தினமணி – “கம்ப ராமாயணம் படித்தால் கடவுளை உணரலாம் – பரமன் பச்சைமுத்து”

2014-12-23 23.38.38

 

 

 

கம்பன் கழகம், திருப்பத்தூர் 2014-12-23 23.38.38

 

First Published : 07 September 2014 04:04 AM IST

கம்ப ராமாயணத்தைப் படித்தால் கடவுளை உணரலாம் என திருப்பத்தூர் கம்பன் விழாவில் பரமன் பச்சைமுத்து பேசினார்.

திருப்பத்தூர் கம்பன் கழகத்தின் சார்பில் 36ஆம் ஆண்டு கம்பன் விழா ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி அரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு கம்பன் கழக அறக்கட்டளைத் தலைவர் எஸ்.எஸ்.மணியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை சரஸ்வதி ராமநாதன், எம்எல்ஏ கே.ஜி.ரமேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

“கம்பனில் முத்தமிழ்’ எனும் தலைப்பில் பேராசிரியை சரஸ்வதி ராமநாதன் பேசியதாவது: உலகில் அனைத்து மொழிகளிலும் இயல் மொழி, நாடக மொழி இருக்கிறது. ஆனால் மொழியையே மூன்றாகப் பிரித்து அதனை இயற்றமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழாக வகுத்தவன் தமிழன்தான். இதில் நடுவில் இசை இருப்பது ஏன் என்றால் இயலுக்கும் இசை வர வேண்டும், நாடகத்துக்கும் இசை வேண்டும்.

திருக்குறளையும் வள்ளுவன் மூன்றாகப் பிரித்து அதில் பொருளை நடுவில் வைத்தான். அறம் செய்யவும் பொருள் வேண்டும், இன்பத்தை அனுபவிக்கவும் பொருள் வேண்டும் என்பதால்தான். தமிழுக்கு சந்தமும், இசையும் சேர்த்தால் அழகு.

ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ராமன், ராவணன், சீதை, லட்சுமணன், மன்டோதரி, சூர்ப்பணகை, அனுமன், கும்பகர்ணன் உள்ளிட்ட அனைத்து கதை மாந்தர்களின் தன்மைக்கேற்ப தாளஜதியில் எளிய சந்தங்களால் கவி பாடி அதில் இயலையும், இசையையும், நாடகத்தையும் பாடல்களாக அளித்த கம்பன் முத்தமிழ் வள்ளல் ஆவார் என்றார்.

51 ஆண்டுகளாக மேடைப் பேச்சில் தமிழை வளர்த்துவரும் சரஸ்வதி ராமநாதனுக்கு கம்பன் அறக்கட்டளை சார்பில் முத்தமிழ் அரசி எனும் பட்டம் நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது.

பின்னர் கம்ப ராமாயணம் தொடர்பாக பள்ளி மாணவர்களுக்கு விநாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி, கல்லூரி அளவில் நடைபெற்ற கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் மாற்று நாடக இயக்கத்தினர் நடத்திய பறை இசை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மாலை நடைபெற்ற சிந்தனையுரையில் “கம்பனிடம் கற்கிறேன்’ என்ற தலைப்பில் பரமன் பச்சைமுத்து பேசியதாவது: கவியரசு கண்ணதாசன் ஒரு காலத்தில் கடவுளை மறுக்கும் நாத்திகத்தைப் பின்பற்றி வந்தார்.

பின்னர் கம்ப ராமாயணத்தைப் படித்து அதன் விளக்கங்களை கிருபானந்த வாரியாரிடம் கேட்டறிந்த பின் ஆத்திகத்துக்கு மாறினார்.

அதன் பின்னர் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலை எழுதினார். கம்ப ராமாயணத்தைப் படிக்கும் யாவரும் கடவுளை உணர்வார்கள். கம்ப ராமாயணத்தைக் கேட்பவரும் கடவுளை அறிவர்.

இதைத்தான் ராமாயணம் படிக்குமிடம், சொல்லப்படும் இடங்களில் ராமன் இருப்பதாகவும் அவ்விடத்தில் தானும் இருப்பதாகவும் அனுமன் கூறுகிறார்.

முன்னதாக எஸ்.ரவிக்குமார் வரவேற்றார். பரமன் பச்சைமுத்துவை அறிமுகப்படுத்தி கம்பன் அறக்கட்டளை உறுப்பினர் ம.மதியழகன் உரையாற்றினார்.

இரவு 7 மணியளவில் புலவர் மா.இராமலிங்கம் தலைமையில் “கம்ப ராமாயணத்தில் மேலோங்கி நிற்பது உறவு முறையே’ என்ற தலைப்பில் முனைவர் பி.மகாலிங்கத்தை நடுவராகக் கொண்டு வழக்காடு மன்றம் நடைபெற்றது. த.ரங்கராஜா, வி.அசோக்குமரன் வழக்காடினர்.

http://www.dinamani.com/edition_vellore/vellore/2014/09/07/%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5/article2418977.ece

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *