புத்தரின் பல்

புத்தர் இறந்த பிறகு அவரது நினைவாக இருக்கட்டுமென அவரது பல்லை புத்த பிக்கிணி ஒருவர் எடுத்து வைத்ததாகவும், வெகு ஆண்டுகளுக்குப் பிறகு
‘இந்திய நாட்டினருக்கு புத்தரின் மகத்துவம் புரியவில்லை, மதிக்கத் தெரியவில்லை, மதிக்கப்படும் இடத்தில் இது இருக்கட்டும்!’ என்று கூறி தந்த குமருவும் ஹேமமாலாவும் இலங்கை மன்னனிடம் அந்தப் பல்லைத் தந்ததாகவும் இலங்கையில் நம்பப்படுகிறது. அந்தப் பல்லை துதித்துப் பெற்றுக் கொண்டவன் விஜயவாகு சோழன் என்றும், சிங்கள மன்னன் என்றும் இரு வேறு கதைகளும் உண்டு.

ஒன்றனுள் ஒன்றாக இருக்கும் ஏழு தங்கப் பேழைக்கு உள்ளே வைத்து பாதுகாக்கப்படும் அந்தப் பல், இப்போது கண்டி நகரின் மையப் பகுதியில் இருக்கும் ‘தலதா’வில் (விகாரை) வைத்து மூன்று கால வாத்திய உச்சாடனங்களோடு வழிபடப்படுகிறது. நரேந்திர மோடி வந்து வழிபட்டது இதைத்தான்.

‘தனக்கு இருக்கட்டுமென்றுதானே அவரது பல்லை எடுத்தாள் அந்தப் பிக்கிணி. அது இங்கே இருக்கிறதென்றால், சீனாவிலும் சிங்கப்பூரிலும் இருக்கும் புத்தரின் பற்கள் யார் எடுத்தது?’ என்ற கேள்விகளோடேயே தொடங்கிய நடை, தலதாவின் அருகில் செல்ல செல்ல மாறிப்போனது.

‘மனித குலத்தில் உதித்த எப்பேர்பட்ட மாமுனிவன் புத்தன்!’ ‘அவனது எச்சம் இங்கிருக்கிறது. அதன் அருகில் நாம் இருக்கப் போகிறோம் சில கணங்கள்’ என்ற வகை உணர்வுகளால் பேச்சு அறுந்த உள்ளம் குவியம் கொள்ளத் தொடங்கியது. புத்தரின் பல் இருந்த பேழையை தூரத்திலிருந்து மட்டுமே தரிசிக்க முடிந்தது.

அதற்கப்புறம் நடந்தது என் வாழ்வின் மறக்கவொண்ணா அனுபவம். எழுதி விளிக்க இயலாது எழுத முயற்சிப்பது மடமையென்றாலும் இந்த நாளை குறித்துக்கொள்ள விரும்பி பதிந்து கொள்கிறேன். வரிசையில் நின்று பேழையை தரிசித்த பின்னர் கண்மூடி வெறுமனே இருக்க விருப்பம் வர, நகர்ந்து வந்து பேழைக்கு எதிர்ப்புறம் மண்டியிட்டு (வஜ்ராசனம்) அமர்ந்த பின்னே எனக்கு ஏற்பட்டது ஓர் உன்னத அனுபவம். சிதம்பரம் கோவில் படிக்கு அருகில், திருவரங்கம் சக்கரத்தாழ்வார் சன்னதியில், டோக்கியோவின் த்சுஜிகாவோகாவில் ஜென் மடத்தில் ஏற்படும் அதே இணைப்பு, அதே அனுபவம், இல்லை அதைவிடவோர் ஆழ்வனுபவம்.
(புத்தர் சிலையின் இடப்புறத்தில் சங்குசக்கரதாரியாக விஷ்ணுவின் சிலையை வைத்து வழிபடுகிறார்கள். புத்தமதத்தைக் காப்பவராக விஷ்ணு இங்கு வழிபடப் படுகிறார்)

அது புத்தரின் பல்லா, மத இனச் சம்பிரதாயங்கள் ஊறிப் போன இடமா என்பது பற்றியல்ல, அந்த இடத்தின் அதிர்வு என்னை இழுக்கிறது. ஆசையை ஒழி என்று சொன்னவனின் பல் இருப்பதாக நம்பப்படும் அந்த இடத்திற்கு திரும்பவும் வர ஆசை வருகிறது.

– பரமன் பச்சைமுத்து,
ரம்பொட, சிறீலங்கா
17.05.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *