‘ஒத்த செருப்பு ‘ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

images4896631818316080130.jpeg

ஒரு மாதத்திற்கு முன்பு நடந்த ஒரு கொலைத் தொடர்பாக ஒருவனைப் பிடித்து வந்து ஒரு காவல்நிலையத்தில் வைத்து விசாரிக்கையில் அந்த ஒருவன் வெளிப்படுத்தும் சங்கதிகளால் உருவாகும் ஒரு கலவையான அனுபவத்தை ஒரு முழுப்படமாக வடித்து ஒரே ஓர் ஆள் மட்டுமே நடித்து ஒரு மிரட்டலோடு அதைத் தந்தால் – ‘ஒத்த செருப்பு’

இரண்டு மணி நேரத்தில் ஓடக் கூடிய ஒரு த்ரில்லர் படத்தை, முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஒரே ஒரு நடிகர் மட்டுமே வருவார் என்பதை நினைத்து பார்க்கவே திகைப்பாக இருக்கிறது நமக்கு. அதை உணர்ச்சி பூர்வமாக செய்து தனக்கே உரிய நக்கல் நையாண்டியை கலந்து கட்டி அட்டகாசமாகத் தந்திருக்கிறார் பார்த்திபன்.

பாரத்திபன் ஒரு தேர்ந்த நடிகர் என்பதை படம் முழுக்க நிரூபிக்கிறார். இயக்குநர் பார்த்திபனுக்கு நடிகர் பார்த்திபனும் ஒளிப்பதிவாளரும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும் பேருதவி புரிந்திருக்கிறார்கள்.

இப்போதெல்லாம் டைட்டில் கார்டில் ‘இளையராஜாவுக்கு நன்றி’ என்று வந்தாலே, படத்தில் எங்கோ அவரது பாடல் ஒலிக்கப் போகிறது என்பது புரிந்து விடுகிறது.

மாசிலாமணி, மகேஷ், உஷா, ஆட்டோக்காரர், ஆப்பம் செய்து காத்திருக்கும் ‘டிசி’யின் மனைவி, ரோஸி, சபரிமலைக்கு மாலை போட்ட காவலர், குருவிக்குஞ்சுகள், குருவிக் குஞ்சுகளை கபளீகரம் செய்ய முனையும் பூனை, நயன்தாராவை சில்நொடிகள் நினைவு படுத்தும் அந்த தீபாவெங்கட் குரல்கார மனநல நிபுணர் என எல்லோரும் படம் முடிந்தும் நம்முள்ளே நிற்கிறார்கள் என்பது திரைக்கதை கொடுக்கப்பட்ட விதத்திற்கான பாராட்டு.

‘அடடா… இதை நான் பண்ணியிருக்கனுமே, என் வகை முயற்சியாச்சே இது!’ என்று கமல்ஹாசன் நிச்சயம் எண்ணுவார்.

திரைப்படக் கல்லூரி மாணவர்களாலும், தமிழ் திரையுலகைத் தாண்டியும் இந்தப் படம் பேசப்படும்.

வி- டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ – தடம் பதித்த செருப்பு; கதை சொல்லலில் வித்தியாசமான முயற்சி. நிச்சயம் பாருங்கள்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *