எத்தனையோ கேள்விகள் உணர்வுகள் நம் உள்ளே உருவாகி உள்ளத்தில் தொக்கி நிற்கின்றன

ஓடிக்கொண்டேயிருக்கும் நம் வாழ்வில் ஒவ்வொரு நாளிலும் நிகழ்ந்தேறும் எத்தனையோ நிகழ்வுகளினால் எத்தனையோ கேள்விகள் உணர்வுகள் நம் உள்ளே உருவாகி உள்ளத்தில் தொக்கி நிற்கின்றன. சில வினாக்களையும் உணர்வுகளையும் நிதானித்து கண்டறிந்து கொள்கிறோம். சில கவனம் பெறாமலேயே உள்ளத்தின் ஏதோ ஒரு மூலையில் கிடக்கின்றன.

வேறு யாரோ ஒருவர் அதே உணர்வை அல்லது அதே வினாவை வெளிப்படுத்தும்போது, உள்ளத்தின் ஒரு மூலையில் கிடந்த அந்த வினா, அந்த உணர்வு சரேலென கிளம்பி மேலே வருகிறது. ‘அட… இதான் எனக்கும்!’ என்று ஒத்த அலைவரிசையில் ஒத்திசைவு பெற்று ஒரு புள்ளியில் இணைந்து நின்றுவிடுதல் நடந்து விடுகின்றது. ‘ஐயோ, எனக்கு உள்ள இருக்கிற அதையே வார்த்தைகள் போட்டு சொல்றான் அவன்!’ என்று திகைத்து நிற்கிறோம். சில கவிஞர்களின் வரிகளில் சிலருக்கு கண்ணீர் வருவதும் உள் உணர்வுகளுக்கு வெளியே வார்த்தைகள் வந்து விழும் நிகழ்வால்தான். நம் உள்ளக் கிடக்கையை வேறொருவன் வெளிப்படுத்தும் அவ்வேளையில் திடீரென்று ஒரு குவியம் நடந்து விடுகிறது. கூடுதல் கவனம் என்பது தானாகவே நடக்கிறது அங்கே.

‘உண்மையா உழைக்கறவனுக்கு வெற்றி கிடைப்பதில்லையே! நடிக்கறவன், ஏமாத்தறவனதானே கொண்டாடுது இந்த உலகம்?’

சிவநெறித்தேவனை நோக்கி கோபாலன் எறிந்த இந்தக் கேள்வி, ஒட்டு மொத்த ஊழியர்களையும் ஒரு புள்ளியில் இணைத்துவிட்டது. தங்கள் உள்ளத்தின் உள்ளேயிருக்கும் உணர்வை கோபாலன் தனது வார்த்தைகளில் வெளிப்படுத்தி விட்டான் என்று ஒரு பெரும் ஒத்திசைவு வந்து முழு அரங்கத்திலும் ஒரு அழுத்தமான கவனம் வந்தது,

சென்னைக் கிளையலுவகத்தின் அத்தனை ஊழியர்களும் இதற்கு சிவநெறித்தேவன் என்ன சொல்லப் போகிறான் என்று அறிந்து கொள்ள ஆவல் கொண்டது. கைகளை கட்டிக் கொண்டு நிற்கும் அவனையே கூர்ந்து கவனித்தது. ஏசி வெளிப்படுத்தும் மெல்லிய சத்தம் கூட மிகப் பெரிதாக தெரிந்த அளவிற்கான அமைதி நிலவியது அங்கே.

‘சொல்லுங்க சிவநெறித்தேவன்! இந்த உலகம் உண்மையா உழைக்கறவன கண்டுக்கறதேயில்லையே! ஏமாத்தறவன நடிக்கறவனதானே கொண்டாடுது? இங்க உழைப்புக்கு மரியாதையே இல்லியே!’

‘இவன் என்ன பேசுவான்?’ என்று எல்லோரும் எதிர் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ‘உன்னத்தாண்டா தேடிட்டு இருக்கேன்!’ என்பது போல மிக உற்சாகமாக கை தட்டி ஆரவாரிக்கத் தொடங்கினான் சிவநெறித்தேவன்.

 …

( ‘வளர்ச்சி’ மாத இதழில் நான் எழுதிக்கொண்டிருக்கும் ‘நதி போல ஓடிக்கொண்டிரு…’ தொடரிலிருந்து ஒரு பகுதி )

 

பரமன் பச்சைமுத்து

27.11.2017

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *