‘இண்டஸ் வ்வேஆலி தமில் சிவைலைசேஷன்’ நூல் வெளியீடு

Emerald Book launch

Emerald Book launch

வாழ்க்கை சில நேரங்களில் எதிர்பாராத இன்ப அதிர்சிகளைத் தந்து விடுகிறது.

உலகத் தமிழாராட்சி கழகத்தின் முனைவர் மருதநாயகம், தமிழ்ப் பேராசிரியர் – இலக்கியத் திறனாய்வாளர் – கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திரு. மறைமலை இலக்குவனார், சிந்து சமவெளி நாகரிகத்தின் எழுத்துக்களை ( இதர வட்டெழுத்து – பிரம்மி எழுத்து – குறியீடுகள் உட்பட) எப்படிப் படிப்பது என்று உலக பல்கலைக்கழகங்களில் கற்றுத் தரும் தமிழறிஞர் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ஆர். மதிவாணன், எமரால்டு பதிப்பகத்தின் ஒளிவண்ணன் ஆகியோரோடு சிறிது நேரம் தேநீர் பருகி அளவளாவும் நேரம் கிடைக்கப் பெற்றேன்.

எம்ஜியார் ஜானகி கல்லூரியில் நடந்த பேராசிரியர் மதிவாணனின் புதிய நூல்கள் ‘இண்டஸ் வ்வேஆலி தமில் சிவைலைசேஷன்’, ‘ இடைக்கழக சிந்து சமவெளி எழுத்து படிப்பது எப்படி?’ வெளியீடு நிகழ்ச்சிக்கு முன்னர் கிடைத்த சிறு அவகாசத்தில் கிடைத்தது இவ்வாய்ப்பு.  

ஆங்கில இலக்கியத்திலும், தமிழிலும், சமஸ்க்கிருதத்திலும் புலமை பெற்ற மறைமலை இலக்குவனார், மாக்ஸ்முல்லர் – ஹிட்லர் – கார்டுவெல் பற்றிய ஆழமான தகவல்களை சொல்லி அசத்தினாரென்றால், மாக்ஸ்முல்லர் இறுதிக்காலத்தில் தமிழை அறிந்துகொள்ளாமல் தவறு செய்துவிட்டதாக வருந்திய தகவலைச் சொன்னார் முனைவர் மருதநாயகம். தமிழை, தமிழினத்தைப் பற்றியும் சமஸ்கிருதம் பற்றியும் சுவாமி விவேகானந்தர் சொன்னவற்றை மறைமலை இலக்குவனார் கோடிட்டுக் காட்டியது உவகை தந்தது.

சங்க இலக்கியங்கள், கல்வெட்டுக் குறியீடுகள் கண்டறியும் முறை, எகிப்தின் பிரமிட் ஒன்றில் இருக்கும் குறியீட்டில் இருக்கும் தமிழ்ப் பெயர் என தான் கண்ட ஆய்வின் அனுபவங்களை கூறி (நூலில் அவை இடம் பெற்றுள்ளன) சிலப்பதிகாரம் ஏற்கனவே சொன்னதை ஒப்பிட்டு காட்டினார் பேராசிரியர் மதிவாணன். கல்வெட்டுகளை பிரம்மி வட்டெழுத்துக்களை படிப்பது எப்படி என்று இலவசமாக பயிற்சி தந்து சான்றிதழ் தரும் இவரது சேவை பெரும் பாராட்டுதலுக்குரியது.  

பொள்ளாச்சி மகாலிங்கமும், மாணவர் நகலத்தின் அருணாச்சலம் அய்யாவும் எல்லா உதவிகளும் செய்ததாலேயே நான் இந்தியா முழுக்கப் பயணித்து இந்த ஆராய்சிகளை மேற்கொள்ள முடிந்தது என்று பகிர்ந்து கொண்டார் பேராசிரியர். காலஞ்சென்ற அவர்கள் இருவரும் இருந்திருந்தால் இன்னும் மகிழ்ந்திருப்பார்கள்.  

‘இடைக்கழக சிந்து சமவெளி எழுத்து படிப்பது எப்படி?’ என்ற இன்று வெளியான நூல் விரைவில் ஹிந்தியிலும் வருகிறதாம், எமரால்டு ஒளிவண்ணன் பகிர்ந்து கொண்டார்.

அடுத்த தலைமுறையிடம் கொண்டு சேர்த்து விட ஒரு நல்ல ஆராய்ச்சி நூலை வெளியிட்ட எமரால்டு பதிப்பகத்திற்கு வாழ்த்துக்கள்!

 வாழ்க! வளர்க!

 

பரமன் பச்சைமுத்து

சென்னை

23.11.2017

 

 

 

  

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *