தமிழ் தமிழகப் பற்று!

சீன அதிபர் ஜீ ஜின் பிங்கின் இந்திய வருகையை சென்னையையொட்டிய மாமல்லபுரத்தில் நடத்துவதன் மூலம் ஒரே கல்லில் இரு மாங்காய் அடிக்க முயல்கிறார் பிரதமர் மோடி.

வழக்கமாக தில்லியில் நடைபெறும் இத்தகைய சந்திப்புகள் தெற்கே தமிழகத்தில் நிகழ்த்தப்படுவதற்கு இரு காரணங்கள். ஒன்று – சீன அதிபர் தில்லியில் இறங்கியதும் அவர் இந்தியாவில் இருக்கும் நாட்களில் தலாய் லாமா ஆதரவாளர்களும், திபெத்தியர்களும் கருப்புக் கொடி, போராட்டங்கள் என்று இறங்கலாம். மாமல்லபுரத்தில் வைத்ததால் அது தவிர்க்கப்பட்டு விடும்.

இரண்டு – கொஞ்ச நாட்களாகவே காட்டப்படும் பிஜேபியின் தமிழ்நாடு / தமிழ்ப்பற்று. இரண்டாம் முறை நாடாளுமன்ற வெற்றி என்ற அறிவிப்புகள் வரத்தொடங்கிய போதே, ‘காவிரி – நர்மதை இணைப்பு, தமிழகத்திற்கு நீர்’ என்று நிதின் கட்காரி சொன்னதில் தொடங்கிய இந்தத் தமிழ்ப்பற்று, பாரதியின் தமிழ் வரிகளை பிரதமர் தில்லியில் மேற்கோள் காட்டுவது, நிதியமைச்சர் புறநானூற்றுப் பாடலை நாடாளுமன்றத்தில் கோடிட்டுக் காட்டுவது, பிரதமர் ஐநா உரையில் கனியன் பூங்குன்றனாரைக் குறிப்பிடுவது, அடுத்த சில நாட்களில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சந்திப்பில் ஒரு தமிழரைக் கண்டதும் அவர் ‘வணக்கம்’ என்பது, ‘உலகின் தொன்மையான மொழி தமிழ் மொழி’ என பிரதமர் பொதுவெளியில் குறிப்பிடுவது எனத் தொடர்ந்து இப்போது தமிழகத்து மாமல்லபுரத்தில் வந்து நிற்பதாகவும் தோன்றுகிறது.

இப்படியே போனால்… ஸ்வச் பாரத்திற்கு காந்தி, ஒரே தேசத்திற்கு படேல் என காங்கிரஸின் தலைவர்களை சுவீகரித்துக் கொண்டது போல, தமிழக – தமிழ்ப்பற்றால் அடுத்து காமராஜரை எடுத்து வைத்துக் கொள்வார்கள் போல. எவர் கண்டார், இந்திய அளவிளான கல்வித் திட்டம், மதிய உணவுத் திட்டம், அணை கட்டி நீராதாரம் பெருக்குதல் என ஒரு திட்டத்தை அறிவித்து ‘காமராஜ் நிர்மான் ஆயோக்’ என்ற வகையில் ஒன்றை அறிவிக்கலாம்! இதுவும் நடக்கலாமே!

எது எப்படியிருப்பினும், தமிழகத்தை தமிழை நோக்கி நடுவனரசும் முக்கிய கட்சியும் கவனம் செலுத்துவது பெருமகிழ்ச்சிதானே!

– பரமன் பச்சைமுத்து
சென்னை
07.10.2019

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *