‘செக்கச் சிவந்த வானம்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Chekka-Chivantha-Vaanam-Movie-Posters

Chekka-Chivantha-Vaanam-Movie-Posters

ஆளு, அம்பு, சேனை குவித்து ஊரையே ஆளும் தாதா பெரியவர் சேனாதிபதியின் மெத்துமெத்தென்ற பெரிய இருக்கையில் உட்கார்ந்து கொள்ள ஒவ்வொருக்கும் உள்ளூர ஆசை. வல்லிய பெரியவரைச் சாய்த்து விட தாக்குதல் நடக்கிறது. பெரியவரைக் கொல்ல முயன்றது யார்? உள்ளூரின் போட்டி தாதா சின்னப்பதாசா, இல்லை வெளியூரில் இருக்கும் பிள்ளைகளா, பெரியவரைக் கொன்றால் யாருக்கு ஆதாயம் என்ற முடிச்சுகளோடு தொடங்கி வேகமெடுத்து பரபரவென்று பயணித்து திருப்பத்தோடு நிறையும் படம் தந்திருக்கிறார் இயங்குனர் மணிரத்தினம்.

வெளியில் உங்கள் கண்ணுக்குத் தெரியும் மனிதர்களும், உள்ளே உண்மையில் அவர்களும் வேறாக இருக்கலாம். பணம், பதவி, அதிகாரம், ஆதாயம் என்பது தலையில் ஏறிவிட்டால், மனிதர்கள் ரத்த உறவுகளைக் கூட ரத்தம் சிந்த வைத்து ஏறித் தாண்டிப் போகவே முயற்சிக்கிறார்கள் என்பதை படம் நெடுக சொல்லிக்கொண்டே போகிறது திரைக்கதை.

சேனாதிபதியாக பிரகாஷ்ராஜ் கொடுத்த பாத்திரத்தில் வெளுத்து வாங்கியிருக்கிறார். அப்பாவின் காலடியிலேயே நின்று கொண்டு வீட்டில் ஒருத்தியுடன் வெளியில் ஒருத்தியுடன் என்று வாழும் பாத்திரமான வரதனாக அரவிந்த் சாமி, செர்பியாவில் அதிகாரிகளுக்கு போக்குக் காட்டிவிட்டு ஆயுதம் சப்ளை செய்யும் எத்திராஜனாக எஸ்டிஆர், இலங்கைத் தமிழ்ப் பெண்ணை மணம் செய்துகொண்டு துபாயில் அராபியர்களோடு வணிகம் செய்யும் தியாகராஜனாக அருண் விஜய், உணர்ச்சி வசப்பட்டு தற்காலிக நீக்கம் பெற்று நிற்கும் பலவீனமான போலீசாக விஜய் சேதுபதி என அனைவரும் நன்றாகச் செய்திருக்கிறார்கள்.

வெல்கம் ஜோதிகா!

‘புருஷன் வேலையில இருக்கும்போது தொந்தரவு செய்யலாமா என் மனைவியே?’ ‘உங்கப்பாம்மா கிட்ட பேசு, நான் போறேன் உடனே!’ ‘என்ன ஆச்சுன்னு கேக்கறேன்ல்ல?’ என்று தூரத்திலிருந்து கத்திக்கத்தி பேசுவது, அல்லது ‘இல்ல, நான்தான் அப்பாவ விட்டுட்டு ஓடி வந்துட்டேன்’ ‘உங்கள பாக்க வர்ற எளசுங்ககிட்ட இப்படித்தான் பாடுவீங்களா?’ என்று நறுக்கென்று தெறிப்பது என்ற மணிரத்ன பாணி வசனங்களுக்குள் எல்லோரும் பொருந்திப் போக, விஜய் சேதுபதி மட்டும் பிதுங்கிக் கொண்டு வெளியே வந்து பின்பு அவரது இயல்பிலேயே நடித்து விட்டுப் போகிறார். விஜய் சேதுபதிக்கு என்று தனியான வசனங்கள் நன்று. நன்றாகச் செய்திருக்கிறார்.

பின்னணியில் ஏ ஆர் ரஹ்மானும், ஒளிப்பதிவில் சந்தோஷ் சிவனும் மிளிர வைக்கிறார்கள்.

‘செக்கச் சிவந்த வானம்’ என்ற பெயர் எதற்கு என்று புரிய வரும்போது விஜய் சேதுபதி பெரிய உருவம் எடுத்து நிற்கிறார், படம் நிறைவடைகிறது.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘செக்கச் சிவந்த வானம்’ : ‘மணிரத்னத்தின் வானம்’ – பார்க்கலாம்.

:திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *