பெண் குயில், பட்டாம் பூச்சி… கருவேப்பிலை மரம்

images-7.jpeg

குயிலென்றால் கருப்பாயிருக்கும், கன்னங்கரேலென்று இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நாற்பது ஆண்டுகளாக இப்படி நினைத்தே வாழ்ந்திருக்கிறேன் என்று நினைக்கையில் கொஞ்சம் அவமானமாக இருக்கிறது, வெட்கம் பிடுங்கித் தின்கிறது இன்னும் என்னை.

‘பெண் குயில் பாத்திருக்கீங்களா? அங்க பாருங்க, வந்து உட்காந்திருக்கு!’ என்று பால்கனிக்கு வெளியே பார்த்தவாறே அத்தை அவசரத்தை குரலில் ஏற்றி அதேசமயம் அதிராமல் மெல்லியதாய் கூப்பிட்ட அன்று வரை எனக்குத் தெரியவில்லை. ‘குயில்ல என்ன பெண் குயில், ஆண் குயில்… குயிலு குயில்தானே!’ என்பது மாதிரி வந்து நின்றேன். அவர் கை காட்டிய திசையில் இருப்பதைப் பார்த்ததும், என் புருவங்கள் நெற்றிக்கு மேலே இருக்கும் தலை முடியைத் தொடுமளவிற்கு ‘பொலுக்’கென என் விழிகள் விரிந்தன. வாய் தானாக பிளந்து விழுந்திருக்குமென நினைக்கிறேன். அப்படியொரு பறவையை நான் பார்த்ததேயில்லை. அவ்வளவு அழகு. காப்பிக்கொட்டை வண்ணத்தில் புள்ளி புள்ளியாய் போட்ட உடையணிந்த ஒரு அழகிய பெண்ணைப் போல இருந்தது ஒரு பறவை. அழகிய பெண்ணை ஏன் குயிலென்கிறார்கள் என்றும், ‘குயிலே… குயிலே… பூங்குயிலே..’ என்று ஏன் பாடலெழுதினார்கள் என்றும் புரிந்தது. அசந்து போனேன் அந்தக் காட்சியில். அதன் அருகிலேயே இன்னொரு கிளையில் கன்னங்கரேல் குயில்.

‘தோ… பாருங்க, அது ஆண் குயில். இதுதான் பெண் குயில்’ என்று அத்தை மறுபடியும் சொன்னதை நம்பவும் முடியவில்லை. மறுக்கவும் முடியவில்லை. மருண்டு மருண்டு புள்ளிப் பறவை அமர்ந்திருக்க, ‘நான்தான் காவல், எச்சரிக்கையா இருக்கேனாக்கும்!’ என்பது போல எல்லாப் பக்கமும் தலையை திருப்பி்த் திருப்பி பார்த்து எதற்கோ தயாரானது கருங்குயில். நொடிப்பொழுதில் பறந்து கீழ்க்கிளையில் இறங்கி கருவேப்பிலைப் பழத்தைக் கொத்தி அலகில் கவ்விக் கொண்டு பெண் குயிலிடம் வந்து, கிட்டத்தட்ட ஆங்கிலப் படத்து ‘ஸ்மூச்’ போல அலகுக்குள் அலகு வைத்து ஊட்டியது.

‘பாத்தீங்களா! பெண் குயிலுக்கு ஆண் குயில் ஊட்டுது!’ என்று அத்தை சொன்னபோது உண்மையென்பதை கண்களை விலக்காமல் தலையசைத்து ஒத்துக் கொண்டேன். எங்களுக்குக் கேட்காமல் என்னவோ பேசிக்கொண்டன போலும் இரண்டும். இறக்கைகள் அசைந்தன சரேலென பறந்து விட்டன இரண்டும். பறவைகள் வந்து போன சுவடே தெரியாமல் கருவேப்பிலை மரம் எப்போதும் போல அமைதியாய் நின்று கொண்டிருந்தது. நான் மட்டும் பெண் குயில் பார்த்த பரவசத்தை வைத்துக் கொண்டு திரிந்தேன் இரண்டு நாட்கள்.

ஒரு ஞாயிறு மாலை மனைவி தந்த தேநீரை பால்கனியில் நின்று பருகிக் கொண்டிருந்தேன். பறவைகளுக்கு ஞாயிறு ஏது? தொடு தூரத்தைத் தாண்டிய கொஞ்சம் தூரத்தில் அட்டைக்கருப்பில் உட்கார்ந்திருந்தது அது. நெடுநேரமாக ஒரே நிலையில் நின்றிருக்கும் என்னைக் கவனித்து பின்னே வந்து மெதுவாய் தொட்டாள் என் மகள். அவளுக்கு மட்டும் கேட்கும் படி சொன்னேன்.

‘அங்க பாரு!’
‘டிஃப்ரண்டா இருக்கு!’
‘ம்ம்… அண்டங்காக்கா’
‘ஓ…’
‘என்னாக் கருப்பு, பளீர்னு, மினு மினுன்னு, எந்த கண்டிஷனுரும் போடாம எப்படி இருக்கு பாரு அதோட ஹேர் ஷைனிங்கா!’

என் சிந்தனை அவளைப் பற்றிக் கொள்ள, ஒரே சிந்தனையை நான்கு கண்களின் வழியே ரசித்தோம். பழுப்பும் கருப்புமான வண்ணங்கொண்ட மணிக்காக்கைகளைப் போல அப்படி இப்படி தலையை திருப்பிப் திருப்பிப் பாரப்பதில்லை இந்த அண்டங்காக்கைகள். கத்துக்குட்டிகளைப் போல் இயங்கும் மணிக்காக்கைகளைப் போலல்லாமல் ஒரு தாதாவைப் போல தலையை நிமிர்த்தி கூர்ந்து பார்க்கின்றன அண்டங்காக்கைகள். அதைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம் நாங்கள். சரேலென எழும்பி அடுத்த கிளைக்குத் தாவியது. கொத்தாய் இருந்த கருவேப்பிலை பழங்களில் ஒன்றைக் கவ்வியது. வேறொரு கிளைக்கு வந்தமர்ந்து அதை விழுங்கியது. பறந்து போய் விட்டது. தேநீர் தம்ளரை சமையலறையில் போட நானும், ஜஸ்டின் பீபரைத் தொடர அவளும் பால்கனியிலிருந்து உள்ளே போய் விட்டோம். கருவேப்பிலை மரம் எப்போதும் போல அமைதியாய் நின்று கொண்டிருந்தது.

ஒரு காலை, உடற்பயிற்சி முடித்து வந்து செய்தித்தாள்களை எடுத்து வந்து பால்கனிக்கருகில் அமர வந்தவன் பால்கனிக்கருகில் மிதப்பவற்றைக் கண்டு அசந்து நின்றேன். பால்கனிக்கு வெளியே கருவேப்பிலை மரத்துக்கு மேலே திட்டுத் திட்டாய் வெள்ளை வெள்ளேரென்று குட்டி மேகங்களைப் போல எதுவோ மிதக்கின்றன. கண்கள் குவியம் பெற வாய் கூவியது ‘வண்ணத்துப் பூச்சிங்க!’ ஒரே இடத்தில் குவியலாய் ஏழெட்டு வண்ணத்துப் பூச்சியைப் பார்த்தால் எவனும் கவிஞனாவான் என்பதை உணர்ந்த தருணமது. காற்றில் மிதந்து பின்பு மரத்தில் இறங்கி கொத்துக்கொத்தாய் பூத்திருக்கும் கருவேப்பிலைப் பூக்களில் தேன் குடித்தன. அதைக் கண்டு கள் குடித்த வண்டாய் நின்றேன் நான்.

அடுத்தடுத்த நாட்களில் கருப்பு சிவப்பு, நீலம் கருப்பு என பல பட்டாம்பூச்சிகள் வந்தன. சென்றன. கருவேப்பிலை மரம் எப்போதும் போல அமைதியாய் நின்று கொண்டிருக்கிறது.

பால்கனிக்கு வெளியே நிற்கும் இந்தக் கருவேப்பிலை மரம் பெண் குயிலை, பட்டாம் பூச்சியை என புள்ளினங்களையும் பூச்சியினங்களையும் என்னுலகத்திற்குக் கூட்டி வந்து வேறோர் உலகத்தைக் காட்டுகிறது. ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் அனுபவம் கொடுக்கிறது. யார் வைத்த மரமோ, நான் அனுபவிக்கிறேன் அட்டகாசமாக.

‘எப்போதோ யாரோ வைத்த மரத்தை அனுபவிக்கும் நான், என் பங்கிற்கு எப்போது ஒரு மரம் வைக்கப் போகிறேன்?’ என்று கேள்வியெழுந்து குத்த வெளியே பார்க்கிறேன்.

கருவேப்பிலை மரம் எப்போதும் போல அமைதியாய் நின்று கொண்டிருந்தது.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
25.06.2018

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *