அயலூர் சினிமா: ‘பரத் அனே நேனு…’ : பரமன் பச்சைமுத்து

unnamed.jpg

ஒரு மாநிலத்தில் ஆட்சியையும் பெரிய கட்சியையும் தங்களிடம் வைத்திருக்கிறார்கள் உடன்பிறவா சகோதரர்கள் இருவர். திடீரென உடல்நலம் குன்றி மருத்துவமனைப் படுக்கையில் வீழ்ந்த முதல்வர் நண்பர் இறந்து விட , கட்சித் தலைமையை கையில் வைத்திருக்கும் பிரிய சிநேகிதருக்கு நெருக்கடி வருகிறது. பிரச்சினையை சரி செய்யலாம் என்று மறைந்த முதல்வரின் அபிமானத்திற்குரியவரைத் தேர்ந்தெடுத்து தனது கைப்பாவையாக இருக்கட்டுமென்று எண்ணி முதல்வர் நாற்காலியில் அமர வைக்கிறார் அவர. அரசியல் கத்துக்குட்டியாய் தெரிந்த, முதலில் மறுத்து பின்பு ‘பரத் ஆகிய நான்…’ என்று பிரமாணம் எடுத்துப் பதவியில் அமர்ந்த அந்த நபர் அநாயாசமாக ஆட்சியில் அமர்ந்து காரியங்கள் செய்ய, அதிர்ந்து போகிறது கட்சித் தலைமை. விடுவார்களா கட்சியின் மற்ற தலைவர்கள், என்ன செய்தது கட்சித் தலைமை, சமாளித்தாரா அந்த தற்காலிக முதல்வர்… போன்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் அரசியல் களத்தில் இத்துணூண்டு காதல் மற்றும் மசாலா சேர்த்து கதம்பம் செய்த திரைக்கதையில் வந்திருக்கும் படம் ‘பரத் அனே நேனு…’

படையப்பா காஸ்ட்யூமில் முதல்வராக நம் சரத்குமார், கட்சித் தலைவராக நிதானமாக நிறுத்தி நடிக்கும் பிரகாஷ் ராஜ், எதிர்கட்சித் தலைவராக கன்னட நடிகர், முதல்வரின் மனைவியாக கன்னட சித்தாரா, மலையாள மது என பன்மொழிக் கலைஞர்கள் இருக்கிறார்கள்.

‘பிரின்ஸ் மகேஷ் பாபு’ ‘சூப்பர் ஸ்டார் மகேஷ்’ ஆக ஜொலிக்கிறார். லண்டன் ஹார்வார்டு பல்கழகத்தில் படித்து வந்து ஆந்திர மாநிலத்தின் ‘சிஇஓ’ முதல்வராக செயல்படுகிறார். ‘ஒக்கட்டி சாங்கு, ஒக்கட்டி ஃபைட்டு’ இல்லையென்றால் தெலுங்குப் படமாக இருக்காதேயென்பதால் சேர்க்கப் பட்ட சண்டையும் பொருந்திப் போகிறது. காரின் இந்தப் பக்கம் அடித்தால் அந்தப் பக்கம் கதவுகளை பிய்த்துக் கொண்டு நாலு பேர் தெறித்து விழும் அக்மார்க் தெலுங்கு சண்டைக் காட்சிகள். மகேஷ் பாபு அழகாக இருக்கிறார்.

‘நோ என்ட்ரி’யில் வாகனம் ஓட்டிப் பயணித்தால் இருபத்தைந்தாயிரம் அபராதம் என்ற சட்டத்தைப் பற்றி சட்டசபையில் பேசும் போது, போகிற போக்கில் அரசியல்வாதிகளை கழுவி ஊற்றுகிறது படம்.

பாதிப் படத்திலேயே ‘இவர்தான் கொன்றிருப்பார்!’ என்று இறுதிக் காட்சியை யூகிக்க முடிகிற அளவில் உள்ள திரைக்கதை, எட்டு மாதம் பதிமூன்று நாட்கள் முதல்வராக இருந்தவர் ஆறுமாதத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற விதியை அப்படியே விட்டுவிட்ட லாஜிக் ஓட்டை போன்ற குறைகள் பலவீனங்கள்.

ஆங்கில சப் டைட்டில்களோடு படத்தை வெளியிட்டு புண்ணியம் கட்டிக் கொண்டார்கள்.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘பரத் அனே நேனு’ – சினிமா ரசிகர்களாகிய நாம்… சில விஷயங்களை பொறுத்துக் கொண்டால்… பார்க்கலாம்.

– திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *