‘அறம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

aram1

aram

உப்பு நீர் சூழ்ந்த ஒரு காயல் பிரதேசத்தில் குடிக்க ஒரு சொட்டு நீர் இல்லாமல், வயிற்றுப் பிழைப்புக்கு வறண்ட பூமியில் முள் வெட்டியும் உப்பங்கழியில் கிளிஞ்சல் அள்ளியும் பிழைப்பு நடத்தும் குடும்பத்தின் குழந்தையின் உயிருக்கு பிரச்சினை என்று வந்து விட்டால், பள்ளிக் கட்டணத்திற்கே சீட்டு எடுத்து செலவு செய்யும் அவர்களால் குழந்தையை காக்க என்ன செய்ய முடியும்? அன்றாட உயிர் வாழ்தலுக்கே போராடும் அவர்களது இன்னலுக்கு காரணமானவர்கள் யார்? அவர்களை கேட்பதற்கு எவருமே இல்லையா?

தேசத்தின் சிறந்த கபடி, நீச்சல் வீரர்களாக மலர வேண்டியவர்கள் வயிற்றுப் பாட்டிற்காக உலர்ந்து கருகி விழுகிறார்களே, கேட்பது யார்?

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விடும்போதெல்லாம் அது என்ன ஏது என்று தெரியாமலேயே தங்கள் தேசம் இது ‘பெருமையை விட்டுக் கொடுத்திற முடியுமா?’ என்று மிட்டாய் சாப்பிடும் பாமர மக்களைக் காக்க வெறும் கையிற்றைத் தவிர வேறு ஏதேனும் வைத்திருக்கிறோமா? 

தலைநகரில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்தில் இறந்தால் அது உலக செய்தி, நாடே கொந்தளிக்கும். ஊர்ப் பக்கம் ஒரு ஏழைப்பெண் உயிரிழந்தால் அதை ஒருவரும் கவனிப்பதில்லை. இறப்பு என்பது இடம் பொறுத்துதான் கவனிக்கப் படுமா?

ஒரு அசம்பாவிதம் நடந்து உயிர்ப் பிரச்சினையாக இருக்கும் நிலையில், மீட்பு நடவடிக்கைகள் எடுத்து எப்படியாவது உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று சில அதிகாரிகள் போராடும்போது, பரபரப்பு செய்திகளுக்காக இப்படித்தானே இடையூறு செய்கின்றன ஊடகங்கள்?

ராக்கெட் தொழில்நுட்பத்திற்கு வளர்ந்து விட்ட தேசத்தில் இதுவரை ஆழ்துளைக் கிணறுகளில் விழுந்து விட்ட 616 குழந்தைகளின் உயிர்காக்க இன்னும் கயிற்றைத்தானே நம்புகிறோம்?

‘மூணு பாட்டில் தண்ணிக் குடிச்சிட்டண்டி, மூத்திரமே வரலடி. காது டாக்டர்கிட்ட போனா மூணு நாள் பெயின்ட் அடிச்ச காசு போயிடும்டி’ என்ற அந்த காட்டூர் மனிதனின் குரல் அரசாங்கத்திற்கு கேட்கிறதா?

 ‘எவ்வளோ வருஷம் மழையே பெய்யாத போதெல்லாம் இவ்ளோ தண்ணிக் கஷ்டம் வந்ததில்லை. என்னைக்கு இந்த வாட்டர் பாட்டில் வந்ததோ அன்னிக்கு ஆரம்பிச்சுது இந்தத் தண்ணிக் கஷ்டம்’ என்று நடு மண்டையில் சம்மட்டியாக அடிக்கும் அந்த மனிதனின் கதறலுக்கு என்ன செய்யப் போகிறோம்?

அசாதாரண சூழலில் ஒரு அதிகாரி ஒரு நல்ல மனிதனாக நின்று நல்லது செய்ய முற்பட்டால், செய்ய விடுகிறோமா நாம்? அப்படி எல்லா எதிர்ப்புகளையும் மீறி நல்லதை செய்தால் விசாரனைக் கமிஷன் வைத்து மன உளைச்சல்கள் தந்து ‘போங்கடா நான் போறேன்!’ என்று பொறுப்பை விட்டே போக வைத்து விடுகிறோமே?

வெறும் ஆழ்துளைக் கிணறு பிரச்சினை மட்டுமில்லை, சுரண்டல்களினால் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டு, தன்ஷிகா குடும்பத்தைப் போல பலர் போராடிக்கொண்டிருகின்றனர். அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம்?  

இப்படி, நெடுக கேள்விகளை வைத்து நம் முகத்தில் அறைகிற இந்த ‘அறம்’ படத்திற்கு விமர்சனம் சொல்வது அறம் அல்ல. இந்தப் படம் பல விதங்களில் தமிழ் சினிமாவின் மிக முக்கியப் படம். கொண்டாடப்பட வேண்டிய படம். நிச்சயம் பார்க்கப்பட வேண்டிய படம்.

 

    பரமன் பச்சைமுத்து

22.11.2017

Facebook.com/ParamanPage

 www.ParamanIn.com

 

 

 

 

 

  

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *