என் குரங்காசனக் காரணம்…

வள்ளியம்மைப் பாட்டி நல்ல உயரமும் திடகாத்திரமான உடலமைப்பும் கொண்டவர். உழவு தவிர நெல் விதை விதைத்தல்,  நடவு, களை பறித்தல், அறுவடை, உளுந்து – பயிறு விதைத்தல், உளுத்தஞ்செடி பிடுங்குதல் என எல்லா வேலைகளிலும் ஆட்களோடு சேர்ந்து தானும் இறங்கிச் செய்பவர். அறுவடை முடிந்த கோடை கால வயல்களில் மாடுகளைக் கூட்டிப் போய் மேய விடுபவர். சிறுவனான எங்களை மாடுகளை மேய்க்கச் சொல்லி வற்பறுத்தி படுத்தி எடுப்பவர். 

விவசாயம் சார்ந்த வேலைகள் செய்பவர்களே அதிகம் இருந்த அந்நாளைய மணக்குடியில், வள்ளியம்மைப் பாட்டி வேறொரு சங்கதிக்கும் பிரபலம்.  குழந்தைகள் அழுது கொண்டே இருக்கிறது, கழுத்தில் சுளுக்கு, முதுகு பிடித்துக் கொண்டது என மணக்குடி மக்கள் பாட்டியைத் தேடி வருவர். பாட்டியின் கை மாயங்கள் செய்யும்.

குடலேற்றம், சுளுக்குப் பிடிப்பு, தசை பிடிப்பு என்று வருபவர் எவரையும் பலகையில் உட்கார வைத்து அல்லது தரையில் படுக்க வைத்து  நல்லெண்ணெய்யை வழிய வழியத் தடவி மெதுவாக ஆனால் ‘ஐய்யய்யோ…அம்ம்ம்ம்மாஆஆஆஆ…!’ என்று அவர்கள் கத்தும்படி அழுத்தமாக வழித்து விடும் வள்ளியம்மை பாட்டி, எல்லாம் முடிந்த பிறகு செய்வது நெட்டி முறிக்க வைப்பது. ‘எந்திரிப்பா. கைய அப்படி நல்லா ஒதறு. காலை நல்லா ஒதறு!’ என்று பாட்டி சொல்வதைக் கேட்டு மெதுவாக முயற்சித்து அவர்கள் செய்யும் போது ‘மளுக்’கென்று முறியும் நெட்டி. நெட்டி வந்து விட்டால், ‘முடிஞ்சது போ!’ என்று சொல்லிவிட்டு திரும்பிக் கூடப் பார்க்காமல் தோட்டத்துப் பக்கம் மாட்டைக் கவனிக்கப் போய் விடுவார் பாட்டி.

சித்த மருத்துவர் நாகராஜனிடம் முதுகு வலி, கை வலி, கால் வலி, கழுத்துப் பிடிப்பு என வருபவரிடம் தொக்கண சிகிச்சை செய்யும் போதே, முதுகுத் தண்டுவடத்தில் அழுத்தி அழுத்தி நெட்டி வரவழைப்பதை கவனித்திருக்கிறேன்.

சில ஆசனங்கள் பயிற்சி செய்யும் போது மிகச் சாதாரணமானவையாகத் தெரிகின்றன, உண்மையில் அவை ஆயிரம் நல்லதை செய்கின்றன என்பது தொடர்ந்து பயிற்சி செய்யச் செய்ய பின்னாளில் புரிகிறது.

‘மர்கடாசனா’ எனப்படும் குரங்கு ஆசனம் உடலைத் தரையில் கிடத்தி மல்லாக்கப் படுத்து உடலின் மேல் பாகத்தையும் கீழ்ப்பாகத்தையும் எதிரெதிர் பக்கம் அழகாக திருப்பி (ட்விஸ்டிங்) அதே நிலையில் சிறிது நேரம் நிறுத்தி வைக்கும் ஒரு பயிற்சி.  முதுகுத் தண்டிற்கான பயிற்சி, ‘லோயர் பேக்’ சரி செய்யும் பயிற்சி என்றெல்லாம் சொல்லப்படும் இந்த ஆசனம் அவற்றையெல்லாம் தாண்டியது என்பது தொடர்ந்து பயிற்சி செய்வதில் அனுபவத்தில் புரிகிறது.

செரிமானத்தை சரி செய்யும், இடையில் எங்கோ நிற்கும் தேவையற்ற வாயுவை நீக்கும், மலச்சிக்கலைப் போக்கும் என்பதெல்லாம் உயர்நிலை போதகர்கள் சொல்லும் உபரிச்செய்தி. இருந்து விட்டுப் போகட்டும்.  எனது காரணம் எப்போதும் வேறு.

எந்த தேசத்தில் இருந்தாலும், ஓட்டப்பயிற்சி எடை தூக்கிச் செய்யும் தசை உறுதிப் பயிற்சி, நடைப் பயிற்சி என எந்த வகை உடற்பயிற்சி செய்தாலும், இறுதியில் மூச்சுப்பயிற்சிக்கு முன்னே இந்த ஆசனத்தை நான் செய்வதற்குக் காரணம்…

உடலை தரையில் கிடத்தி மல்லாக்கப் படுத்து இடுப்பிற்குக் கீழ்ப்பகுதி இந்தப்பக்கம் இடுப்பிற்கு மேல் பகுதி அந்தப் பக்கம் என திருப்பி நிறுத்தி மூச்சைக் கவனிக்கும் போது ஒரு சமயத்தில் ‘மளுக்’கென்று நெட்டி முறிகிறது. ‘முடிஞ்சிது போ!’ என்று பக்கத்தில் நின்று வள்ளியம்மை பாட்டி சொல்வது போல் உள்ளது.

– பரமன் பச்சைமுத்து
குளோபல் ஹாஸ்பிட்டல், பெரும்பாக்கம், சென்னை
16.03.2020

#Manakkudi
#ValliyammaiPaatti
#Markatasana
#MonkeyPosture
#Yoga
#ParamanYoga

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *