முத்தத்தி – நீச்சல்

‘பாபா’ திரைப்படம் பார்த்திருக்கிறீர்களா? எதனை நினைத்தாலும் அது உடனேயே இப்போதே நடந்து விடவேண்டும் என்ற மனநிலை கொண்ட பாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கும் ஆஷிஸ் வித்யார்த்தி ஏற்று நடித்திருக்கும் வில்லன் பாத்திரம். ‘இப்போ ராமசாமி’என்ற பெயர் கொண்ட அவர் அடிக்கடி ‘இப்போ…இப்போ… இப்போ!’ என்று பரபரத்துக்கொண்டே இருப்பார். ராமு பெருமாளும், முகுந்தனும் நானும் அந்நாட்களில் கிட்டத்தட்ட இப்போ ராமசாமிகளாகவே திரிந்து கொண்டிருந்தோம். நினைத்தால் கிளம்பிவிட வேண்டும். வயது அப்படி.

இந்தியா டாட் காம் என்ற இணையதளத்தின் இணையப் பொறிஞர்களாக இரவு பகல் தெரியாமல் முழுநேரமும் கணினிக்கு முன்பமர்ந்தே கண்களை பாழடித்துக் கொண்டிருந்த பொழுதுகள் அவை. அத்தி பூத்தாற்போல் எப்போதாவது இரண்டு நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைத்தால் எரிக்சன் ஃபோனின் ஆண்டெனாவை மட்டும் தனியே கழட்டி வைத்துவிட்டு தலை தெறிக்க ஊரை விட்டு காடு மேடு என எங்காவது கிளம்பி விடுவோம். போதாக்குறைக்கு சென்னை அலுவலகத்திலிருந்து முகுந்தன் வேறு வந்து சேரவே,உற்சாகத்தின் மேல் ‘உ’ வந்து உட்கார்ந்து கொண்டது எங்களுக்கு.

பெங்களூரின் அந்நாளைய கோரமங்களா பகுதியில் (வொயிட்ஃபீல்ட், அவுட்டர் ரிங் ரோடு பகுதிகள் எல்லாம் அப்போது உருவாகவில்லை. பெரும்பாலான ஐடி கம்பெனிகள் கோரமங்களாவில் இயங்கின, ஃபோரம் மாலும்,மைக்ரோசாஃப்ட், கோல்ட்மேன் சாக்ஸ் இயங்கும் எம்பஸி கோல்ஃப் லிங்க்கும் கட்டபடவேயில்லை அப்போதெல்லாம். ஐபிஎம்மும்,ஹெச்எஸ்பிசியும் மட்டும் எங்கோ நகரை விட்டு தூரமான பன்னீருகட்டா காட்டின் அருகில் இருந்ததாக கருதப்பட்டது) தங்கியிருந்த எங்களுக்கு
யமஹாவையும், சுஸுகியையும் எடுத்துக்கொண்டு அரைநாள் பயணித்து ஏதோவொரு மலைக்கு அல்லது நீர்த்தேக்கத்திற்கு போய் வர ஆசை. ‘தெங்கு மரஹடா… குதிரேமுக்’ என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த ராமு‘பி ஆர் ஹில்ஸ்’க்கு வந்து கடைசியில் ‘முத்தத்தி’ என்று சொல்ல, இணையத்தில் போய் பார்த்ததில் முத்தத்தியில் காவிரி நீர்த்தேக்கத்தில் மார்பை மறைக்குமளவிற்கு ஒரு பெரிய மீனை ஒரு மனிதன் தூக்கிகொண்டு நிற்கும் விளம்பரப் படங்களைப் பார்த்ததும் அசந்து போய் உற்சாகம் பீறிட ‘எஸ்ஸ்ஸ்ஸ்!’என்று கூவினோம்.

பெண்டாக்ஸ் காமிராவோடு‘ஹன்டிங் நைஃப்’ ‘சுவிஸ் ஆர்மி நைஃப்’ ‘காம்ப்பஸ்’ எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினோம் (இப்போது நினைத்தால் சிரிப்பாக வருகிறது)

ஒரு ஊருக்கு அல்லது இடத்துக்கு போவதின் உற்சாகம் போகும் பயணித்தின் வழியிலேயே நம்மைத் தொற்றிக் கொள்ளும். உண்மையில் பயணிக்கும் வழியே நம்மை முழுதாக கரைத்து இறுதியில் சென்றடையும் இடத்திற்கு நம்மை தயார் செய்கின்றன. பழனி முருகனை தரிசிக்கும் போது ரோப் காரில் சென்று தரிசிப்பவரை விட யானைப் பாதையில் நடந்து பயணித்து தரிசிப்பவர் அதிகம் அனுபவம் பெறுவது இதனால்தான். ‘ஹள்ளி’களின் ஊடே பயணித்து ‘ஹாலும்’ டீயும் குடித்துக் களித்துப் பயணித்தோம். (பெங்களூரைக் கடந்து சுற்றிலும் பயணித்த அந்த நாட்களில் இரண்டு சங்கதிகளைக் கண்டறிந்தேன். ஒன்று – கிராமங்கள் பொதுவாக அங்கே ‘ஜாலஹள்ளி’‘பிளேக்கஹள்ளி’ என ‘ஹள்ளி’என்ற பெயரில் விளிக்கப்படும். இரண்டு – பெரும்பாலும் தமிழில் ‘ப’ என்று சொல்லபடுவது கன்னடத்தில்‘ஹ’வாக மாறியும், இறுதியில் கன்னடத்துக்கே உரிய‘உ’விகுதியும் சேர்ந்தும் வரும்.‘பால்’ – ‘ஹாலு’, ‘பத்து ரூவா’ –‘ஹத்து ரூவா’, ‘புகை’ –‘ஹோஹே’; நல்ல வேலை நான் கர்நாடகத்தில் பிறந்திருந்தால்‘பரமன்’ என்ற நான் ‘ஹரமன்’ஆகி, ‘ஹரமனு’ என்று விளிக்கப்பட்டிருப்பேன் போலும்!) டீ போட்டுக் கொடுத்து டீக்கடையை நடத்தும் கர்நாடக ஊர்ப்புற பெண்கள், கல்லாவில் காசு வாங்கிப் போடும் அவர்களது கணவன், ஊர்ப்புர மக்களின் உடை நடை என எல்லாம் உள்வாங்கி ஒரு வழியாக முத்தத்தி போய் சேர்ந்து, அங்கே இங்கே விசாரித்து ‘பீமேஷ்வரி ஃபிஷ்ஷிங் கேம்ப் போய் சேர்ந்தால், ‘அள்ளி போ, இள்ளி பா, பந்தில்லா’ என்று எதையோ கூறி அனுமதி மறுத்தான் அங்கிருந்த செக்யூரிட்டி.

‘ஏய் என்னாய்யா உனக்கு?என்னாப் பிரச்சினை உனக்கு?’என்று எகிறினாலும் மசியவில்லை அவன். எங்கள் மூவரில் கொஞ்சம் கன்னடம் புரிந்தவன் முகுந்தன் என்பதால் அவனைப் பேசச் சொன்னோம், ‘உள்ள இருக்கிற காட்டஜ், ஃபிஷ்ஷிங்க்குக்கெல்லாம் பெங்களூர்லயே ரிசர்வ் பண்ணிட்டு பே பண்ணி பர்மிட் ஸ்லிப் வாங்கிட்டு வரணும் சார். இங்கல்லாம் நேரா விட முடியாது போங்க!’ என்று வேறொருவர் வந்து கன்னடமும் ஆங்கிலமும் கலந்து சொன்னதில் கொஞ்சம் புரிந்தும், நிறைய பகீறென்றும் ஆனது எங்களுக்கு.

கைகளை காற்றில் குத்துமளவிற்கு, கால்களை காற்றில் உதைக்குமள விற்கு பெருத்த ஏமாற்றம் எங்களுக்கு. மொத்த பயணமும் பாழாய்ப்போனது. காவிரிக் குளியல், மீன் பிடித்தல் என மொத்த ஆசையும் நிராசையானது.
திடீரென்று எனக்கு ஒரு எண்ணம் தோன்ற,‘இதே காவிரி, இவங்க கேம்ப்பஸுக்கு வெளியயும் இருக்கு இல்ல? அதுவும் காவிரிதானே. அங்க எறங்கி குளிப்போம்! வா மச்சி போவோம்!’ என்று மற்ற இருவரிடமும் பகிர்ந்தேன். உயிர் வந்தது மூவருக்கும்.

அடுத்து இருந்த ஒரு சிறிய ஊருக்குள் போகும் சிறிய பாதையில் சென்றோம். இரண்டே இரண்டு தெருக்களை கொண்ட சிற்றூர் அது. ஒரே ஒரு டீக்கடை. ‘காவிரி… காவிரி…. காவிரி… எல்லீ?’ என்று எங்களுக்குத் தெரிந்த மொழியில் கேட்டோம், எதற்குக் கேட்கிறோம் என்று தெரியாமல்‘அள்ளி..’ (‘தோ.. அந்த பக்கம்,அங்க இருக்கு’ என்பதாக) என்று பதில் சொன்னார்கள். காவிரிக்கு அருகில் வந்துவிட்டோம், இறங்கிக் குளித்து விட்டு வருவதற்குள் மதிய உணவு நேரம் கடந்து விடும். எதையாவது கொஞ்சமாய் வயிற்றில் இட்டு வைப்போமே என முடிவு செய்து சாப்பிட இறங்கினோம். இருபது ரூபாயோ என்னவோ கொடுத்து சுத்தமாய் ஆறிப்போயிருந்த சோற்றையும், ஊற்றப்பட்ட உப்பு சப்பு இல்லாத குழம்பையும் பிசைந்து கொஞ்சம் சாப்பிட்டு விட்டு வண்டிகளை அங்கேயே விட்டு விட்டு பைகளை மட்டும் எடுத்துக் கொண்டு ஆற்றைத் தேடி புதர்களையும் பாறைகளையும் கடந்து நடந்தோம்.

ஆளரவமற்ற பாறைகள் சூழப்பட்ட பள்ளமான அந்தப் பகுதியில் காவிரி ஓரளவிற்கு தண்ணீரோடு இருந்தது. எங்களுக்கு உயிர் வந்தது. உடைகளைக் களைந்து உற்சாகமாக உள்ளே இறங்கினோம். சில மணி நேரங்கள் நீரிலேயே கும்மாளமடித்தோம், ஊறிக் கிடந்தோம், குதியாட்டம் போட்டோம். நீச்சல் தெரியாமல் தவித்த முகுந்தனுக்கு எளிய முறை நீச்சல் பயிற்சி பாடம் வேறு எடுத்தேன். இருபது நிமிடப் பயிற்சிக்குப் பிறகு நீரில் ஓரளவிற்கு மிதக்கக் கற்று விட்டோம் என்று பூரிப்பு முகுந்தனுக்கு.

எல்லாம் முடித்து கரையேறி துடைத்து உடை மாற்றி பைகளை எடுத்துப் புறப்படும் போது அந்த வழியே எருமை மாட்டை மேய்ச்சலிருந்து திரும்பக் கூட்டி வந்த ஒரு அந்த உள்ளூர் மனிதர் என்னவோ கன்னடத்தில் சொன்னார். அதைக் கேட்ட முகுந்தன் அவரிடம் ஏதோ கேட்க, பதிலுக்கு அவர் ஏதோ சொன்னார். அதைக் கேட்டு அவன் முகம் வியர்த்தது.

‘நேத்து ஒரு சின்னப் பையன முதல இழுத்துட்டு போயி கொன்னுடுத்து’

‘ஐயோ, பக்கத்து ஊர்லயா?’

‘இல்ல இந்த ஊர்லதான்!’

‘அப்படியா, ஐயோ! எங்க?’

‘தோ…. இப்ப நீங்க குளிச்சீங்களே அதே இந்த இடத்திலதான்!’

……
– Paraman Pachaimuthu,
Chennai,
16.04.2018

http://www.paramanin.com/?p=1561

 

.

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *