‘காலா’ – திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

kaala-3600x2025-rajnikanth-karikaalan-tamil-telugu-hindi-4k-2018-8104

kaala-3600x2025-rajnikanth-karikaalan-tamil-telugu-hindi-4k-2018-8104

 

 

சிவப்புத் திலகம் தீட்டிக்கொண்டு ‘தூய்மை மும்பை, ஒரே மும்பை’ ‘டிஜிட்டல் மாநிலம்’ என்று இயங்கும் ராமனை துதிக்கும் அதிகார வர்க்கத்தினர், அவர்களது கண்ணிற்கு கருப்பாக அழுக்காக தெரியும் ராவணனையும் அவனது மக்களையும் அழித்து அவர்களது நிலத்தை கைக்கொள்ள முயற்சிக்கிறார்கள் என்ற களத்தில் திரைக்கதை பின்னி  ரஜினியையும் நானா படேகரையும் வைத்து ப.ரஞ்சித் தந்திருக்கும் படம் – ‘காலா’.

இது இயக்குனர் ரஞ்சித்தின் படம் என்பதைப் புரிந்து கொண்டு இயக்குனரின் நடிகராக வந்திருக்கும் ரஜினி, படம் முழுவதிலும் வியாபித்து, கொடுத்த பாத்திரத்தில் சிறந்ததை தந்திருக்கிறார். காதலியைக் கண்டதும் தவிப்பு, ‘ஏய் லெனின், எங்கடா போனா…சரீனா வெயிட் பண்றாங்க இல்ல!’ என்று பரபரப்பு, அதற்கு நேர்மாறாக, ‘என் மனைவிக்கு நான்தான் உலகமே! இனிமே…’ என்று பகிர்தல், ‘ஏய்… நீ நெஜமா அந்த பெருமாள லவ் பண்ணே?!’ என்று தவிப்பு, ‘ஐ லவ் யூ!’ என்று கொஞ்சல், ‘அதே ரெண்டடிதான் இந்தப்பக்கம்!’ என்று காலைத் தூக்கி வைத்தல் என படம் முழுக்க ரஜினி அசத்தலாய் தந்திருக்கிறார். அதுவும் குறிப்பாய் அந்த காவல் நிலையத்தில் வரும், ‘டேய்.. யார்ரா இவரு?’ காட்சி அதகளம்.  தியேட்டர் குலுங்குகிறது.

சமுத்திரக்கனி வரும் எல்லாக் காட்சிகளிலும் ‘குடி உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்’ வரிகள் போடப்படுகிறது. நிறைய ஜோக்குகளும் ‘ஒற்றே அடி!’ என்று சொல்லிக்கொண்டும் அழகாகப் பொருந்திப் போகிறார்.

முதல் பாதியை ரஜினி எடுத்துக்கொள்கிராறென்றால், இரண்டாம் பாதியை நானா படேகர் எடுத்துக் கொண்டு வலுவாக நிற்கிறார்.  இவர்களுக்கு நடுவில் கிடைக்கும் கொஞ்ச நேரத்தில் அடித்து ஸ்கோர் செய்கிறார் ஈஸ்வரி ராவ். சரீனா, லெனின், அந்தப் போலீஸ், சிவாஜி ராவ் கெய்க்வாட், வாளையன், மராட்டியப் பெண், செல்வம், கிரிக்கெட் ஆடும் பேரன் என எல்லாப் பாத்திரங்களும் சிறிதே வந்தாலும் நினைவில் நிற்கும் படி வைத்திருக்கிறார் ரஞ்சித்.

‘கண்ணம்மா’ ‘தில்லாட்டாங்கு’ இரண்டிலும் சந்தோஷ் நாராயணன் நிற்கிறார்.

நீலம், கருப்பு, சிவப்பு வண்ணங்கள், அம்பேத்கார், புத்தர், மராத்திப் பெண், ராவண காவியம் ஆகிய குறியீடுகளின் வழியே இது வெறும் தமிழர்களின் போராட்டம் அல்ல, அதைத் தாண்டியது என்று ப.ரஞ்சித் உணர்த்துகிறார் போல.

ரஜினி அறிமுகமாகும் காட்சி, ‘தொட்டுட்டே இல்ல, பாத்துக்கறேன்!’ என்று சொல்லிவிட்டு மனைவியோடு காரில் போகும் காட்சி என படம் முழுக்க மக்கள் எளிதாக யூகிப்பதை தரவே கூடாது என்று முடிவில் இருந்திருக்கிறார் ரஞ்சித்.

ரஜினியை வைத்து சக்தி வாய்ந்த ‘காலா சேட்’டாகப் பண்ணும்போது இன்னும் நாலு மாஸ் சீன்கள் வைத்திருக்கலாம், படத்தின் இறுதி முடிவை கொஞ்சம் வேறு மாதிரி காட்சிப்படுத்தியிருக்கலாம் போன்ற நெருடல்கள் இருந்தாலும், மற்ற சங்கதிகளுக்காக பார்க்கலாம்.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்:  ‘காலா’ – ராவண காவியம், ரஞ்சித் படம், பார்க்கலாம்.

 

  • திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *