திட்டமிட்டு நாம் இயங்குவதும், திட்டமிடாமல் சில நிகழ்தேறுவதும் கலந்ததே வாழ்க்கை…

வாழ்வின் பெரும்பாலான முக்கிய நிகழ்வுகள் நமது முன்கூட்டிய திட்டமிடலை மீறி தானாகவே நிகழ்பவையே. திட்டமிட்டு நாம் இயங்குவதும், திட்டமிடாமல் சில நிகழ்தேறுவதும் கலந்ததே வாழ்க்கை. ‘நானெல்லாம் திட்டமிடுவதே இல்லை. இந்த நேரத்திற்கு இதைச் செய்யணும், இதுக்குள்ள இதை முடிக்கணும் என்ற கட்டுப்பெட்டியான வாழ்வை நான் வாழ்வதில்லை!’ என்று சொல்பவர்களிடம் ‘வீட்டிற்கு இந்த மாதம் முழுதிற்கும் தேவையான மளிகைச் சாமானை நீங்கள் வாங்கவில்லையா?’ என்று கேளுங்கள்.  திட்டமிடாமல் இயங்குவது பல நேரங்களில் நேர மற்றும் சக்தி விரயத்தை உண்டாக்கும். திட்டமிடலை மீறி தானாக சில நிகழ்வுகள் நடக்கும்போது ‘திட்டப்படி மட்டுமே அனுமதிப்பேன்!’ என்று மறித்து தாண்டிப் போகிறவர்கள் எதை இழக்கிறோம் என்று கூட தெரியாமல் வாழ்வின் பரிசுகளை இழக்க வாய்ப்பிருக்கிறது,  

தானாக நிகழும் சங்கதிகளை எதிர்ப்பின்றி இயைந்து ஏற்கும் போது வாழ்வின் நீரோட்டத்தில் கலந்து மலர்ந்து நிற்கிறான் ஒருவன். நாம் திட்டமிட்டு நடத்துவதைக் காட்டிலும் திட்டமிடலை மீறி நிகழும் சில நிகழ்வுகளே வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

இதையெல்லாம் இவர்களுக்கு தனது உரையில் தரலாம் என்று வேலை சம்மந்தமான சில விஷயங்களை மனதில் வரித்துக்கொண்டு தனது உரையை நிகழ்த்திக் கொண்டிருந்த சிவநெறித்தேவன், அடுத்து இதைத் தரலாம் என்று ஒரு கோணத்தில் தொடங்க இருந்தபோது அதற்கு சம்மந்தமே இல்லாமல் அவனை நோக்கி ஒரு கேள்வியை வைத்தான் பார்த்தசாரதி.

‘கூட வேலை செய்யறவங்களே நம்மை மதிக்காதபோது, நாம எதுக்கு டீமுக்காக ஒழைக்கணும்? நான் எதுக்கு வேலை செய்யணும்? நான் ஒதுங்கிக்கறதுதானே மரியாதை?’

‘அட்டகாசம்! இந்த ஆண்டின் பெஸ்ட் பெர்ஃபாமரா ஆகச்சிறந்த ஊழியரா நீங்க உருவாக அதிகம் வாய்ப்பு இருக்கு. உங்க கேள்வி நீங்கள் யார் என்பதை எனக்கு சொல்கிறது. இரண்டு சங்கதிகளை மாற்றிப் போட்டால், நீங்கள் அட்டகாசமான உயரத்துக்கு வருவீர்கள்! ஐ ஆம் ஹாப்பி ஃபார் யூ பார்த்தசாரதி! சூப்பர்!’ என்றான் சிவநெறித்தேவன்.

பார்த்தசாரதி கேட்ட கேள்வியை வைத்தே அவன் இந்த வருடத்தின் ஆகச்சிறந்த ஊழியராக வளர முடியும் என்று எப்படி இந்த சிவநெறித்தேவனால் சொல்ல முடிகிறது என்று சிந்திக்கத் தொடங்கினர் அரங்கினுள் அமர்ந்திருந்த மற்ற பொறியாளர்கள். அதுதானே சிவநெறித்தேவன்!  

….

(‘வளர்ச்சி’  தமிழ் மாத இதழில் நான் எழுதிக் கொண்டிருக்கும் ‘நதி போல ஓடிக் கொண்டிரு…’ தொடரிலிருந்து.)

#வளர்ச்சி #VALARCHI

#நதிபோலஓடிக்கொண்டிரு

: பரமன் பச்சைமுத்து

 

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *