‘அருவி’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

images-3.jpeg

‘இந்த சமூகம் எப்படி இயங்குகிறது? இந்த சமூகம் அப்படி ஆகி விட்டதுப்பா!’ என்று சமூகத்தைக் குறித்து நிறைய கருத்து சொல்லும் மனிதர்களை, ஊடகங்களை செவிட்டில் அறைந்து ‘டேய் சமூகம் என்பது யார்ரா?’ என்று கேள்வி கேட்டு, ‘ நீயும், நானும், இதோ இந்த மனிதனும், அதோ அந்த மனிதனும் என எல்லோரும் சேர்ந்ததே சமூகம். சமூகம் என்று அடுத்தவரைக் காட்டாதே, மகனே நீதான் நீயுந்தான் சமூகம்!’ என்று ஆனித்தரமாக சொல்லும் ஒரு தவிர்க்க முடியாத படம் ‘அருவி’.

‘இதுன்னா இப்படித்தான்’ என்று ஏற்கனவே உருவாக்கிய ஒரு முன் முடிவை புருவ மத்தியில் வைத்துக் கொண்டுதான் வாழ்வின் சில சங்கதிகளை அணுகுகிறோம் நாம். இந்த முன் முடிவுகளால் நம்மால் உண்மையான நிலவரத்தைப் பார்க்கவே முடிவதில்லை. வாழ்வில் திடுமென நடந்துவிடும் விபத்துகளால் பாதிக்கப் பட்டவர்களை சரியாக பார்க்கக் கூட நாம் தயாராக இல்லை, ‘உலகம் என்ன சொல்லுமோ!’ என்ற ஒரு எண்ணத்தால் எப்படியெல்லாம் இயங்குகிறோம், செயல்படுகிறோம் என்பதை பொட்டிலடித்துச் சொல்கிறது படம்.

‘தளபதி’ படத்தில்
‘ஏய் எவன்டா அது?’ என்று சினத்தில் கொதிக்கும் மம்மூட்டியிடம்
‘இந்த ஊர்ல நெறைய்ய ஆம்பிளைங்க இருக்காங்க!’ என்று பானுப்பிரியா பாத்திரம் குமைந்து இறுகி சொல்லும் ஒரு காட்சி வரும். அந்த உணர்வையே படத்தில் ஒரு இழையாகப் பயன்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் அந்த வரவேற்பரையில் எமிலி அலற அலற அந்த இருக்கையில் ‘படீர் படீர்’ என்று விழும் அந்த அடி, ‘இவ்வளவு பெரிய சமூகத்தில் ஒரு திருநங்கையிடம்தான் ஒரு இளம்பெண் பாதுகாப்பாய் இருக்கிறாள்’ என்று அறிய வரும் போது நம் மீதே படீரென விழுகிறது.

‘எது மகிழ்ச்சியான வாழ்க்கை?’ என்று அருவி சொல்வதில் தொடங்கி, தொலைக் காட்சி இயக்குனருக்கு நடக்கும் அந்த நிகழ்வு, அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் நம்மை நிமிர்ந்து உட்கார்ந்து பார்க்க வைக்கின்றன.

காமெடி, கலாட்டா, பயம் என கலந்து கட்டி அடித்தாலும் எடுத்துக் கொண்ட சங்கதியைத் தாண்டி வெளியே போகாமல், கமர்சியல் கலந்தால்தான் படம் ஓடுமென்று கண்டதை கலக்காமல், எடுத்துக் கொண்ட நீரோட்டத்தை அருவியாகப் பாய விட்ட துணிச்சலுக்காகவே இயக்குனரை கட்டியணைத்து ‘லவ் யூ’ சொல்லலாம்.

யாரிந்த பெண் அதிதி பாலன்? அருவியாகவே மாறி ரசிக்க வைக்கிறார், சிரிக்க வைக்கிறார், அழ வைக்கிறார். தமிழ் சினிமா சரியாகப் பயன்படுத்திக் கொள்ளட்டும் இவரை. ‘ யாரோட ஜட்டிக்கும் ஆசப் படமாட்டா இந்த எமிலி!’ என்று அறிமுகமாகும் அந்தக் காட்சியிலிருந்து இறுதி வரை அசத்துகிறார் எமிலி.

இசை படத்தோடு நம்மை ஒன்ற வைக்கிறது.

அருவி கைகளால் முகத்தை மூடி கண்களை மூடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொள்ளும் அந்த நேரத்தில் செட்டிலிருக்கும் ஒருவர் சுதாரித்து இயங்கினால் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாமே, இறுதிக்கு முன் வரும் மருத்துவமனைக் காட்சிகள் ‘சேது’வைப் போல் இருக்கிறது போன்ற விஷயங்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு இந்தப் படத்தைக் கொண்டாடலாம்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: அருவி – அருமை. நிச்சயம் பாருங்கள்.

: திரைவிமர்சனம் – பரமன் பச்சைமுத்து

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *