அவெஞ்செர்ஸ் எண்டு கேம் : திரைவிமர்சனம் : பரமன் பச்சைமுத்து

அவேங்கேர்ஸ்

Avengers-Endgame-2019-Backgrounds

// எல்லாம் முடிந்தது என்று எல்லோரும் வாழும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ‘ஒரு எலி அசைந்ததால் ஓர் எறும்பு எழுகிறது, எறும்பின் எழலால் மறு எழுச்சி பெறுகிறது உலகம்’ //
…………..

பிரபஞ்சத்தையே கட்டுப்படுத்தும் சக்தி கொண்ட சக்தி கற்களை போராடிக் கைப்பற்றி தனது கை விரல்களுக்கு மேல் பதித்துக் கொண்ட பெரும் வில்லனான தானோஸ், தான் நினைத்தபடி ஒரு சொடக்கில் உலகின் அத்தனை கிரகங்களிலும் உள்ள உயிரினங்களை பாதியாக அழித்துவிட்டு, தோட்டம் அமைத்து வேளாண்மை செய்து கொண்டு காய்கறிகளை பறித்து, சமைத்து உண்டு அமைதியாக வாழ்கிறான். ‘வேலை முடிஞ்சிடுச்சி நாடி தளர்ந்திடுச்சி கண்மணி என் கண்மணி’ என்று வாழும் அவனைத் தேடி அந்தக் கிரகத்துக்கு வருகிறார்கள் அவனால் பாதிக்கப்பட்ட சூப்பர் ஹீரோக்கள்.

‘அழிந்த உலகம் அழிந்ததுதான், போனது போனதுதான், வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கே இடமேது?’ என்று சித்தாந்தம் உமிழும் சாந்த சொரூபியாக நிற்கும் வில்லன் தானோசை துவைக்கிறார்கள். அவனிடம் இருக்கும் சக்தி கற்களை வைத்து உலகை பழைய நிலைக்கு மீட்கலாம் என்ற நினைப்பில், ‘கல்லுங்க எங்கடா, மரியாதையா குடு!’ என்று கேட்டால், ‘வேலை முடிஞ்சதும் அதது எங்க போகணுமோ அங்க போயிடுச்சி கண்ணா!’ என்கிறான் கையறு நிலையில்.(இந்தக் ‘கையறு நிலை’ வார்த்தை படம் பார்க்கும்போது புரியும். புன்னகை வரும்)

அழிந்தவர்கள் அழிந்தவர்கள்தான், திரும்பி புரட்டிப் போட்டு எடுக்க சக்தி கற்களும் இல்லை, இனி ஒன்றும் செய்யமுடியாது என்று கையறு நிலையில் சூப்பர் ஹீரோக்கள் வெறும் சப்பையர்களாக மாறி சாமான்ய மனிதர்களாக தங்கள் குடும்பத்தில் கலந்து நெகிந்து மகிழ்ந்து வாழ்கிறார்கள்.

எல்லாம் முடிந்தது என்று எல்லோரும் வாழும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்குப் பின் ‘ஒரு எலி அசைந்ததால் ஓர் எறும்பு எழுகிறது, எறும்பின் எழலால் மறு எழுச்சி பெறுகிறது உலகம்’.

அவேங்கேர்ஸ்

வக்காண்டாவில் ஆன்ட் மேன் எப்படி ‘குவாண்டம்’ அறிவியலின் ஒரு பொறியில் சிக்கி உறைகிறான், டோனி ஸ்டார்க் – கேப்டன் அமெரிக்காவிடம் பழைய வருத்தத்தை அப்படி சொல்வது ஏன், இடையில் கொஞ்ச நேரம் காண்பிக்கப்படும் லூக்கி கைது செய்யப்படும் காட்சி என்ன, அவென்ஜெர்ஸ் என்ற பெயர் எதனால், ஸ்பேஸ் ஷிப்பில் தவிக்கும்போது அந்த மொத்த ஷிப்பையும் தூக்கி வரும் அந்த மார்வல் யார், அவரால் எப்படி இது முடிகிறது, அயர்ன் மேன் டோனி ஸ்டார்க்கின் அழகான மனைவி, ‘இது தப்பு இல்ல, இவ்வளோ நாளா நெறைய முறை உன்னை நான் தடுத்திட்டே இருந்தேனே அதுதான் தப்பு’ என்று சொல்வது எதனால், அட… கடைசி நேரத்தில அவெஞ்சர்ஸ் பக்கம் வந்து பட படவென்று குதிக்கும் இந்த பாத்திரங்களெல்லாம் யார், ஏன் ஃப்யூரியின் கண்ணில் ஒரு கட்டு, டோனி ஸ்டார்க் ஏன் அப்படி ஒரு நிலையில் கிடக்கிறார் படத்தின் துவக்கத்தில், உடன் இருக்கும் அந்த இயந்திரப் பெண் நெபுலா யார்… என படத்தின் பல சங்கதிகள் முந்தைய படங்களோடு தொடர்புடையது என்பதால், பதினோரு ஆண்டுகளுக்கு முன்பு வந்த அயர்ன் மேன் தொடங்கி இதுவரை வந்த எல்லாப் பாடங்களையும் பார்த்தவர்களுக்கு கதாபாத்திரங்களும், அதன் தன்மைகளும், நிகழ்வுகளின் தொடர்பும் எளிதாய் புரியும். முந்தைய படங்களை பார்த்தவர்கள் எளிதாக ஆழமாக புரிந்து கொள்வார்கள். மற்றவர்களும் படத்தை ரசிப்பார்கள்.

எது நடந்துவிடக் கூடாதென்று இரண்டு ஆண்டுகளாக ரசிகர்கள் பதறினார்களோ அது நடந்து விடுகிறது கதையில். ஏற்றுக் கொள்ள முடியாத பல சிறுவர்களும் சிறுமிகளும் படத்தின் போது அழுகிறார்கள். பெரியவர்களும் கூட கனக்கிறார்கள். சாதரணமாய் டோனி ஸ்டார்க்கிடம் ‘இத செய்தால் என்ன ஆகும்னு தெரிஞ்சா நீ செய்யறத செய்யமாட்டே!’ என்று டாக்டர் ஸ்ட்ரேஞ் சொல்வது திரும்பிப் பார்க்கையில் ‘ஐயோ! அவன் அதைத்தான் சொன்னானா!’ என்று பதற வைக்கிறது திரும்பிப் பார்க்கையில்.

‘பீர் தொப்பை’யோடு தார் பாத்திரத்தை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. ‘அழகாக இருந்த மார்வலுக்கு ஏம்பா முடி வெட்டி விட்டீங்க?’ என்ற கேள்வியும் வரவே செய்கிறது,

நகை, சோகம், ஆக்ஷன் என எல்லாமும் கலந்து தந்திருக்கிறார்கள்.

அழகாக முடித்திருக்கிறார்கள். கால இயந்திரத்தில் திரும்பி வரவில்லை என்று நினைக்கப்பட்ட கேப்டன், அடுத்த பக்கத்தில் அமர்ந்து தன்னுடைய கேடயத்தை ஃபால்கனிடம் தருவதையும், விண்வெளி ஓடத்தில் தார் ஏறி நிற்பதையும், அயர்ன்மேனை அப்படிக் கட்டிப் பிடித்து ‘இட்ஸ் நைஸ் இட்ஸ் நைஸ்’ என்று சொல்லும் ஸ்பைடைர்மேன் பீட்டர் பார்க்கரையும் பார்த்தால், ‘எண்டு கேம்’ தாண்டியும் புது ஆட்டம் வேறு பெயரில் தொடரும் போல் தெரிகிறதே!

வி – டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘அவெஞ்சர்ஸ் எண்டு கேம்’ – அவெஞ்சர்ஸ் அசத்துகிறார்கள் : பாருங்கள்

  • திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *