வியக்கிறேன்

‘அப்பா… அங்க பாரு, ஃப்ளைட் நிக்குது!’

விமான நிலைய வாயிலிலிருந்து ஓடுதளத்திற்கு பேருந்தில் வரும் போது, கண்ணாடியின் வழியே தூரத்தில் நிற்கும் விமானமொன்றைப் பார்த்து பரவசப்பட்டு கூச்சலிடுகிறான் சிறுவன். மொத்த பேருந்தும் புன்னகைக்கிறது.

‘அப்பா… அங்க பாரு கபாலி ஃப்ளைட்!’

ஸ்பைஸ்ஜெட் விமானமொன்றைப் பார்த்துக் கூவுகிறான்.

‘அப்பா, நம்ம போற ட்ரூஜெட் எப்பப்பா வரும்?’

பேருந்து நின்று விமானத்தில் ஏறுகிறோம். தனது இருக்கையில் இருந்த ‘டீ டேபிளை’ இறக்கி விரித்து அதிசயப் படுகிறான்.
‘அப்ப்ப்பாபாபா… இங்க பாரு!’

அவனைக் கடந்து என் இருக்கைக்கு வருகிறேன்.

குழந்தைகள் கொண்டிருக்கும் வெளிப்படுத்தும் ஓர் உன்னத உணர்ச்சி – வியப்பு! குழந்தைகளுக்கு எல்லாமே வியப்புதான். வியக்கும் மனிதன் வாழ்வை உற்று ஊன்றிக் கவனிக்கிறான். வியக்கும் போது உண்மையில் நாம் வாழ்கிறோம்.

எந்திர கதியில் எந்திரமாக ஓடும் ஒருவனை வியப்பு சில நொடிகளில் அடித்து மனிதத்திற்கு அழைத்து வந்துவிடுகிறது.

அடேயப்பா!

நான் கடைசியாக எப்போது வியந்தேன் என்று வியக்கிறேன்!

  • பரமன் பச்சைமுத்து
    ட்ரூஜெட், சென்னை விமான நிலையம்
    16.02.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *