அந்தப் புத்தகங்கள்…

IMG-20170423-WA0143.jpg

ஏன் அதைத் தந்தார் என்னிடம் அந்த சித்தப்பா என்று தெரியவில்லை. தனக்குப் பிடித்த பகிரக்கூடிய ஒன்றை தனக்குப் பிடித்தவருக்கும் தருவோமே அப்படியிருக்கலாம். ஆனாலும் அது என் அப்போதைய வயதிற்கு மீறிய உள்ளடக்கம் கொண்டிருந்தது. மேல்நிலை வகுப்பில் படித்துக் கொண்டிருந்த ராஜவேலு சித்தப்பா ஏழாம் வகுப்பிற்குள்  நுழையும் என்னிடம் அதைத் தந்தார். முத்தையன் சித்தப்பா வாராவாரம் வாங்கிவரும் குமுதத்தில் சுஜாதா எழுதி வந்த ‘விக்ரம்’ யாரோ ஒரு எழுத்தாளர் எழுதிய ‘ஆவி ராஜ்யம்’ தொடர்கள் படித்துவிட்டு அக்காவிடமும் வருவோர் போவோரிடமும் நான் விவாதிப்பது கண்ட ராஜவேலு சித்தப்பா அதைத் தந்து ‘இதப் படிச்சு பார்றா!’ என்று சொல்லியிருக்கலாம். ‘மடி மீது விளையாடி’ என்ற மா. அன்பழகன் எழுதிய அது அந்த வயதிற்கு பெருந்தடிமனான ஒரு நூல். நகரத்திலிருந்து விடுமுறைக்கு வரும் இளைஞனையும் கிராமத்தில் கிணற்றில் குளிக்கும் ஒரு இளம் பெண்ணையும் பற்றிய முக்கோண காதல் கதை. எனக்கு என்ன புரிந்ததென்றே தெரியவில்லை. படித்தேன். படித்துவிட்டு அவரிடமும் கருணாகரன் மாமாவிடமும் சிவபெருமான் சித்தப்பாவிடமும் கதையை விவாதிப்பேன். நான் அவர்களை பார்த்த விதமும் அவர்கள் என்னை பார்த்த விதமும் மாறிப் போனது.

புவனகிரியில் இருந்த தன்னுடைய பேராசிரியர் இரா.அன்பழகனின் தமிழைப் பற்றி கருணாகரன் மாமா அதிகம் பேசிக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், என் அப்பாவின் தனி நூலகத்தில் அதே அன்பழகன் பெயர் போட்ட ‘கம்பன் கவிநயம்’ என்ற அவரெழுதிய புத்தம் புது நூலைக் கண்டதும் பரவசம் பற்றிக் கொள்ள அதைப் புரட்டத் தொடங்கினேன். ( இரா. அன்பழகன் அப்பாவின் நண்பர்).  என்ன புரிந்ததென்று தெரியவில்லை. ‘தருவனத்துள் யானியற்றும் தவ வேள்விக்கிடையூறாய்….  நின் சிறுவன் நால்வரினும் செருமுகத்துக் காத்தியென கரிய மால் ஒருவனை தந்திடிதி!’ என்ற வகையில் வரும் கம்ப ராமாயணப் பாடல்களைத் அப்படியே தவிர்த்துவிட்டு அதன் விளக்கங்களை மட்டும் தாவித் தாவிப் படித்தேன்.  கோசல நாட்டின் எருமைகளை தயரதனின் உள்ளக் குமுறல்களை மேகநாதனின் வித்தைகளை அநுமனின் பக்தியை என்ன ஏதென்று புரியாமலே படித்துக் கடந்தேன்.  அப்பாவிடமும் கருணாகர மாமாவிடமும் படித்ததை பகிர்ந்த போது உள்ளே ஒரு பரவசம் கிளர்ந்தெழும். அது பிடித்துப் போகவே  அப்பாவின் நூலகத்தில் நுழைவது நடந்தது. சித்தப்பா வைத்திருந்த பாட்டுப்புத்தகக் கட்டில் இருந்த ‘பாவத்தின் சம்பளம்’ ‘மாங்குடி மைனர்’ ‘ராஜராஜ சோழன்’கள் விழியை விரிய வைத்தன. புத்தகங்கள் என்னைத் தூக்கிச் சென்றன.

புத்தகங்கள் என்னுள்ளே பல உலகங்களை திறந்து விட்டிருக்கின்றன. என்னை வேறொரு உலகிற்கு எடுத்துப் போய் விடுகின்றன. என் நெருங்கிய நண்பர்களுக்கு தெரியும் இன்று நான் ஏற்கும் ஒரே பரிசுப் பொருள் புத்தகங்கள்தான் என்று.

‘வாசித்து வளர் வாசித்து வளர் யாசித்தாயினும் வாசித்து வளர்!’ என்று இரண்டாண்டுகளுக்கு முன்பு தலையங்கக் கட்டுரையில் நான் எழுதுமளவிற்கு புத்தகங்கள் என் வாழ்வின் அங்கமாகிப் போயின. என்னைப் பொறுத்தவரை புத்தகங்கள் ஒரு மனிதனை புத்தாக்கம் செய்கின்றன.

பல தேசங்களின் மொழி பெயர்ப்பு நூல்கள், தலைவர்களின் தத்துவஞானிகளின் சிந்தனையாளர்களின் பல புத்தகங்கள் என்னைப் புரட்டினாலும்… என் வாழ்வில் பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தாண்டி நான் புரட்டிய முதல் புத்தகங்கள் அந்த இரண்டும்தான்.  அந்தப் பழைய புத்தகங்கள் இன்று என் வீட்டில் இல்லை, மனதின் நினைவுகளில் மட்டும் கோட்டுச்சித்திரங்களாய்!

இன்று உலக #புத்தக தினம்!
பரமன் பச்சைமுத்து

23.04.2017

சென்னை

 

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *