பொதினா புளித் துவையல்

உணவில் உயிர்ச்சத்து இருக்க வேண்டும் என்பதற்காகவே அவ்வப்போது அரைத்த துவையல்களை சட்னிகளை வழித்துச் சுவைப்பவன் நான். அப்படியொரு துவையலோடு வந்திருந்த என் வீட்டு மதிய உணவை இன்று பிரித்த போது உடனிருந்த சில அன்பர்களோடு பகிர நேர்ந்தது.

‘ஐயோ… சூப்பரா இருக்கே! இது என்ன துவையல் பரமன்?’ என்பது அனைவரின் பொதுக் கேள்வியாக இருந்தது. அவர்களுக்குப் பிறகு சோற்றில் இட்டு பிசைந்து வாயில் இட்டதும் சொல்லிவிட்டேன், ‘பொதினா, கொத்தமல்லி, கருவேப்பிலை, புளி’ என்று. ‘இல்லீங்க பரமன். இது வேறமாதிரி இருக்கிறது!’ என்றவர்களுக்காக வீடு வந்ததும் முதல் வேலையாக விசாரித்தேன். இரண்டு சங்கதிகளை அறிந்தேன். ஒன்று, என் மாமியார் செய்ததாம் ( துவையல் மட்டும்). இரண்டு, அதை எப்படிச் செய்வது என்று.

இதோ, இன்றைய கற்றல்:

கழுவி ஆய்ந்த பொதினா, கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை தயாராக வைத்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெயை விட்டு இரண்டு அல்லது மூன்று வர மிளாய்களை இட்டு (உங்கள் கார அளவைப் பொறுத்து ) வதக்கி, அதில் தழைகளை கொட்டி வதக்கவும்.

வதக்கிய இந்தக் கலவையோடு கொஞ்சம் கொடும் புளி (அல்லது நீங்கள் பயன்படுத்தும் புளி) சேர்த்து மிக்சியில் இடித்து அடித்து சாந்தாக ஆக்கவும்.

வாணலியில் மரச்செக்கு நல்லெண்ணயை தளர்வாக இருக்கும் அளவிற்கு விட்டு கடுகு தாளித்து, தாளிதம் செய்த எண்ணெய்யை சாந்தாக வைத்திருக்கும் துவையல் பாத்திரத்தில் ஊற்றி நன்றாகக் கலக்கவும்.

பொதினா – கொத்தமல்லி – கருவேப்பிலை துவையல் தயார். இட்லி, தோசை, சோறு என எதற்கும் சேர்த்துக் கொள்ள சுவையான உயிர்ச்சத்துள்ள துவையல் தயார்! பழகப் பழக தேவையான புளியின் அளவும் வரமிளகாய் எண்ணிக்கையும் பிடிபடும்.

வாழ்க! வளர்க!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
25.09.2019

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *