‘ஐயப்பனும் கோஷியும்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அயலூர் சினிமா:

 

‘ஐயப்பனும் கோஷியும்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

ayyapanum koshiyum

 

இரு மருங்கிலும் அடர் காடுகளைக் கொண்ட நெடிய மலைப்பாதையின் இரவு இருட்டை தன் முகப்பு விளக்கின் வெளிச்சம் கொண்டு ஓரளவிற்குக் கிழித்துக் கொண்டு விரைகிறது நல்ல வசதிகள் கொண்ட ஒரு கார். ‘குமரா, தூக்கம் வந்தா சொல்லு. நான் ஓட்டறேன்!’ என்று ஓட்டுனரிடம் சொல்லிவிட்டு மறுபடியும் ஆழ்ந்த தூக்கத்தைத் தொடர்கிறார் காரின் சொந்தக்காரர். தமிழகத்தை நோக்கி எப்போதும் போகும் வழியில் போகாமல் அட்டப்பாடி வழியே போகும் காட்டு வழியில் செல்லும் காரை, வனச்சரக சோதனைச்சாவடியில் இருக்கும் காவலர்கள் மறிக்கின்றனர்.

‘வண்டி எங்க போவுது?’ ‘ஏன் இந்த ரூட்ல வர்ற?’ ‘பின்னாடி என்ன இருக்கு? டிக்கியத் தொற அண்ணட்டா!’ வகை விசாரிப்புகள் செய்து முடிக்கும்போது ‘யே, உள்ள ஒர்யு ஆளு தூங்குது!’ என்று பின் சீட்டின் கதவைத் திறக்கிறார்கள். கதவில் சாய்ந்து ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் காரின் முதலாளி அப்படியே சரிந்து வெளியில் நட்டநடு  சாலையில் விழுகிறார். வண்டியில் நிறைய மது குப்பிகள் வேறு. லேசாக கண்ணை விழித்த அவரை நெருங்கிய போலீஸ் அவர் மீது வரும் மது நெடியைக் கண்டு, ‘இவன் குடிச்சிருக்கான்!’ என்று சட்டையைப் பிடித்து தூக்குகிறார். போதையிலும் தூக்கத்திலும் தள்ளாடிக் கொண்டிருந்த காரின் சொந்தக்காரர் திடீரென்று சுதாரித்து நினைவு கொண்டு, ‘ என்னை காரிலேருந்து கீழே தள்ளியவன் எவண்டா, டாய்!’ என்று சீறுகிறார்.  அவரை நோக்கிப் போன எல்லா கான்ஸ்டபிளையும் அடிக்கிறார். களேபரமாகிறது இடம். அன்றைய காவல் வேலை முடிந்து வீட்டிற்குத் திரும்பலாம் என்று இருந்த மேலதிகாரி ஐயப்பன், காவலர்களை அடிக்கும் அந்த மனிதனை நோக்கி வந்து ‘பொளிச்! பொளிச்’ என்று நாலு அறை விட்டு அடக்குகிறார்.

அவனை அடித்து ஜீப்பிலேற்றி அட்டப்பாடி காவல் நிலையத்தில் வைத்து ‘ஆல்கஹால் தடை செய்யப்பட்ட அட்டபாடி பகுதியில் கடத்தியதற்காக, காவலர்களை தாக்கியதற்காக…’ என்று வரிசை கட்டி குற்ற வழக்கை பதிவு செய்கிறார்.  ‘என்ன வேணா பண்ணிக்கோ, விடியட்டும், அப்புறம் பாரு நான் யாருன்னு!’ என்று உட்கார்ந்திருக்கும் கார் முதலாளியின் செல்லிடப்பேசியை எடுத்து நோண்டுகிறார் காவல் நிலைய எழுத்தர். உம்மன் சாண்டி, பிரபல சினிமா தயாரிப்பாளர், விஜயன் என கேரளத்தின் முக்கிய மனிதர்களின் எண்கள் அதிலிருப்பதை பார்த்ததும் அலறுகிறது அந்த காவல் நிலையம். செய்தி மேலிடத்திற்கு போகிறது.

குற்றவாளியை மரியாதையாக அழைத்து, உள்ளே உட்கார வைத்து, ‘பாருங்க, உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சினையுமில்லை, இது ஆல்ஹகால் தடை செய்யப்பட்ட பகுதி, தவிர நீங்க போலீஸ்காரங்களை தாக்கனீங்க, அதனால நான் உங்களை அடிக்க வேண்டியதா போச்சி!’ என்று விளக்குகிறார் அந்த காவல் நிலையத்தின் தலைமை அதிகாரி ஐயப்பன் நாயர்.  ‘என்ன அடிச்ச இல்ல, நான் யாருன்னு தெரியாம செஞ்சிட்ட, நான் யாருன்னு காட்றேன்!’ என்று இறுமாப்பாய் நிற்கிறார் காரின் உரிமையாளரும் பெரிய இடத்துப் பிள்ளையுமான கோஷி.  இவை  படத்தின் தொடக்கத்தில் நடக்கும் காட்சிகள். ‘நான் யாருன்னு காட்டறேன் உனக்கு’ என்று இறங்கும் கோஷிக்கு காவலர் ஐயப்பன் யார் என்று தெரியவரும் போது படத்தில் அவருக்கு பதற்றமும் பார்க்கும் நமக்கு ஜிவ்வென்று விறுவிறுப்பும் ஏறுகிறது.

ஐயப்பன் நாயருக்கும் ஜோஷி குரியனுக்கும் நடக்கும் மோதல்களை கட்டிப்போடும் திரைக்கதை, கச்சிதமான நடிகர்களின் தேர்வு, நடிகர்களின் பங்களிப்பு, ஒளிப்பதிவு என கலந்து கட்டி சிறப்பாகக் கொடுத்திருக்கிறார்கள்.

பிரித்விராஜ் சுகுமாரன் பணக்கார இளைஞனாக, மலையளவு திமிர் கொண்டவனாக, தவறு என்று தெரிந்ததும் வருந்தும் மனிதனாக ஆனால் மன்னிப்பு கேட்க தயங்கும் ஆணவம் கொண்டவனாக என படம் முழுக்க பளபளக்கிறாறென்றால் ‘கலப்பட ஐயப்பன் நாயர்(!)’ ஆக வரும் பிஜு மேனன் ‘நல்லவன், ஆனால் பொல்லாதவன் பாத்துக்கோ!’ என்னும்படியாக சாந்தமாகத் தொடங்கி வெளியில் சாந்தமான ஆனால் உள்ளே ஒரு வேட்டை மிருகமாக செய்யும் பாத்திரத்தில் நம்மை ஈர்க்கிறார்.

கண்ணம்மாள் என்ற தமிழ்ப்போராளி பாத்திரத்தின் துணிச்சலை அழகாக வெளிபடுத்துகிறார் ஐயப்பனின் மனைவியாக வரும் அந்தப் பெண்மணி, அவரது காட்சிகளின் பின்னணியில் வரும் பழங்குடியின தமிழ்ப்பாடலும் நன்று.

‘நான் தெரியாம தப்பு பண்ணிட்டேன், மன்னிச்சிடுங்க!’ என்று சொல்ல முடியாத, ‘சரி, விடுங்க. இனிமேல் பாத்துக்கலாம்!’ என்று ஏற்றுக்கொண்டு போக முடியாத மனிதர்கள் தங்கள் வாழ்க்கையையும் வீணடித்து தங்களை சுற்றியுள்ளோரின் வாழ்கையையும் கெடுக்கிறார்கள் என்னும் ஆழமான கருத்தை சொல்லிகிறது ‘ஐயப்பனும் கோஷியும்’.

நிச்சயமாக தெலுங்கில், இந்தியில், தமிழில் மறுஆக்கம் செய்வார்கள். ஹீரோயிச மசாலா சங்கதிகளை சேர்க்காமல் இதைப்போலவே செய்தால் நேர்த்தியாக இருக்கும். கார்த்தி, தனுஷ், சரத்குமார் போன்றவர்கள் செய்யலாம்.

வி டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘ஐயப்பனும் கோஷியும்’ – நல்ல படம். பாருங்கள்.

 

: திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து

 

.

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *