திரை விமர்சனம் – ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ : பரமன் பச்சைமுத்து:

avengers

avengers

 

 

ஏழு கடலுக்கு அப்பால், எட்டாவது மலையையொட்டிய பள்ளத்தாக்கில், கோமதி நதியின் முகத்துவாரத்தைத் தாண்டி இருக்கும் சமவெளியையொட்டிய பகுதியில் வாழும் கந்தரவர்களின் ஒருவனின் நெற்றியில் என உலகின் நான்கு சக்தி மிகுந்த கற்கள் இருக்கின்றன. எப்படியாவது அந்தக் கற்களையெல்லாம் எடுத்து வந்து தங்கக் காப்பில்  பதிந்து கொண்டு அதை வலது கையில் அணிந்து கொண்டால், அவனால் ஈரேழு உலகத்தையும் ஆள முடியும். அதற்காக அந்த (நம்பியார் / பி எஸ் வீரப்பா / அசோகன்) மந்திரவாதி எதையும் செய்வான், எல்லாக் கொடுமைகளையும் செய்வான். அந்த மரகத வைர மணிகளுக்காக சொந்த மகளையும் கொலை செய்வான். அவனது காரியங்களைத் தடுக்கும் நல்லவர்களை துன்புறுத்தவும் செய்வான். இது சிறுவயதில் நீங்கள் பார்த்த ஜெமினி கணேசன் / எம்ஜியார் நடித்த ‘மாயா பஜார்’ வகைப் படக்கதை என்று நினைத்தீர்களா? இல்லை. இது தற்போது திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும் மார்வெல் காமிக்ஸின் ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ ஆங்கிலப்படத்தின் கதை.

இந்தக் கதையில் தானோஸ் என்று நவீன சக்தி மந்திரவாதி, கேமோரா என்ற மகள், வேறு வேறு கிரகங்கள், அயர்ன் மேன் டோனி ஸ்ட்ரீக், பெப்பர் போட்ஸ், ஸ்டார் லார்ட், கேப்டன் அமெரிக்கா, தோர், ப்ளாக் விடோ, டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், ஸ்பைடர் மேன், வாண்டா மேக்சிமோஃப், நெபுலா, ஹல்க், லோகி, சாம் வில்சன், ப்ளாக் பேந்த்தர், மேண்ட்டிஸ் என உலகைக் காக்கப் போராடும் மார்வல் காமிக்ஸின் எல்லா நல்ல பாத்திரங்களையும் நுழைத்து நல்ல சண்டைகள், அங்கங்கே உணர்ச்சிகள் வைத்தால் அது ‘அவென்ஜெர்ஸ் இன்ஃபினிடி வார்’

சிறு குழந்தைகளின் நாடியைப் பிடித்துப் பார்த்து படத்தை செய்திருக்கிறார்கள். பெரியவர்களான நமக்கே பிடிக்கிறது.

‘நான் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளாக இருக்கிறேன். எனது சகோதரன் லோகி இறந்து விட்டான்’ என்று தோர் பேசும் வசனங்களும், தனது சுத்தியலை எப்படித் தொலைத்தான் அவன், ஏன் அவனுக்கு புது சக்தி கோடாரி, ஹல்க் ஏன் கோபம் கொண்டு பச்சை வண்ண பேருருவம் எடுக்க மறுக்கிறான், அயர்ன் மேன் ஏன் தொலைபேசியில் பெப்பர் போட்ஸ்ஸிடம் பேசும் போது உணர்ச்சி பொங்க நிற்கிறார், ‘என்னது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு லோக்கியை அனுப்பி உலகத்திற்கு இடையூறு தந்தது தானோஸா!’ ‘என்னைப் பார்த்து நீ ஹேர் ஸ்டைல் மாத்திட்டியா?’ ‘நீ மட்டும் என்னைப் பார்த்து தாடி வச்சிகலையா’ என்று தோரும் கேப்டன் அமெரிக்காவும் பேசிக்கொள்வது போன்ற சங்கதிகளும் இவ்வளவு ஆண்டுகளாய் வெளிவந்த மார்வெல் காமிக்ஸின் கதாபாத்திரங்களை பாத்திருந்தவர்களுக்கு எளிதில் புரியும். முந்தைய படங்கள் எதையும் பார்க்காமல் நேராக இந்தப் படத்தை பார்ப்பவருக்கும் பிடிக்கும் வண்ணம் எடுத்தது அருமை.

‘ஐயோ, ராபர்ட் டௌனி ஜூனியர் பாத்திரத்தை என்னவோ செய்கிறார்கள்!’ என்று பலகாலமாய் பார்த்துப் பழகியவர்கள் பதைபதைக்கும் முன்னேயே பல வேலைகளை செய்து முடித்து விடுகிறார்கள் திரைக்கதையில். அடுத்த பாகத்தில்தான் மீதி வருமாம்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ – குழந்தைகளுக்கான ஸ்கைஃபை அட்டகாச படம், பல பெரியவர்களுக்கும் பிடிக்கும்.

  • திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

 

 

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *