச்சினைகளையும் எதிர்கொண்டு மிக எளிதாக சரிசெய்து விடுகிறார்கள் சில மனிதர்கள். ஒன்றுமில்லாத சிறிய விஷயங்களைக் கூட பெரிய பிரச்சினைகளாக்கி களேபரம் செய்து விடுகிறார்கள் சில மனிதர்கள். உலகம் என்பது நான்கு விதமான மனிதர்களையும் கொண்டது. எல்லாவகை மனிதர்களையும் எதிர்கொண்டுதானே ஆக வேண்டும்!
சிவநெறித்தேவன் நீண்ட நேரமாக அங்கே காத்திருந்தான். அவனது டீமைச்சேர்ந்தவர்கள் கோபத்தில் குதித்தனர்.
‘இதெல்லாம் நமக்கு தேவையா? அவன் பெரிய புடிங்கி மாதிரி பிகேவ் பண்ணுவான். நாம எதுக்கு போயி அவன் வாசல்ல காத்து கெடக்கணும்? டெக்னிகலா ஒரு மண்ணும் தெரியாம வெறும் மைக்ரோசாஃப்ட் அவுட்லுக்கையும் வோர்டு எக்ஸல் பவர்பாயிண்ட்டயும் வச்சி குப்ப கொட்டற ஜென்மம் அது. அடுத்தவனுக்கு எப்படி மரியாதை தர்றதுன்னு கூட அதுக்கு தெரியாது. நாம யாரு, இந்த கம்பனியோட சர்வர் டெக்னாலஜி யாரால உண்மையா ரன்னாகுது, நம்மோளட பங்கு இங்க என்னன்னு ஊருக்கே தெரியும். அவன் கேபின் வாசல்ல நாம ஏன் உட்காரனும்? அதுவும் நம்ம சிவநெறித்தேவன் எதுக்கு இங்க வந்து உட்காரனும்? என்னால இத பொருத்துக்க முடியல. நான் போறேன்! அவன் வந்து ஏதாவது பேசினால், அப்புறம் நான் அவனை அடிச்சிடுவேன். இன்னும் ரணகளமா போயிடும். நான் போறேன்!’
சிவநெறித்தேவன் ராஜ்சேகருக்கு தகவல் அனுப்பிவிட்டு அவரது அறைக்கு வெளியே காத்திருந்தான். ராஜ்சேகர் அந்த நிறுவனத்தின் இணையதள சர்வர் மற்றும் முக்கிய தொழில்நுட்ப கருவிகளின் மேலாண்மையை கவனிக்கும் குழுவின் முக்கிய அதிகாரி. தொழில்நுட்பம் அதிகம் தெரியாது என்றாலும் பல நிறுவனங்களில் மேலாண்மை செய்த அனுபவத்தினால் இந்த இருக்கையில் அமர்த்திவைக்கப் பட்டவன்.
‘பிரச்சினை என்று வந்துவிட்டால்… எவ்வளவு முடியுமோ அவ்வளவு தள்ளிப் போடு. அதுவே தானாக சரியாகிவிடும்!’ என்ற கொள்கையின் வடிவமாக வாழ்பவன் ராஜ்சேகர். ‘எதிலும் மாட்டிக் கொள்ளக் கூடாது. எதிலும் மிக எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்’ என்ற அவனது கொள்கையின் தீவிரத்தால் தனக்கு வரும் மின்னஞ்சல் குறுஞ்செய்திகளுக்குக் கூட பதில் அனுப்பமாட்டான். படித்து பதில் அனுப்பினால், ‘நீதான படிச்சி ரிப்ளை பண்ணே!’ என்று கேள்வி வரும் என்பதால் அதைத் தவிர்க்க பதில் கூட அனுப்பமாட்டான்.
நிறுவனத்தின் இணையதள சர்வர் டவுன் ஆகி அதையொட்டி தானியங்கி முறையில் சில வினாடிகளில் அடுத்த மிர்ரர் சர்வர் இயக்கம் பெற்று எல்லாம் சுமுகமாக நடந்துகொண்டிருக்கின்றன. வாடிக்கையாளர்களை உலகைப் பொருத்த மட்டில் இப்படி ஒரு பிரச்சினை வந்ததே அவர்களுக்கு தெரியாது. அப்படி ஒரு கட்டமைப்பை செய்து இயங்க விட்டிருக்கிறார்கள் இவர்கள். இதில் அடுத்த கட்டமாக இந்த இணைய சேவை சர்வர்களை நவீனப்படுத்தி அதிக திறன்கொண்டதாக மாற்றியமைக்கும் மிக முக்கியமான வேலையை செய்ய முடிவெடுத்திருக்கிறார்கள்.
இருளர்களைச் சந்திக்கலாம் என்று காட்டை நோக்கிப் பயணம் போயிருந்த சிவநேறித்தேவன் சர்வர் டவுன் என்று செய்தியறிந்து பாதியில் திரும்பி பறந்து வந்து சந்திப்புகள் நடத்தி விவாதங்கள் செய்து அடுத்து செயல்படுத்த வேண்டிய முக்கிய திட்டங்கள் பட்டியல் தயார் செய்து தீர்மானங்கள் இயற்றி நிறுவனத்தின் ஒப்புதல்களை வாங்கி… இதோ செயல்பாட்டுக்கான வேலையில் இறங்கக் காத்திருக்கிறான். அதைச் செய்ய இன்னுமொரு அதிகாரி ராஜ்சேகரின் ஒத்துழைப்பும் வேண்டும்.
ராஜ்சேகரைப் பொறுத்தவரை அவன் உள்ளே காயம் பட்ட ஒரு புலி. சிவநெறித்தேவன் இந்த பொறுப்பிற்கு வருவதற்கு முன்பே ராஜ்சேகருக்கும் இந்த டீமில் இருந்த சிலருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்து வெட்டுக்குத்துக் களேபரங்கள் பல நிகழ்ந்துள்ளன. இந்த டீமின் மீது இயல்பாகவே ஒரு வெறுப்பும் காழ்ப்புணர்வும் வந்துவிட்டது ராஜ்சேகருக்கு. கூடுதலாக கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட ராஜ்சேகருக்கு தமிழனான சிவநெறித்தேவன் மீது ‘அங்கேருந்து நம்ம ஊர்ல வந்து பொழைக்க வந்த பசங்க!’ என்பதுமாதிரி ஒரு வெறுப்பும் சேர்ந்து கொள்ள, தொடக்கம் முதலே சில விஷயங்கள் தவறாகப் போயின.
அவன் செய்த சில விஷயங்களும், அதற்கு இந்த டீமில் இருந்து இவர்கள் செய்த எதிர் செயல்பாடுகளும் தீயில் நெய்யை அள்ளி ஊற்றியதுபோல பற்றி எரியச்செய்திருந்தது. கிட்டத்தட்ட ‘அக்னி நட்சத்திரம்’ திரைப்படத்து கார்த்திக் – பிரபு காட்சிகளைப் போல நடந்து கொள்வார்கள் இவர்கள் இரண்டு அணியினரும். இந்த நிலையில்தான் சிவநெறித்தேவன் தகவல் அனுப்பிவிட்டு ராஜ்சேகரது அறையின் வெளியே காத்திருந்தான். இவனது டீமின் மற்றவர்கள் குமுறிக் கொண்டிருந்தனர்.
‘அவன் வேணும்னே வரமாட்டான்! வேணும்னே காத்திருக்க வைப்பான்!’ ஆனந்த் பொங்கிக் கொண்டிருந்தான். சிவநெறித்தேவன் திரும்பி அவனை ஒரு பார்வை பார்த்ததும் அடங்கிப் போனான்.
சிவநெறித்தேவன் தனது கடிகாரத்தைப் பார்த்தான். அவனது டிசோ பத்தரை என்று காட்டியது. அவன் மூச்சை ஆழ்ந்து இழுத்தான். அவனது கண்கள் தானாக மூடிக்கொண்டன.
எப்போதோ இந்த டீமிலிருந்த யாராலோ காயம் பட்டிருக்கிறான் இந்த ராஜ்சேகர். ‘நான் யாரு தெரியுமா? என்னையா காயப்படுத்தினீங்க? நான் யாருன்னு காட்டறேன் பாரு!’ என்று காலம்காலமாக பொருமிக் கொண்டிருக்கிறான். அவன் செயல்களில் அவனை மீறி இந்த வெறுப்பும் பகைமையும் கொப்பளித்து வந்து விடுகிறது. அது இந்த டீமை பாதித்து விடுகிறது. பதிலுக்கு இவர்களும் எதையாவது செய்து விடுகிறார்கள். பகைமைத் தீ இன்னும் கொழுந்து விட்டுப் பற்றி எரிகிறது.
இருக்கட்டும். ராஜ்சேகருக்கும் எனக்கும் என்ன பிரச்சினை? உண்மையில் ஒன்றுமே இல்லை. தனிப்பட்ட முறையில் அவனுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அவன் யாரோ நான் யாரோ. இந்த பொறுப்பில் இருக்கும் நான் சில முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது, சில செயல்பாடுகளை நிறைவேற்ற வேண்டியுள்ளது. அவ்வளவே. இதுவே நான் அல்ல. சிவநெறித்தேவன் என்பவன் இந்த அப்பாச்சி சர்வரையும் மைக்ரோசாஃப்ரட் சர்வரையும் பார்ப்பவன் மட்டுமல்லவே. இதையெல்லாம் தாண்டிய ஒருவன். வேறு ரசனைகள் வேறு விருப்பங்கள் வேறு ஆர்வங்கள் உள்ளவன். நான் யாரென்று இவனிடம் காட்டவேண்டிய அவசியம் என்ன?
இது என்னுடைய ஒரு பாத்திரம். ஊழியம் செய்ய ஏற்றிருக்கும் நான் வகிக்கும் ஒரு பொறுப்பு. இந்த வேலையில் சில விஷயங்களை நான் செய்ய வேண்டியிருக்கிறது. என்னுடைய தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தாண்டி நான் இதைச் செய்ய வேண்டியிருக்கிறது. இது வேலை, இதில் அப்படித்தான் இருந்தாக வேண்டும். தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் இடத்தில் ஊழியத்தில் இருப்பவன் ஒன்று பாவ புண்ணியம் பார்க்கக் கூடாது அல்லது அந்த வேலையை விட்டுப் போய் விட வேண்டும்.
இந்த ராஜ்சேகருக்கு என்மீது தனிப்பட்ட விதத்தில் ஒரு வெறுப்பும் இல்லை. எப்போதோ எனது டீமின் மீது ஏற்பட்ட ஒரு வெறுப்பு, இப்போது என் மீது காட்டப்படுகிறது. உண்மையில் இது எனக்கான அவமரியாதை இல்லை, நான் எற்றிருக்கும் இந்த பொறுப்பின் மீது. வேலை என்று வந்து விட்டால் இதெல்லாம் இயல்புதான். பார்த்து விடுவோம்!
ராஜ்சேகர் உண்மையில் பாவம். அவன் ஏற்றிருக்கும் பொறுப்பின் கழிவுகளை எல்லாம் தன் மீதே பூசிக் கொள்கிறான். தானும் காயம் பட்டு அடுத்தவர்களையும் காயப்படுத்தி அதிக வலியில் துடிக்கிறான்.
இது என் வேலை. இந்த பொறுப்பை நான் இப்போது செய்கிறேன். இதில் நான் எதிர்கொள்ளும் விருப்பு வெறுப்புகள் உண்மையில் என்மீது அல்ல, நான் ஏற்றிருக்கும் இந்த பொறுப்பின் மீது என்று உணர்பவன் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. காயப் படுவதில்லை. அவனால் சிரித்து விட்டுக் கடந்து போக முடியும்.
மகளுக்குத் திருமணம் என்று வரும்போது விருப்பமில்லா சொந்தங்களிடமும் சிரித்துக் கொண்டே அழைப்பு விடுக்கும் தந்தைகளைப் போல செயல்படவேண்டும். இது நான் ஏற்றிருக்கும் பொறுப்பு. என்ன ஆனாலும் எதிர்கொண்டு இதை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்.
‘நான் யார் தெரியுமா?’ என்று இங்கு காட்ட வேண்டிய அவசியமில்லை. ‘நான் யார் தெரியுமா?’ என்ற குரலெழுப்பியவர்கள் யாரும் நீண்ட காலம் நின்றதில்லை. காலம் அவர்களது காலை மடக்கிப் போட்டு விடுகிறது. ‘நான் யார் தெரியுமா? விட்டேனா பார்!’ என்று பலம் காட்ட நினைப்பவர்களே பழி வாங்குதல் காயப்படுத்துதல் என்று களத்தில் இறங்குகிறார்கள்.
‘நான் யார் தெரியுமா’ என்று செயல்பட வைக்கும் ஆணவம் நம்மை வெற்றியை நோக்கி நகரவிடாது. மகிழ்ச்சியை நெருங்க விடாது. நிம்மதியை குலைத்து மன உளைச்சலை உருவாக்கும். ஐயோ… இந்த திசையிலா நான் பயணிக்க வேண்டும்? வேண்டாம்.
இது நான் ஏற்றிருக்கும் வேலை. இவர்கள் காட்டும் கோப தாபங்கள் எல்லாமும் இந்த பொறுப்பின் மீது. என் மீதல்ல. எதிர்கொள்வோம். நோக்கம்தான் முக்கியம்! ஏற்றிருக்கும் பொறுப்பு முக்கியம். வரட்டும் ராஜ்சேகர்! எதிர்கொள்வோம்!
சிவநெறித்தேவன் கண் திறந்தான். ராஜசேகரை இன்னும் காணவில்லை. தூரத்திலிருந்து ஆனந்த் இருப்பு கொள்ளாமல் தவித்தான். அவனைப் பார்த்து சிவநேறித்தேவன் ‘கூல் பேபி’ என்று சொல்லி கண்ணடித்துவிட்டு பாடினான்.
‘இமயமலை ஆகாமல் எனது உயிர் போகாது,
சூரியன் தூங்கலாம் எனது விழி தூங்காது.
வேர்வை மழை சிந்தாமல் வெற்றி மலர் பூவாது
எல்லையைத் தொடும் வரை எனது கட்டை வேகாது.
மேடு பள்ளம் இல்லாமல் வாழ்வில் என்ன சந்தோஷம்,
பாறைகள் நீங்கினால் ஓடைக்கில்லை சங்கீதம்’
அங்கிருந்தே ஆனந்த் ராஜ்சேகரின் அறையைப் பார்த்தவாறு அடுத்த வரிகளைப் பாடினான்
‘பொய்மையும் வஞ்சமும் உனது பூர்வீகமே!’
சிவநேறித்தேவன் தொடர்ந்தான்
‘ ரத்தமும் வியர்வையும் எனது ராஜாங்கமே
எனது நடையில் உனது படைகள் பொடி படுமே!’
இருவரும் சிரித்துக் கொண்டே சத்தமாக சேர்ந்து பாடினர்
‘வெற்றி நிச்சயம்.. இது வேத சத்தியம்! அடேய் நண்பா… உன்னை வெல்வேன்!’
(தொடரும்)
‘வளர்ச்சி’ தமிழ் மாத இதழில் நான் எழுதிக் கொண்டிருக்கும் கதை + தன்னம்பிக்கைத் தொடர் ‘நதி போல ஓடிக் கொண்டிரு…’
: பரமன் பச்சைமுத்து
சென்னை
30.03.2017
Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *