‘புள்ள வூடு’ அல்லது ‘நடேசம் பிள்ளை’

wp-16011008007623596063854740053067.jpg

மணக்குடி ஒரு சிறு விவசாய கிராமம். அஞ்சலகம் கூட அடுத்த ஊரான குறியாமங்கலத்தில்தான் என்றால் மருத்துவமனையைப் பற்றிக் கேட்கவா வேண்டும்!

மணக்குடி, குறியாமங்கலம், ஆயிபுரம் என்ற மூன்று கிராமங்களுக்கும் நடேசம் பிள்ளை என்றழைக்கப்படும் ஆர்ஐஎம்பி முடித்த ஹோமியோபதி கற்ற நடராஜன் பிள்ளை மருத்துவம் பார்த்தார்.

கிழக்குப் பார்த்த நத்தகோகாபால் பிள்ளையின் வீட்டு் வடவண்டைச் சுவற்றை வலது பக்க ஆதாரச் சுவராக வைத்து சரியும் கூறையிறக்கி,  சன்னல்களும் நுழைவாசலும் கொண்ட, தாங்கி நிற்கும் சுவரெழுப்பி இடுப்புயர மர விசைப்பலகைகள், கட்டில்கள் இட்டு மருத்துவமனையாய்  உருவாக்கியிருந்தார் நடேசம்பிள்ளை. 

கண்ணாடி சட்டம் போடப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் படமும், அண்ணல் காந்தி படமும் சுவரில் மாட்டி வைத்திருப்பார். அண்ணாவின் அபிமானி் அவர். அந்தத் தெருவே அப்படித்தான் என்று சொல்லலாம்.

இந்த மூன்று ஊர்களைப் பொறுத்தவரையில் அவர் வைத்தியம் பார்க்காத குடும்பமே இல்லையென்று சொல்லிவிடலாம்.
‘ஹாஸ்ப்பிட்டல்’ ‘மருத்துவமனை’ என்றெல்லாம் விளித்ததில்லை மக்கள். ‘புள்ள வூட்டுக்குப் போய் ஒடம்ப காட்டிட்டு வர்றேன்!’ என்பது இயல்பு வழக்கு இம்மூவூரிலும். ( (நடேசம்) பிள்ளை வீடு = புள்ள வூடு).

கும்பகோணத்தில் இருந்த ஏதோவொரு சைவப்பிள்ளை மருத்துவரை குருவாகக் கொண்டு மருத்துவம் கற்றார் நடேசம் பிள்ளை. அவரே தயாரிக்கும் மருந்துகளும், வாங்கி வைத்திருந்து கொடுக்கும் மருந்துகளும் புகழ்பெற்றவை, தனிச்சிறப்பு மிக்கவை. திரைப்படங்களில் வரும் அஞ்சு ரூபாய் டாக்டருக்கெல்லாம் முன்னோடிக்கும் முன்னோடி நடேசம் பிள்ளை.

எழுபதுகளின் இறுதிகளில் என்பதுகளின் தொடக்கத்திலிருந்து,
காயங்களுக்கு அவரே தயாரித்துக் கொடுக்கும் ‘குரங்கு பிளாஸ்திரி’ மக்களிடையே வெகு பிரபலம். எட்டணா எனப்படும் ஐம்பது காசைத் தந்தால் ஒரு சிறிய தகர டப்பா நிறைய பிசின் போன்ற அந்தக் கருப்புக் களிம்பைத் தருவார். பேனா கத்தியின் முனையால் சிறிது மருந்தையெடுத்து, துணியை சிறு வில்லையாக்கி அதில் பூசி விட்டால் குரங்கு பிளாஸ்திரி தயார். அதை அப்படியே காயத்தின் மீது ஒட்டி விட வேண்டியதுதான்.

சொத்துப் பிரச்சினை, கணவன் மனைவி சண்டை என்று திடீர் உணர்ச்சியால் உந்தப்பட்டு, பயிருக்கு அடிக்கும் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்று குற்றுயிரும் கொலை உயிருமாய் வரும் நூற்றுக்காணக்கானவர்களை கிடத்தி வாந்தியெடுக்க வைத்து, செலைன் ஏற்றிப் பிழைக்க வைத்திருக்கிறார் நடேசம் பிள்ளை.  ஹோமியோபதியோடு பென்சிலின், பாராசிட்ரமால், குரோசின் என கலந்து காலத்திற்கேற்ப வைத்தியம் பார்த்து மக்களை குணப்படுத்தினார்.

இந்த மூன்று ஊர்களின் ஒவ்வொரு மனிதரும் அவருக்குத் தெரியும், ஒவ்வொரு மனிதருக்கும் அவரைத் தெரியும். சாப்பிடுவதில் என்பதைவிட ருசியான உணவுகள் புசிப்பதில் அலாதி ஆர்வம் மிக்கவர். ‘சிவா, உன் கல்யாணத்துல சமையல் யாரு? அந்த சமையல்காரர் சிவாவா? அவன் ஒரு எடத்துல நல்லா சமைக்கறான், ஒரு எடத்துல சரியாவே பண்ண மாட்றான். பாப்போம்!’ என்று பல மாதங்கள் கழித்து வரப்போகும் திருமண விருந்தில் இப்போதே ஆர்வம் காட்டுமளவுக்கு உணவு பிடிக்கும் அவருக்கு.

அவர் முன்னால் வளர்ந்த என்னைப் போன்றவர்கள் பிழைப்பிற்காக நகரத்துக்குப் போன பின்னும் ஊருக்கு வரும் போதெல்லாம் அவரைப் பார்ப்பதற்காக அவரின் மருத்துவமனைக்குப்  போவோம்.  பல ஆண்டு கதைகளை அனுபவங்களை நினைவு படுத்தும்  அண்ணாவின் படத்தையும் காந்தியின் படத்தையும் கடந்து சென்று அவரைப் பார்த்தால், வெள்ளை முண்டா பனியன் மீது லுங்கியை நெஞ்சுக்குக் கொஞ்சம் கீழே கலைஞர் கருணாநிதி மாதிரி கட்டிக்கொண்டிருப்பவர், தன் சதுரவடிவ மூக்குக் கண்ணாடியின் வழியே நம்மைப் பார்த்து அடையாளம் கண்டு கொண்டாடி மகிழ்வார்.

நடேசம் பிள்ளை இயற்கை எய்தினார் என்று செய்தி வந்த போது, நான் ஜப்பானின் டோக்கியோவில் பணி புரிந்து கொண்டிருந்தேன்.  இந்த மூன்று ஊர்களிலும் எத்தனையோ பேர்களின் உயிரைக் காப்பாற்றியவர் உயிரை விட்ட போது ஒன்றும் செய்ய முடியாமல் மூன்று ஊர்களும் அழுதன. புண்ணியவான் போய் சேர்ந்து விட, வெளியூரில் பாலிமர் நிறுவனமொன்றில் வேலை பார்த்த இளைய மகன் நெடுஞ்செழியன் ஊருக்கே திரும்பி வந்து விவசாயத்தில் கவனம் செலுத்த, மூத்தமகன் காமராஜ் நடேசம் பிள்ளையின் மருத்துவத்தை கையிலெடுத்துக் கொண்டார்.

காமராஜ் அவர்களின் மகள் தாத்தா வழியையே தேர்ந்தெடுத்து, சென்னை சாய்ராமில் சித்த மருத்துவம் பயில்கிறார்.

ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும், நடேசம் பிள்ளையின் அந்த ‘புள்ள வூடு’ மருத்துவமனையைக் கடக்கும் போதும், ‘சிவா…!’ என்று அழைக்கும் நடேசம் பிள்ளை மனதில் வந்து போவார். சிறுவனான என்னை கால்சட்டையை இறக்கி இடுப்புயர விசுப்பலகையின் மேல் குப்புறப் படுக்க வைத்து பிட்டத்தின் மேல் புறம் ஊசி போட்டது நினைவுக்கு வரும். ஊசி போட்டுக் கொள்ள பயந்து அழும் பிள்ளைகளிடம், ‘பச்சமுத்து வாத்தியார் பையன் சிவா வருவான், சூத்தாம்பட்டையை அப்படித் தட்டிட்டு ஏறி படுத்துட்டு ஊசி போடு தாத்தான்னு சொல்வான்!’ என்று என்னைப் பற்றி சொல்லி பயம் தெளிய வைப்பார் என பாலதண்டாயுதம் சித்தப்பா சொன்னது நினைவுக்கு வரும்.

ஒருவர் காலை ஒருவர் தொட்டுக்கொள்வார்களோ என்று நாம் நினைக்கும் அளவிற்கு என் தந்தையும் நடேசம் பிள்ளையும் ஒருவரையொருவர் மதித்து நடப்பர்.
என் திருமணப் பத்திரிக்கையை கொடுப்பதற்கு போயிருந்த போது ‘புள்ள வூட்டில்’ மாட்டியிருந்த அந்த அண்ணா படத்தைக் காட்டி என்னோடு வந்திருந்த என் அப்பா சொன்னார், ‘பொட்டே வச்சுக்காத பொட்டே வைக்கக் கூடாதுன்னு பரப்பிய அண்ணாவோட படத்துக்கு பொட்டு வச்சிருக்காரு பாரு நம்ம டாக்டர்!’

அப்பா சிவனடி சேர்ந்து ஒன்பது மாதங்கள் ஓடி விட்டன. இயற்கை எய்துவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு ‘ஒடம்பு ஒரு மாதிரியா இருக்கு’ என்று சொல்லி சித்தாப்பாவோடு ‘புள்ள வூட்டுக்கு’ போய் காமராஜ் பிள்ளையிடம் ஊசி போட்டுக்கொண்டு வந்தார் அப்பா. நடேசம் பிள்ளை வைத்த அந்த அண்ணா படத்தையும் காந்தி படத்தையும் பார்த்திருப்பார் அப்பா.

இரு நாட்களுக்கு முன்பு எதற்கோ அங்கு போய் வந்த குட்டி அங்கிருந்து படமெடுத்து அனுப்பியிருந்தான்.  புள்ள வூட்டின் சுவரில் அப்பாவின் படம் மாட்டப்பட்டுள்ளது. நின்ற நிலையில் படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார் அப்பா, அதே சுவற்றில் நடேசம் பிள்ளை பொட்டிட்ட அதே அண்ணா, காந்தி படங்களுக்கு அருகில்.

– பரமன் பச்சைமுத்து
புதுச்சேரி,
26.09.2020

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *