‘வீடுகளெல்லாம் வீடுகளல்ல…’ அல்லது ‘வீடெனப்படுவது யாதெனின்…’ – ‘கும்பளாங்கி நைட்ஸ்’ – திரை விமர்சனம்: பரமன் பச்சைமுத்து

67393670338997342621667302.jpg

‘அயலூர் சினிமா’:

திறந்த வானத்தின் அடியில் பரந்த ஏரி அதன் மூலையில் தரை வழிப்பாதையே இல்லாத சுற்றிலும் நீர்சூழ் வீடு. அந்த வீட்டிலிருந்து வெளியே பால் வாங்கப் போக வேண்டுமென்றாலும் பள்ளிக்குப் போக வேண்டுமென்றாலும் அல்லது அந்த வீட்டிற்கு எவர் போவதென்றாலும் படகில் பயணித்தே போக வேண்டும். பால் பொழியும் நிலவும், பகல் மஞ்சள் வெய்யிலும், அமாவாசை இருட்டு இரவும் பரந்த ஏரியின் வெளியோடு சேர்ந்து அடர்த்தி கூட்டியே தெரியும். பசிக்கிறதென்றால் எட்டி ஏரியில் வலையை வீசி அயிரை மீனையும் விரால் மீனையும் அள்ளி வந்து அரிந்து பொறித்து சுடச்சுட சோற்றோடு சாப்பிடலாம் எனும்படியான ஓர் அருமை வாழ்க்கை அங்கு. ‘அழகு கொஞ்சும் கேரளத்தில் இப்படி நமக்கொரு வீடிருந்தால் எப்படியிருக்கும்!’ என்று நாம் வியக்கும் அந்த வீட்டை, ‘அந்த பீ மேட்டில் இருக்கும் வீடுதான!’ என்று இழிகிறது உலகம். வீட்டையும் மதிப்பதில்லை வீட்டிலிருப்பவரையும் மதிப்பதில்லை சுற்றியுள்ள உலகம்.

பள்ளிக்குப் போகும் விடலைப் பையன், அவனை விடப் பெரிய இளைஞன், இருவரையும் விட மூத்த முதிர் கண்ணன் என மூன்று சகோதரர்கள். இரண்டாம் தாரத்திற்கு அவன் பிறந்தான், அந்த அம்மாவின் முதல் கணவனுக்கு இவன் பிறந்தான் என சிக்கலான உறவுகளில் பிறந்த அவர்களை, ‘உங்களுக்கு எத்தனை அப்பா எத்தனை அம்மாடா! இவனுவோ எல்லாம் அண்ணன்தம்பிதான். ஆனா, இவனுக்கும் அவனுக்கும் ஒரே அப்பா, வேற வேற அம்மா, அவன் அம்மாவும் இவன் அம்மாவும் ஒண்ணு ஆனா அவனுக்கு வேற அப்பா இவனுக்கு வேற அப்பா ‘ என்றெல்லாம் கேலி செய்யும் உலகின் அவச்சொற்களை அடிமனதில் தாங்கித் தனியாகவே வாழும் அவர்கள் குடித்து விட்டு கொலை வெறியோடு தங்களுக்குள்ளேயே எப்போதும்
அடித்துக் கொள்வார்கள். கேரளத்தின் நீர் சூழ் கும்பளாங்கி பகுதியின் புகழ்பெற்ற ரிசார்ட்டின் கூப்பிடு தூரத்தில் இருக்கும் இந்த வீட்டில் மூன்று ஆண்கள் இருந்தும் எதுவுமில்லாத வீடு வீடாக இல்லாத பெண்களேயில்லாத ஒரு பெறும் வெறுமை.

அதே ஏரியின் அந்தப்பக்கம் இருக்கும் ஒரு வீட்டில் பொருட்கள் இருக்கின்றன, வசதிகள் நிரம்பி இருக்கின்றன, பெண்கள் நிறைய இருக்கிறார்கள் எல்லாமும் இருக்கிறது. அந்த வீட்டில் இருக்கும் ஆணுக்கு ஒழுங்கான ஓர் உத்தியோகமும் இருக்கிறது. ஏரியின் இந்தப் புறத்து வீட்டிலிருக்கும் உதவாக்கரை குடிகார இளைஞனுக்கும், அந்தப்புற வீட்டில் இருக்கும் இளைய பெண்ணிற்கும் காதல் வளர்கிறது. அங்கே தொடங்குகிறது பிரச்சினை. அதற்குப் பிறகு நடைபெறும் சம்பவங்கள் ஒவ்வொன்றும், ஏனோதானோவென்று வாழ்ந்த அவர்களை வறுத்தெடுக்கிறது.

நாளையைப் பற்றி பிரஞ்ஞையேயில்லாமல் குடித்தும் கோபப்பட்டுமே வாழ்ந்து பழகிய அவர்கள் உணர்ச்சி மிகுதியால் செய்யும் காரியங்களால் ஏதேதோ நடந்து விட, தவித்து நிற்கிறார்கள். அதற்குப் பிறகு நடந்தேறும் காட்சிகளை படத்தில் நீங்கள் பார்க்க வேண்டும் என்பதால் இங்கே விவரிக்கவில்லை.

உணர்ச்சி் மிகுதியான கொடூரன்களாகத் திரிபவர்கள் உள்ளே கரிசனம் கொண்டவர்களாகவும், நாகரீக சாந்தர்களாக வலம் வருபவர்கள் உள்ளே கொடூரன்கள் என்றும் தெரிய வரும் காட்சிகளில் மனம் பதறவே செய்கிறது.

வாழ்நாள் முழுக்கத் தன்வீட்டிற்கு யாருமே வரமாட்டார்களா என்றோர் ஏக்கத்திலேயே வாழும் சின்னத் தம்பியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கி வழியும் காட்சிகளில் நாமும் நிமிர்கிறோம்.

எதுவும் இல்லாத, எல்லா விதத்திலும் ஒதுக்கப்பட்ட ஓர் இடம், வீடாக மலர்ச்சியடையும் போது படம் நிறைவடைகிறது.
வீடென்பது வெறும் கட்டிடமும் பொருட்களும் இல்லை, எல்லாமும் இருந்தும் அன்பில்லாத போது ஒரு வீடு விழுகிறது, எதுவும் இல்லாத இடத்தில் அடுத்தவர் மீது கரிசனம் வரும்போது அது வீடாக உருமாற்றம் அடைகிறது என்பதை சொல்லாமல் சொல்கிறது படம்.

எந்த பாத்திரத்திலும் நடிப்பேன் என்று இறங்கி நிற்கும் நம்ம ஊர் விஜய் சேதுபதிக்கு பெரியண்ணனாக இறங்கி அடிக்கிறார் ஃபகத் பாசில்.

உலக திரைப்பட விழாக்களில் தொடங்கி, உள்ளூரில் சமீபத்தில் திருவண்ணாமலையில் நடந்த உலக சினிமா விழா வரையில் இடம் பிடித்து நிற்கிறது ‘கும்பளாங்கி நைட்ஸ்’. அமேசான் பிரைம்மில் ஆங்கில சப் டைட்டிலோடு இருக்கிறது படம்.

மசாலாக் காட்சிகள், பஞ்ச் வசனங்கள் இல்லாமல் ஒரு நல்ல கதையை கொண்டிருக்கும் மெதுவான நீரோட்டம் போலப் போகும் எளிய சினிமாவை விரும்புகிறவர் நீங்கள் என்றால் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ உங்களுக்கான படம்.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘கும்பளாங்கி நைட்ஸ்’ – நல்ல நாவல் படித்த உணர்வு தரும்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *