‘பிகில்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

images-58562385580449821885..jpg

தந்தையின் கனவை தன் வழியே நிறைவேற்ற முடியாமல் சூழலால் தவற விட்ட தனயன் அதே கனவை போராடி தனது மக்களின் வழியே நிறைவேற்றினால், போடுறா ‘பிகில்’!

தோல்வி நிலையில் அடி மட்டத்தில் கிடக்கும் ஒரு விளையாட்டு அணியை வழி நடத்த ஒருவர் வருகிறார், நல்லது செய்ய வரும் அவருக்கு கீழே அணியிலும் எதிர்ப்பு மேலே கமிட்டியிலும் எதிர்ப்பு என்ற நிலையில் சமாளித்துப் போராடிப் போராடி அணியை ஆட வைத்து உயர்த்தி உச்ச வெற்றியில் மகிழ்ந்து அழுகிறார் என்ற கதைக்களனில் நடிகர் பிராட் பிட் நடித்து வெளியான ஹாலிவுட் ஸ்போர்ட்ஸ் படமான ‘மணி பால்’ படத்தின் கதையை ஒத்த கருவும், ஒடுக்கப்பட்ட மக்களை உயர்விக்க விளையாட்டே சிறந்த வழி என்ற நெல்சன் மண்டேலாவின் கருத்தின் அடிப்படையும், ஒரு தமிழ் படத்து மாஸ் ஹீரோவிற்குத் தேவையான மசாலாக்களும் கலந்து கட்டி அட்லீ செய்திருக்கும் படம்.

விஜய் நாளுக்கு நாள் இன்னும் அழகாகிக் கொண்டே போகிறார், இன்னும் நன்றாக ஆடுகிறார் (குறிப்பாய் நயன்தாராவோடு போடும் அந்த திருமண விருந்து குத்தாட்டம், செம ரகளை). படம் முழுக்கத் தேவையானதைத் தந்திருக்கிறார். பட்டாசு கொளுத்தும் முதல் காட்சித் தொடங்கி படம் முழுக்க ரசிகர்கள் விரும்புவதை விஜயின் மூலமாகத் தந்து கொண்டேயிருக்கிறார் அட்லீ.

விஜய் கொஞ்சம் குரல் மாற்றி தொணி மாற்றி முயற்சி செய்யும் போதெல்லாம், ஏனோ நவரசநாயகன் கார்த்திக்கின் பாணி நினைவுக்கு வரும். இதிலும் அப்பா பாத்திரத்தின் காட்சிகளில் அதே நினைவு வருகிறது.

நயன்தாரா அழகு. நயன்தாராவும் விஜய்யும் சேர்ந்து செய்யும் மழைக் காதல் பாடலை அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள் ஓர் ஆல்பம் போல.

கரகர குரலோடு ஷாக்கி ஷெராப் உட்பட நிறைய வில்லன்கள்.

வன்முறைக்குப் பதில் வன்முறை தீர்வு அல்ல, உள்ளிருக்கும் திறமையை காட்ட முகத் தோற்றம் முக்கியம் அல்ல என நிறைய கருத்துக்களைப் படம் முழுக்கத் தந்துள்ளனர்.

ஒரு ‘கோச்’சே முடிவெடுத்து, தான் விரும்பும் இரு விட்டுப்போன வீராங்கனைகளை தேசிய அணியில் சேர்த்து விட முடியுமா, பாதுகாக்கப்பட்ட தேசிய கால் பந்து சம்மேளனத்தின் வளாகத்தின் அலுவலகத்திற்குள்ளே ராயபுரம் ரௌடிகள் சர்வ சாதாரணமாக டீக்கடைக்கு போய் வருவது போல் போய் வர முடியுமா போன்ற நெருடல்களைத் தாண்டிப் போனாலும் படத்தின் நீளம் ஒரு பலவீனமாக நிற்கிறது. நறுக்கி நச்சென்று வைத்திருக்கலாம்.

வி – டாக்கீஸ் வெர்டிக்ட் : ‘பிகில்’ – விஜய் ரசிகர்கள் ஊதிக் கொண்டாடும் பிகில்; பார்க்கலாம்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

Www.ParamanIn.com

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *