வெற்றி வாகை: பரமன் பச்சைமுத்துவின் புதிய நூல் ‘வெற்றி வாகை’

vetrivagaiAdvt - Copy

vetrivagaiAdvt

முன்னுரை:

இரண்டாம் வகுப்புப் படிக்கும் போது எப்படியாவது அப்பாவிடம் இருபது பைசா பெற்று ஓடிச்சென்று குணசேகரன் கடையில் அதைத் தந்து கை நிறைய தேன் மிட்டாய் வாங்கி வாயில் போட்டு அது கரைவதை உணர்வது வெற்றியாகப் பட்டது.

வளர்ந்த போது, வெள்ளம் புரண்டு ஓடும் மானம்பாத்தான் வாய்க்காலில் மதகின் முன்னே விரைந்து வரும் நீரை எதிர்த்து நீச்சலடித்து யார் நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருக்கிறார்கள் என்று பார்ப்பது வெற்றியாகப் பட்டது.

கல்லூரி முடித்தபின்னே நகரில் ஒரு நல்ல வேலை பெற்று மாதச் சம்பளம் வாங்குவது வெற்றியாகப் பட்டது.

கணினிப் பொறியாளனானதும் மைக்ரோசாஃபட் ஆன்லைன் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவது வெற்றியாகக் பட்டது.

காதலித்த பெண்ணையே கை பிடிப்பது வெற்றியாகப் பட்டது. மகள்கள் பிறந்தது வெற்றியாக தெரிந்தது. அவர்களுக்கு பள்ளியில் சேர்க்கை கிடைத்தது பெரும் வெற்றியாகத் தெரிந்தது.

நேற்று நூறு பேர் முன்னிலையில் நின்று பேசுவது வெற்றியாக தோன்றியது. இன்று நாலாயிரம் பேர் முன்னால் நின்று பேசுவது வெற்றியாக தெரிகிறது.

அறிந்தேயிராத அமெரிக்காவிற்குத் தனியே
பயணித்து வேலை பார்க்கச் சென்றது வெற்றியாய் தெரிந்தது. இன்று கிழக்கு ஆப்பிரிக்காவின் சிசெல்சு தீவிற்குச் சென்று வாழ்வியல் பயிற்சி வகுப்பு எடுத்தது வெற்றியாகத் தெரிகிறது.

ஒரு வகையில் வாழ்க்கை என்பது வெற்றிகளால் நிறைந்துள்ளது.
திரும்பிப் பார்க்கையில், ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொன்று வெற்றியாகத் தெரிகிறது! ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொன்று வெற்றியாகத் தெரிகின்றது.

வெற்றி என்பது என்ன? உண்மையான வெற்றி என்பது எது? மிக வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் சிலர் திடீரென்று சரிந்து விழுந்து விடுகின்றனரே! வெற்றியை தக்க வைத்துக் கொள்ள ஏதேனும் விதிகள் உள்ளனவா? வெற்றி விதிகள் எதுவும் இருந்தால், அவற்றை நம் வாழ்வில் சரியாக செலுத்தி வெற்றியாளனாக உச்சியில் நிற்கலாமே! ஒரு முறை அல்ல, தொடந்த வெற்றிக்கான வெற்றி விதிகள் எங்கே கிடைக்கும்?

இந்த எண்ணங்கள் மேலெழ இறையருள் துணை புரிய, எங்கிருந்தோ மணிவாசகர் பதிப்பகம் என்னிடம் கை குலுக்க, இதோ நூலாக உருவெடுத்து நிற்கிறது ‘வெற்றி வாகை’

நூல்கள் கொஞ்சம் வாசிப்பவனென்றாலும் நான் நூல்களில் கற்றதை விட மனிதர்களிடமே அதிகம் கற்கிறேன். உண்மையில் நூல்கள் மனிதர்களைப் கவனித்துக் கற்க கற்றுக் கொடுக்கின்றன.

மனிதர்கள் அனுபவங்களின் தொகுப்பு. பிறந்ததிலிருந்து இன்றைய நாள் வரை பல சூழல்களை பல்வேறு மனிதர்களை கண்டு வந்திருக்கும் ஒவ்வொரு மனிதனும் ஒரு வகையில் ஒரு நடமாடும் பல்கலைகழகம்.

வாழ்வியல் பயிற்சியாளனாக ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழ் ஆசிரியனாக நிறைய மனிதர்களைச் சந்திக்கும் பேற்றை வாழ்க்கை எனக்கு வழங்கியிருக்கிறது. என்னிடம் வாழ்வியல் கற்க வரும் மனிதர்களின் மூலம் நான் கற்றது அதிகம். அப்படி நான் சந்தித்த மனிதர்களிடம் நான் கற்ற சங்கதிகளை வைத்தே இந்த நூலை நெய்துள்ளேன்.

பயந்த குடும்பத்தலைவியாக மலர்ச்சி வகுப்பிற்கு வந்த பெண்மணி சில ஆண்டுகளில் குடும்பத்தையும் பராமரித்து கூடவே சில கோடிகள் வெல்லும் தொழில் முனைவோராய் மாறி நின்றது, அன்றாடங்காய்ச்சிக்கு அடுத்த நிலை என்றிருந்தவன் அடுத்த சில ஆண்டுகளில் ஆற்றங்கரையில் வீடு கட்டினான் ஆறு பேரை படிக்க வைத்தான் என்பதை பார்த்தது என சிறிதும் பெரிதுமாய் பல மனிதர்களின் வெற்றியை பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

‘இவற்றிலிருந்து கற்றவற்றை வெற்றி விதிகளாக்கி எளிதில் படித்துவிடும் வகையில் ஒரு நூலாக்கி இதை நிறைய மக்களிடம் கொண்டு சேர்த்தாலென்னா?’ என்று எண்ணம் என்னை உந்தவே, இறையருள் துணையோடு நூலாகி நிற்கிறது ‘வெற்றி வாகை’
இதை வெளியிடும் மணிவாசகர் பதிப்பகத்தாருக்கும், அன்பர் திரு மீனாக்ஷி சோமசுந்தரம் அவர்களுக்கும் நன்றி.

இந்த நூலை இதில் பரிந்துரைத்தபடி வாசியுங்கள். முழுதும் முடித்த பின்னே, இதிலிருந்து இரண்டே வெற்றி விதிகளை தொடர்ந்து நீங்கள் செயல்படுத்தினாலும் கூட வெற்றி வாகை தொடர்ந்து உங்கள் மார்பை அலங்கரிக்கும். இந்த ‘வெற்றி வாகை’க்கு வெற்றி கிடைக்கும்.

வெற்றி வரட்டும்! வெற்றி தொடரட்டும்!

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,
பரமன் பச்சைமுத்து
22.12.2017

…..

சென்னைப் புத்தகக் கண்காட்சியில்…
விரைவில்…..

www.ParamanIn.com

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *