ஜெயகாந்தனின் – ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ – நூல் மீள் வாசிப்பு : பரமன் பச்சைமுத்து

wp-15870241563715704037430440531192.jpg

வேட்டியை இடுப்பில் கட்டாமல்  போர்வையைப் போல் மேலுக்குப் போர்த்திக் கொண்டு கோவணத்துடன் திரியும் பல மனிதர்களையும் சில தெருக்களையும் கொண்ட
பேருந்து கூட நுழையாத ஒரு படு சிற்றூருக்கு நடை உடை வண்ணம் வடிவம் வாழ்க்கை முறை என அந்த ஊருக்கு எதிலுமே சம்பந்தமுமில்லாத வகை மனிதனொருவன் வருகிறான்.   அவன், ஒரு மணியக்காரர் வீடு, போஸ்ட்(ஆஃபீஸ்) ஐயர் வீடு, கிராமணி வீடு, நாயக்கர் வீடு என்று சில வீடுகளால் ஆன தெருவில் பலகாலமாய்ப் பாழடைந்து கிடக்கும் ஊரே மறந்து போய்விட்ட பாழடைந்த  வீட்டைத் தேடி வருகிறான்.  ‘அந்த வீட்ல ரொம்ப வருஷம் முன்னால ஒரு பரியாறி தூக்குப் போட்டுக்கிட்டான்ப்பா!’ என்று எதிர்வீட்டு பெண்மணி சொல்லும் போது, ‘ம்ம்… அவன் பேரு பழனி!’ என்று கூறி அதிரச் செய்கிறான்.

கொச்சைத் தமிழும் அந்நிய பாவனைகளும் ஊருக்கு சம்பந்தமேயில்லாத வெண்மை தேகமும் கொண்ட அவன் யார், எதற்கு வந்திருக்கிறான், அவன் பின்னணி என்ன போன்றவற்றையெல்லாம் பொதுவாக விறுவிறுப்பேற்றி கதையின் இறுதியிலேயே தருவார்கள். அப்படியல்லாமல் முதலிலேயே முடிச்சுகளை அவிழ்த்து விட்டு அழகாக நிகழ்வுகளை விவரித்துப் போகிறார் ஜெயகாந்தன்.

பள்ளிக்கே சென்று படிக்காதவன், இருமதங்களைப் பின்பற்றும் தாய்தந்தையரால் வளர்க்கப்பட்டவன், தந்தை தாயின் அனுபவங்களை அப்படியே உள்வாங்கியவன், உலகத்தை அதன் உண்மைத் தன்மையை எப்போதும் வியப்புடனே வேடிக்கைப் பார்ப்பவன், அப்பா இறந்த மூன்றாம் நாளில் கூட அடுத்த பெரிய காரியத்தை நோக்கி நகர்பவன், எதற்கும் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் உணர்ச்சிகளை மிக அழகாக மேலாண்மை செய்பவன் என இன்று ஆன்மீக போதனைகள் செய்யும் குருமார்கள் சொல்லும் அத்தனை குணங்களையும் கொண்டிருந்த ஒரு பாத்திரமாக நிற்கிறான் கதாநாயகன் ஹென்றி. கவனிக்கப் பட வேண்டிய முக்கிய சங்கதி, இது விகடனில் தொடராக வந்து பிற்பாடு நாவலாக வந்த ஆண்டு 1971! அதுவும் சதாசிவம் பிள்ளை, தேவராஜன் நாயக்கர் மாதிரி, அக்காலங்களில் நினைத்துப் பார்க்கவே முடியாத ‘ஹென்றி பிள்ளை’!

முரட்டுத் தனமாய் தெரியும் துரைக்கண்ணுக்குள் இருக்கும் பண்பட்ட மனிதன், தான் இந்த ஊரில் எல்லாரையும் விட மேலானவன் எனக் காட்டிக்கொள்ள எவரோடும் அதிகம் பழகாத ஆசிரியர் தேவராஜன், ஜிப்பா பைஜாமா வெள்ளை வெளேரென்ற வடிவத்தில் வரும் பர்மிய கிறிஸ்துவ ஹென்றி, ஊரே மதிக்கும் பெரிய மனிதர் நாட்டாமைக்காரர், முழு நிர்வாணமாகத் திரியும் மனநிலை பிறழ்ந்த அழகிய இளம்பெண், தம்பியின் திருமண வாழ்வின் பிரிதலுக்குக் காரணமான நாயக்கர் வீட்டு தெலுங்கு பேசும் அக்காம்மா, போஸ்ட் ஆஃபீஸ் நடராஜ ஐயர், கோவிலில் கதாகாலட்சியம் செய்த சைவநெறி கொண்ட புலவர் வீட்டுப் பிள்ளை கடைசியில் மிலிட்டரி வாழ்க்கை கிறிஸ்துவ மனைவி என எல்லாரையுமே கடைசியில் முற்றிலும் வேறு மனிதர்களாகக் காட்டப்படுவது ஜெயகாந்தனின் நச்.

‘ப்பா!’ என்று வியக்க வைக்கும் செறிவுள்ள வாழ்வியல் கருத்துக்கள், ‘பொளிச்’ என்று அறையும் நிதர்சனங்கள், ‘உணர்க்கை’ போன்ற வித்தியாச சொல்லாடல்கள், எல்லா இலக்கணங்களையும் உடைக்கும் கதாபாத்திரங்கள் என தன் எழுத்தால் கொண்டாட வைக்கிறார் ஜெயகாந்தன்.

பாத்திரங்கள் நம்முன்னே பேசுகின்றன, நிகழ்வுகள் நம் முன்னே விரிகின்றன. இப்படியொரு நாவலை அன்றே 1971ல் எழுதியிருக்கிறாரே மனிதர் என்று வியப்பு வருகிறது. கமலஹாசன் தொடங்கி இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து என திரையுலக ஆளுமைகளும், எழுத்துத் துறை பேராளுமைகளும் ஏன் ஜெயகாந்தனை கொண்டாடுகிறார்கள் என்பது புரிகிறது.

இலக்கணப்படித் தவறென்றாலும் அப்படித்தான் பெயர் வைப்பேன், ஏன் வைத்தேன் என்று ஜெயகாந்தனே விளக்கியிருப்பது அவரது உறுதியைக் காட்டுகிறது.

ஜெயகாந்தனின் விருதுகள் பெற்ற நூல்கள், மக்களால் கொண்டாடப்பட்ட நூல்கள் என பல இருந்த போதிலும், இதுவே தான் எழுதியதில் தனக்கு மிகவும் பிடித்தது என்று அவரே சொல்லும் நூல் இது.

இந்த தலைமுறை நிச்சயம் வாசிக்க வேண்டிய நூல் இது.

‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’
ஆசிரியர் : ஜெயகாந்தன்
காலச்சுவடு பதிப்பகம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
16.04.2020

Facebook.com/ParamanPage

#JKbooks
#Jayakandhanbooks
#ParamanReview
#GoodTamilBooks

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *