‘டங்கல்’ : திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

dangal-poster-large-listicle
 
தன் ஊனில் ஊறிப்போயிருக்கும் பெருங்கலையான மல்யுத்தத்தை தனது வாரிசுக்குத் தந்து அதன் வழியே தனது நாட்டிற்கு ஒரு தங்கப் பதக்கம் வாங்கவேண்டும் என்று ஆசை கொண்ட ஒரு தகப்பனின் வாழ்நாள் போராட்டத்தை உணர்ச்சிப் பீறிட திரைப்படம் செய்து தந்திருக்கிறார்கள்.
 
ஆரம்பமே அதிரடியாக இருக்கும் ‘ரஜினி’ பட வகை, மிகச் சாதாரணமாக தொடங்கி (திருவல்லிக்கேணி தெருவில் ‘மார்கழி மாதம் மார்கழி மாதம் கண்ட்ரோல் பண்றா அம்பி’ மார்கழி காலை ‘அந்நியன்’) மெதுவாக உயரும் இன்னொரு வகை என்ற இருவகையில் இரண்டாம் வகையில் அரசு அலுவலகத்தில் கருப்பு வெள்ளை தொலைகாட்சியில் ஒலிம்பிக்ஸ் பார்க்க முயற்சிக்கும் சாதாரண காட்சியாக தொடங்கி, அதையடுத்து அவர்களுக்குள்ளே நடக்கும் மல்யுத்தத்தில் படம் உங்களை பிடித்து இழுத்து உள்ளே கொண்டு செல்கிறது. அப்புறம் கிட்டதட்ட இறுதி வரை உங்களால் வெளியே வர முடியாது.
 
உண்மைச் சம்பவங்களை திரையில் பதிக்கும்போது சில வேறுபாடுகள் உண்டு. வாழ்க்கை பல நிகழ்வுகளை அதுபாட்டுக்கு நடத்திவிட்டுப் போகும். அந்த நிகழ்வுகளின் முக்கியத்துவமும் அது ஏற்படுத்தும் திருப்பங்களும் அப்போது புரிவதில்லை. திரைப்படமாக அது வடிக்கப்படும்போது அவை மாறுபடவே செய்யும். காட்சிகளின் மிகைபடுத்தல் பின்னணி இசை என எல்லாமும் கூட்டப்பட்டே அது அமையப் பெறும் என்றாலும் அவைகளைக் கடந்து அந்தக் கதையின் உண்மையான மனிதரின் முகமும் உணர்வும் சில நேரங்களில் வெளிப்படும். அதுவே இயக்குனரின், திரைப்படத்தின் வெற்றி.
 
பெற்ற மகள்களே எதிரியாக பார்க்கும் நிலை, பெண்பிள்ளைகளுக்கு தலை முடிவெட்டுதல், ஊர் மக்களின் ஏச்சுப் பேச்சுக்கு ஆளாதல், கேலிகளை மீறி ஆண்களின் விளையாட்டில் பெண் பிள்ளைகளை கொண்டு போய் சேர்த்தல், காமன் வெல்த்தில் கொண்டு போய் நிறுத்த என அந்த மனிதன் எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பான் என ஹரியானா கிராமத்து மனிதனை நினைக்க வைத்து விட்டனர்.
 
நான்கும் பெண்ணாய்ப் பிறந்திடவே என் கனவு கனவாகவே போனது என்று எண்ணி சுவரிலிருந்த பதக்கங்களை ஏறக்கட்டி பெட்டியில் இட்டு ‘அப்பா கானா!’ என்று மகளின் அழைப்புக்கு இணங்கி சுணங்கி வாழ்பவன், ‘அட… என் பெண்களின் குருதியில் இந்தக் கலை கலந்திருக்கிறதே!’ என்று மகிழும் இடத்தில் அமீர்கானுக்கு மட்டுமில்லை தியேட்டரில் காண்போர் அனைவரது இதழிலும் புன்னகை. ‘நாளைக்கு காலைல அஞ்சு மணிக்கு ரெடியா இரு…’ என்று சொல்லும் அந்த இடத்திலிருந்து படம் வேறொரு கதிக்கு செல்கிறது.
 
எந்த ஒரு மாஸ் ஹீரோவாகவும் தன்னைக் காட்டும் காட்சிகள் ஏதும் இல்லாமல் படம் முழுக்க ஒரு இறுக்கமான நாட்டுப்புறத்து ஆசானாகவும் அவ்வப்போது கொஞ்சம் அப்பனாகவும் தன்னை வெளிப்படுத்தி பட்டையைக் கிளப்பி வேறொரு தளத்திற்கு சென்றுவிட்டார் அமீர்கான். அதனால்தான் சல்மான்கானே ‘அமீர், உங்களது படம் பார்த்தேன். அருமையாக இருந்தது. படத்தை விரும்புகிறேன். ஆனால் உங்களை வெறுக்கிறேன், தொழில் ரீதியாக’ என்று சுட்டுரை தட்டியிருக்கிறார்.
 
இவர்தான் முக்கியம், இந்தப் பாத்திரம்தான் முக்கியம் என்று சொல்லும்படியில்லாமல் கோழிக் கறி விற்பவர் உட்பட எல்லாமே முக்கியபாத்திரங்களாக செதுக்கப் பட்டிருக்கின்றன. அமீர் கான், அவரது மனைவி, அந்தப் பெண்கள், அந்த மருமகன், என்எஸ்ஏ கோச் என எல்லாருமே பொளந்து கட்டியிருக்கிறார்கள்.
 
(பாதி படத்தில் நமக்கே இப்படி ஒரு படத்தை எடுத்தால் என்ன என்று தோன்றும்போது, ஐஸ்வர்யா தனுஷ்க்கு ஏன் “‘மாரியப்பன்’ தங்கவேலுவின் கதையை ஒரு படமாக எடுக்கக் கூடாது?” என்று தோன்றாது! )
 
இரண்டாம் பாதியில் தொடர்ச்சியாகக் கோர்க்கப்பட்டுள்ள விளையாட்டுப் போட்டி காட்சிகள் சில பார்வையாளர்களுக்கு சோர்வை தருகிறது என்பது பலவீனம்.
 
மல்யுத்தத்தை துல்லியமாகக் காட்சிப் படுத்திய விதம், ஒளிப்பதிவு, இசை, திரைக்கதை, நடிக நடிகர்களின் உழைப்பு என மற்ற எல்லாமே பெரும்பலம்.
 
அமீர்கான் மீது மரியாதை கூடுகிறது.
(‘இறுதிச் சுற்று’ இயக்குனரின் மீதும், மாதவன் மீதும், ‘ஏய் சண்டைக் காரா’ என்று பாட்டில் நடிக்கும் அந்தப் பெண் மீதும் இன்னும் மரியாதை பெருகுகிறது)
 
வி- டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘டங்கல்’ – கலக்கல். கட்டாயம் பாருங்கள்.
 
:திரை விமர்சனம் – பரமன் பச்சைமுத்து
 
Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *