‘சூரரைப் போற்று’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து.

wp-1606070319625.jpg

‘ஒரு கர்நாடக பிராமணரை மதுரையின் பிற்படுத்தப்பட்ட வகுப்பின் பெரியாரிய மனிதராக காட்டியிருப்பது நியாயமா?’ ‘ஏர்ஃபோர்ஸ்ல இப்படியா நடக்கும்?’ போன்ற கேள்விகளை எழுப்புகிறவர்கள் படத்தின் தொடக்கத்தில் போடப்பட்ட வரிகளையும் சில காட்சிகளின் போது இடப்பக்க மூலையில் போடப்படும் வரிகளையும் சரியாக கவனிக்கவில்லை என்பது புரிகிறது.

மேற்கண்ட கேள்விகளை மனதில் வைத்துக் கொண்டே நீங்கள் படத்தைப் பார்த்தாலும், உங்களை படம் ஈர்த்து விடும் என்று சொல்லுமளவிற்கு படத்தை தந்திருக்கிறார்கள்.

கேப்டன் கோபிநாத்தின் கதை நூலான ‘சிம்ப்ளி ஃப்ளை’யை எடுத்துக் கொண்டு அதில் நிறைய கற்பனை புனைவுகளை நெய்து கலக்கிவிட்டார் இயக்குநர் சுதா கொங்கரா. ‘இறுதி சுற்று’லிருந்து அடுத்த சுற்றுக்கு வந்துவிட்டார் (ஆமாம், இறுதியில் நிஜ டெக்கான் கோபிநாத் பற்றி திரையில் பேசும் குரல் மாதவனா!)

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, ‘பூ’ ராமு, கருணாஸ், காளி வெங்கட், விவேக் பிரசன்னா என சரியான தேர்வு, பொருந்தி கலக்கியிருக்கிறார்கள்.

‘இருவது பேர் ரிஜக்ட் பண்ணானுங்க, அவனுங்ககிட்ட காரணம் கேட்டியா?’ ‘வன்முறை கூடாதுன்னா அப்புறம் என்ன மயித்துக்கு அடிச்சீங்க?’ ‘ஏண்டா வந்தே!’ ‘நீ வித்துட்டு வந்துருந்தா விஷம் கலந்துருப்பேன்’ ‘நீங்க சோஷியலைட், நான் சோஷியலிஸ்ட்’ ‘அந்த மாடு ஏன் கத்திட்டே இருக்கு!’ ‘நீ கடைசியில இங்க வருவன்னு தெரியும், எவ்ளோ காசு ஐஏஎஸ் கோச்சிங்க்கு!’ ‘இங்கதான் இருப்பேன், ஏன்னா இதான் என் வீடு’ என படம் முழுக்க வசனங்களில் காட்சியின் உணர்வைக் கடத்தி தெறிக்க விடுகிறார்கள்.  குறிப்பாய் ‘ஏண்டி இந்த விஷயத்தை இப்படியாடி சொல்வே!’ என்று சூர்யா கேட்பதும், ‘ஆமாம், நான் அப்படித்தான்!’ என்று கட்டியபடி அபர்ணா  தலையை தட்டுமிடம்.  வசனமே இல்லாமல் ஒரு கத்தல் குரலில் உணர்வை வெளிப்படுத்துமிடமும் உண்டு. பெரும் தொழில் முதலையின் பொறியில் சிக்கி ஏமாற்றமும் கொந்தளிப்புமாய் நிற்கும் சூர்யா, நிறைய விமானங்கள் ஓடும் பின்னணியில் வானை நோக்கி பிளிறும் காட்சி.

படம் முழுக்க அதிகம் சிரிக்காமல் இறுக்கமான ஒரு முகத்தை வைத்துக் கொண்டு, காட்சிக்கு வேண்டிய உணர்ச்சிகளைத் தந்து கலக்கியிருக்கிறார் சூர்யா. தூக்கி தலையில் எறியப்பட்ட அப்பாவின் துண்டுக் கடிதங்களைத் தேடியெடுத்து அழுதுகொண்டே படிக்கும் சூர்யா, இணையாக அந்த வரியை சொல்லும் ஊர்வசி என இருவரும் சிறப்பாய் செய்திருக்கிறார்கள்.

‘முள்ளும் மலரும்’ படத்தின் அந்த ரஜினி சீன், மணியார்டர் செய்யும் சோழவந்தானின் மக்கள் காட்சி, தோல்வி வந்து துவண்ட நிலையில் கணவன் மனைவிக்குள்ளே நடக்கும் சண்டை, மனைவியிடம் உதவி கேட்க  பம்முதல் என பல காட்சிகளில் உணர்ச்சியைக் கலந்து குழைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தைப் பார்த்து விட்டு இந்த இயக்குநரின் முந்தைய படமான ‘இறுதிச் சுற்று’வை பார்க்க வேண்டும் போல் எண்ணம் வருகிறது.
.
வி-டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘சூரரைப் போற்று’ – சூரன். நிச்சயம் பாருங்கள்.

– திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *