கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார்.

Husband scolds

 Husband scolds

கேள்வி: எனது கணவர் ‘நீ வேஸ்டு!’ என்பது மாதிரியான வகையில் அடிக்கடி சொல்லி அவமானப்படுத்துகிறார். இவ்வளவுக்கும் வீட்டில் எல்லா வேலையையும் நான்தான் செய்கிறேன்.

 

பரமன்: அடிக்கடி அதையே சொல்கிறார் என்றால் இதில் கோவப்பட என்ன இருக்கிறது. மனிதன் வேட்டையாடிய காலத்திலிருந்து பெற்ற குணம் ஒன்று இன்றும் தொடர்கிறது. எதைச் செய்தால் எதிரிலிருப்பவர்களை நிலைகுலையச் செய்ய முடியும் என்று பார்த்து அதை செய்வதே அந்த குணம்.  முதல் முறை அவர் இந்த வாக்கியத்தை உங்கள் மீது பயன்படுத்தியபோது நீங்கள் சில நிமிடங்களுக்கு உணர்ச்சி வசப்பட்டோ தன்னிலை இழந்தோ காணப்பட்டிருக்கலாம். ‘இதாண்டா இவளுக்கான மேட்டரு!’ என்று ஒரு பொறி அவருள்ளே தோன்றியிருக்கலாம். விஷயம் வேலை செய்வதால் அதே வகை தாக்குதல் தொடர்கிறது, எவ்வளவு சொன்னாலும் அதற்கு எதிர்த்திசையிலிருந்து பலன் வரவில்லை என்றால் அவர் வேறு வழியை தேடுவார் அல்லது சோர்ந்து போவார்.

‘சரி, பரமன்! இப்போ நான் என்ன செய்யட்டும்?’ என்கிறீர்களா? இதோ:

அவர் ஏன் ‘நீ வேஸ்டு!’ என்று அடிக்கடித் திட்ட வேண்டும்?

ஒன்று – நீங்கள் அப்படி இருக்கலாம். உங்களிடம் செய்ய வேண்டிய முன்னேற்றம் என்ன? சுய பரிசோதனை செய்யுங்கள்.

இரண்டு – வேலைகள் எல்லாவற்றையும் நீங்களே செய்தாலும் அப்படிச் சொல்கிறாரென்றால், ‘என் மனைவி இந்த விஷயத்தில் இப்படி இருக்க வேண்டும்!’ என்று ஏதோ ஒரு விஷயத்தில் எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார். உங்களுக்குத் தெரியாத அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாத போது அவர் கோபம் கொள்கிறார். எதிர்பார்ப்பு என்ன என்று அறிய முயற்சி செய்யுங்கள்.

மூன்று – அவரது தொழில் / வேலை எப்படிப் போகிறதென்று கவனியுங்கள். அதில் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்கவும் முடியாமல் வெளியே கொட்டவும் தெரியாமல் தவிக்கும் சில ஆண்கள் அதை வீட்டில் காட்டித் தீர்த்துக் கொள்வார்கள். ‘மனுஷன் நாய் படாத பாடு படறான், இவ எப்படி நடந்துக்கறா பாரு!’ என்பதான கோபமது.

நான்கு – சிலரது வியாபாரம் / தொழில் சரியாக இருந்தாலும் கூட அடுத்த கட்ட வளர்ச்சி இல்லாத நிலை வரும்போது ஒரு சலிப்பு வரும். அதைப் போக்கிக் கொள்ள வழி தெரியாதவர்கள் இப்படி எதிலாவது காட்டி விடுவார்கள். (இங்குதான் ‘வாழ்வியல் பயிற்சிகள்’ வழி செய்து அடுத்த நிலைக்கு உந்தித் தள்ளுகின்றன)  

ஐந்து – அவரது பிரச்சினை நீங்களல்ல. அவருக்கு ஏதோ பிரச்சினை. அவருக்கு உதவி தேவைபடுகிறது. உதவி செய்யுங்கள். (யோகா போன்ற தினசரி பயிற்சிகள் இலகுவாக்கி அடுத்த நிலைக்கு உயர்த்தும்)

ஆறு: அவருக்கு மிகப் பிடித்த, அவர் மகிழ்ச்சியில் திளைக்கும், அவர் அசந்து போகும் ஒன்றை செய்யுங்கள் ( குடும்பத்துடன் சில நாட்கள் சுற்றலா செல்வது கூட பலன் தரும்).

அப்புறம் ‘எல்லாம் சரியாகி விட்டது பரமன்! நன்றி!’ என்று எனக்கு ஒரு கடிதம் அனுப்புங்கள். 

வாழ்க! வளர்க!  

#வளர்ச்சி பதில்கள்

#வளர்ச்சி சுய முன்னேற்ற இதழ்

#VALARCHI Tamil Monthly

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *