நதி போல ஓடிக்கொண்டிரு… – நூல்

முன்னுரை

வாழ்க்கை என்பது லட்சக்கணக்கான கோடிக்கணக்கான நிகழ்வுகளைக் கொண்டது. நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும் நிகழ்வுகளைக் கொண்டு வந்து நிரப்பிவிடுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளாலேயே நிகழ்த்தப்படுகிறது வாழ்க்கை. நிகழ்வுகளைக் கொட்டி நிரப்பியே வேயப்படுகிறது நம் வாழ்க்கை வழிப்பாதை.

‘நம் வாழ்வில் என்ன நடக்கிறது?’ என்பதைத் தாண்டி, ‘நடப்பதை எப்படிப் பார்க்கிறோம்!’ என்பதே ‘நம் வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது?’ என்பதைத் தீர்மானிக்கிறது. ஜே. கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, சாக்கிய முனி புத்தன் என மேன்மக்கள் எல்லோரும் நமது பார்வையை மாற்றவே பரிந்துரை செய்திருக்கின்றனர். ‘பார்வையை மாற்றிப்பாருங்கள், வாழ்க்கை மாறும் பாருங்கள்!’ என்று
‘பஞ்ச்’ அடிக்குமளவிற்குப் பார்வை முக்கியம் பெறுகிறது.

உலகத்துடன் கூடிய நமது தொடர்பே பார்வையைக் கொண்டே அமைகிறது அல்லது சிதைகிறது. உலகம் நம்மை எப்படிப் பார்க்கிறது என்பதைவிட உலகத்தை நாம் எப்படிப் பார்க்கிறோம், நம்மை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பவை மிக மிக முக்கியமானவை. உலகம் உலகமென்று இந்தப் பெரிய உலகைப் பற்றி நாம் பேசினாலும், உண்மையில் நம் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாய் ஒரு சிறிய உலகம் இருக்கிறது. சில பல மனிதர்களைக் கொண்டமைக்கப்பட்ட, அந்த நமக்கான உலகத்திலேயே நாம் இயங்கிக்கொண்டிருக்கிறோம். அந்த நம்மை சுற்றியுள்ள அந்த உலகத்தோடு நாம் கொண்டிருக்கும் தொடர்பே நம் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. அந்த உலகத்தின்பால் நாம் கொண்டிருக்கும் பார்வை தீர்மானிப்பதையே தீர்மானிக்கிறது.

அலுவலகம், பணிச் சூழல் என்பவை ஒரு மனிதனுக்கான தனி உலகம். அந்த தனி உலகம் பல்வேறு விதமான மனிதர்களாலும் நிறைய தொடர் நிகழ்வுகளாலும் ஆனது. அந்த உலகை ஒரு மனிதன் எப்படிப் பார்க்கிறான், அதில் அவன் எப்படி இயங்குகிறான் என்பது அவனது வளர்ச்சியை மகிழ்ச்சியை தீர்மானிக்கிறது.

நான்கு விதமான மனிதர்களை பல நிகழ்வுகளைக் கொண்ட அந்த உலகில் இயங்குவதற்கு ஒரு நேர் கொண்ட பார்வை கிடைத்தால் வளர்ச்சியும் மலர்ச்சியும் வந்து விடுகிறது. வாழ்வு சிறக்கிறது. போகிற போக்கில் வெற்றிகளும் வாய்க்கின்றன. பார்க்கத் தெரியாத போது பாதை தவறுகிறது. பிரிதொரு நாளில் உணர்கையில் ‘எனக்கு மட்டும் இதெல்லாம் அப்போதே தெரிந்திருந்தால்… வேற லெவல்ல வந்திருப்பேன்!’ என்று பெருமூச்செறிய வைக்கிறது.

‘எனக்கு மட்டும் இதெல்லாம் முன்பே தெரிந்திருந்தால்…’ என்பது ஒரு நிலையை அடைந்த பிறகு வெளிப்படும் வாக்கியம், ‘இன்னும் சில சங்கதிகள் தெரிந்திருந்தால் அவற்றைக் கொண்டு இன்னும் பலமாகக் காலூன்றி உயர்ந்திருப்பேன், இதெல்லாம் தெரியாமல் போனது தொடங்கிய போது அன்று எனக்கு’ என்ற லேசான வருத்தத்திலும், இன்னும் பல படிகள் உயர்ந்து நின்றிருக்கலாமே என்ற ஆசையிலும் தோய்ந்து வெளிப்படுவது.

‘ம்ம்ம்… அந்தக் காலத்தில இப்படி ஒரு மேட்ரிமோனி இருந்திருந்தா, எங்கப்பா ஒரு ராஜகுமாரனையே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார்’ – என்று இப்போது தொலைக்காட்சியிலும் ஏனைய ஊடகங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் விளம்பரம் வெளிப்படுத்துவதும் இதையேதான்.

‘எனக்கு மட்டும் இது முன்பே தெரிந்திருந்தால்…’ என்ற நிலையிலேயே நின்று கொண்டிருப்பதால் ஒன்றுமே ஆகப்போவதில்லை, தேக்கம் ஏற்படும். ஆக்கம் நிகழாது. அடுத்த நிலை நோக்கி நகர வளர்ச்சி வாய்க்கும்.

‘எனக்கு மட்டும் இதெல்லாம் தெரிந்திருந்தால்…’ என்று நிற்காமல், இதுவரை நாம் கற்றதை ‘இதெல்லாம் செய்யாதே, இதெல்லாம் செய்!’ என்று அடுத்து துவங்குபவர்களுக்குச் சொன்னால், அவர்கள் தொடக்கம் முதலே செம்மையாக இயங்குவார்களே, ‘எனக்கு மட்டும் இதெல்லாம் தெரிந்திருந்தால்..’ என்று நிறைய சங்கதிகளுக்கு அவர்கள் சொல்ல வேண்டியிருக்காதே… என்ற எண்ணம் உந்த ‘நதி போல ஓடிக்கொண்டிரு…’ என்ற பெயரில் ‘வளர்ச்சி’ சுய முன்னேற்ற இதழில் உருவானது ஒரு தொடர்.

பத்தொன்பது மாதங்கள் தொடராக வந்தபோது வாசகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘நதி போல ஓடிக்கொண்டிரு…’ தொகுக்கப்பட்டு இதோ ஒரே நூலாக.

பன்னாட்டு நிறுவனங்களிலும் பெரு நிறுவனங்களிலும் பல ஆண்டுகள் பணி புரிந்த அனுபவங்களையும், செய்த தவறுகளையும், அவற்றில் கற்றவற்றையும் குழைத்து செய்யப்பட்டது இந்த ‘நதி போல ஓடிக்கொண்டிரு…’ வெறும் போதித்தலாக இருந்தால் சலிப்பு தட்டி விடுமேயென்று எண்ணி, பாத்திரங்கள் நிகழ்வுகள் வைத்து ‘தன்னம்பிக்கை + தொடர்’ என்ற வரியுடன் கதையாகத் தந்தோம் அதை. கதை என்றாலும் அதில் வரும் பாத்திரங்களும் பல நிகழ்வுகளும் உண்மையே.

சிவநெறித்தேவன், ஆழ்வார், மத்வமைந்தன் என பல பாத்திரங்கள் உண்மையான பாத்திரங்கள். இருளர்களைப் பார்க்க சிவநெறித்தேவன் பைக்கை எடுத்துக்கொண்டு போனதும், போன வழியில் ஓர் ஒற்றை யானை ஒரு இளைஞனை துவைத்து எடுத்ததும் உண்மை. உண்மை நிகழ்வுகள் உண்மை பாத்திரங்கள் இன்றைய கண்ணோட்டத்தில் வேண்டிய விதத்தில் புனைவு பெற்று உலவ விடப்பட்டிருக்கின்றன.

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில், சிறு அலுவலகத்தில், பெரு நிறுவனத்தில் பணி புரியும் ஒருவர் பல்வேறு சூழ்நிலைகளை பல்வேறு விதமான மனிதர்களை பார்க்க வேண்டியிருக்கும். அவர்களோடு இணைந்து அந்த உலகத்தில் செயல்படவே வேண்டியிருக்கும். பணிச் சூழலைக் கையாண்டு வளர்ச்சி கண்டு மலர்ச்சியோடு அவர் பயணிக்க, சரியான பார்வையைக்கொள்ள இந்த ‘நதி போல ஓடிக்கொண்டிரு…’ உதவி செய்யும் என்று நம்புகிறேன்.

உழைப்பவர்கள் உயர, அவர்கள் வாழ்வு செழிக்க, இறையை இறைஞ்சுகிறேன். அவர்களது வாழ்வில் வளர்ச்சியும் மலர்ச்சியும் வரட்டும்!

வாழ்க! வளர்க!

பேரன்புடன்,

(பரமன் பச்சைமுத்து)

18-01-2018

[email protected]

www.ParamanIn.com

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *