அச்சம் தவிர், ஆளுமை கொள் – Part 3

aalumai3.jpg - Copy

Achcham Thavir 3

பிரபல வார இதழில் பிரசுரமாகி வரும் தொடர்:

‘எல்லாம் தெரிந்தவர் என்று எவருமே கிடையாது,’ ‘நீங்கள் உங்களிடம் கேட்டுக்கொள்ள வேண்டிய முக்கிய கேள்வி,’ ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே,’ அதற்கு தயாராவது எப்படி ஆகிய முக்கிய மூன்று விஷயங்களை சென்ற வாரம் பார்த்தோம்.

“பரமன் பச்சைமுத்து அவர்களுக்கு, வணக்கங்கள். தங்கள் தொடர் எனக்குள்ளே ஒரு தெம்பை தருகிறது. பெரிய தெளிவை தருகிறது. நன்றி. எங்கள் ஊர்ப் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன். ஆங்கிலம் சரளமாய் பேசத்தெரியாது. ஒரு பெரிய தடைக்கல்லாய் உள்ளது. நான் முன்னேறவேண்டும்.” என்று கேட்டிருந்தார் பொள்ளாச்சி பகுதியிலிருந்து திரு. சாந்தலிங்கம். இந்த வாரம் அவரது கேள்வியைப் பார்ப்போம்.

….

“எல்லோரும் ஆங்கிலத்தில் பேசுகிறார்கள். சிலர் ‘ஹவ் ஆர் யூ?’ என்கிறார்கள், இன்னும் சிலர் ‘ஹவ் டூ யூ டூ?’ என்கிறார்கள். நான் ‘ஹவ் ஆர் யூ’ சொல்ல வேண்டுமா, ‘ஹவ் டூ யூ டூ’ சொல்லவேண்டுமா? எங்கே எதை சொல்வதென்று தெரியவில்லையே. ‘தேங்க்யூ’ என்று எவரேனும் சொன்னால் ‘நோ மென்ஷன்’ சொல்லவேண்டுமா, ‘வெல்கம்’ என்று சொல்ல வேண்டுமா? ஐயோ இன்னும் சிலர் ‘எனி டைம்’ என்கிறார்களே! நான் எதை சொல்லிவைப்பது? ஐயோ, இந்தக் குழப்பங்களால், என் மனம் தவிக்கிறது. நான் படித்தது தமிழ் மீடியம். எனக்கு இதெல்லாம் தெரியவில்லையே!” – இது கற்றது தமிழ் என்றிக்கும் எண்ணற்ற என் தமிழ் தேச இளைஞர்களின் வேதனை.

உங்களுக்கான முதல் விஷயம்.

  1. ஆங்கிலம் என்பது ஒரு மொழி, அறிவு அல்ல!

கேரளத்தில் வசிப்போர் மலையாளத்தில் பேசுவர். ஜெர்மனியில் இருப்போர் ஜெர்மனில் பேசுவர், சீனாவில் இருப்போர் சீன மொழில் பேசுவர், வட இந்தியாவிலிருப்போர் பெரும்பாலானோர் ஹிந்தியில் பேசுவர். அதைப்போலவே ஆங்கிலேயர்கள் பேசிய மொழி ஆங்கிலம். அவர்கள் போகும் இடங்களையெல்லாம் ஆக்கிரமித்து ஆண்டபோது விட்டுவிட்டுச் சென்ற மொழி ஆங்கிலம். இன்றைய உலகத்தின் தேவையான ஒரு பொதுமொழியாய் மாறிவிட்டது. இருந்துவிட்டு போகட்டும். நாம் புரிந்து கொள்ளவேண்டியது, ஆங்கிலம் என்பது ஒரு மொழி. அவ்வளவே. அதுவே அறிவு அல்ல. மொழி என்பது தகவல் தொடர்புக்குப் பயன்படும் ஒரு சாதனம். அவ்வளவே. அந்த ஒரு மொழி தெரியவில்லையே என்று நீங்கள் தலை குனிய வேண்டாம். திறமை இருக்கிறது. எதையும் வெற்றி கொண்டு வாகை சூட தினவு எடுக்கிறது. அதற்கான பலமும் இருக்கிறது. வேறென்ன வேண்டும்?

2.   தாழ்ந்தவர்கள் சிலர் தமிழில் பேசியிருக்கலாம். தமிழில் பேசுவது தாழ்ந்ததல்ல:

இதோ நம் பக்கத்தில் இருக்கும் கங்கை கொண்ட சோழபுரம் என்ற என்ற ஊரில் உட்கார்ந்து கொண்டு 52 தேசங்களை கட்டி ஆண்டான் ஒரு மாமன்னன். ஒரு பெரும் கடற்படையை வைத்துக்கொண்டு அத்தனை தேசங்களையும், அரசர்களையும் கலங்கடித்தான் அவன். ஒட்டர்களையும், சாளுக்கியர்களையும் வென்று கங்கை வரை போய் நீர் மொண்டு வந்தான், தன் தேசத்து சிவாலயங்களுக்கு கங்கை நீரால் அபிஷேகம் செய்யப்படவேண்டும் என்று. அந்த மிகப் பெரிய மாமன்னன் ராஜேந்திர சோழன் ஆங்கிலம் அறிந்திருக்கவில்லை. இங்கே சாதனைகள் படைத்த பலருக்கு ஆங்கிலம் தெரியாது.   ‘இல்லீங்க பரமன், நீங்க சொல்றது, அந்தக் காலத்து கதை. இன்னைக்கு நெலைமையே வேறங்க!’ என்கிறீர்களா.

சரி, இன்றைய நவீனத்தின் உச்சத்தில் இருக்கும் ஒரு இடத்தில் நானே பார்த்து அறிந்ததை பகிர்ந்து கொள்கிறேன்.

ஜப்பானின் டோக்யோ நகரில் வேலை பார்த்திருந்தேன். அந்த மண்ணில் போய் இறங்கிய அந்த ஆரம்பக் கட்ட நாட்களில் ஆங்கிலத்தை வைத்துக்கொண்டு நான் அவதியுற்றதுதான் அதிகம். அலுவலம் தவிர மற்ற இடங்களில், குறிப்பாக அதிவேக ரயிலில் மக்களோடு பயணிக்கும் இடத்தில், சந்தையில், சுற்றுலா தளங்களில், ஜென் சத்சங்கங்களில் என்று பெரும்பான்மையான இடங்களில் ஒருவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு தெரிந்தது ஜப்பானிய மொழி மட்டுமே. நன்றி என்பதை ‘தேங்க்ஸ்’ என்றால் தெரியாது அவர்களுக்கு. ‘அரிகாதோ கொசைமாஸ்’ (‘எந்திரன்’ படத்துப் பாடலில் இந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருப்பார்கள்) என்று அவர்கள் மொழியில் சொன்னால் மட்டுமே புரிந்து கொள்வார்கள். பதிலுக்கு குனிந்து வணங்கி நன்றி சொல்வார்கள். உலகின் மிக மிக முன்னேறிய ஒரு தேசத்தின் தலைநகரத்திலிருக்கும் பெரும்பாலானோருக்கே ஆங்கிலம் தெரியவில்லை. அங்கே எழுதுவது, படிப்பது, கணிப்பொறி திரையிலிருந்து கைப்பேசி வரை எல்லாமே அவர்களது தாய் மொழிதான். தாய்மொழியிலேயே பேசி, படித்து வாழும் அம்மக்கள் முன்னேறவில்லையா? ஜப்பானது முன்னேற்றம் பற்றி நான் சொல்லித் தெரியவேண்டியதில்லை. வித்தியாசம் இதுதான் – அங்கே யாரும், ஆங்கிலம் அறியாததை, தங்களது தாய்மொழியில் பேசுவதை, தாழ்ந்ததாக நினைக்கவில்லை.

3.   அறிந்து கொள்ளலாமே ஆங்கிலம்:

“அப்படியென்றால், ஆங்கிலம் வேண்டாமா?” என்பது உங்கள் கேள்வியாக இருக்கக் கூடும். நான் அப்படிச் சொல்லவில்லை. முதலில் தமிழில் பேசுவது தாழ்ந்ததல்ல என்பதை உங்கள் உள்ளே ஏற்றிக் கொள்ளுங்கள். நாம் பிறந்து வளர்ந்த சூழல், படித்த விதம், பண்பட்ட இடங்கள் என எங்கும் ஆங்கிலம் இல்லை. நமக்கு சரளமாய் ஆங்கிலம் பேசிப் பழகும் ஒரு இடம் தரப்படவில்லை. இது நமது தவறில்லை. ஒரு வேலை அப்படியொரு சூழல் இருந்திருந்தால், நாம் கற்றுத் தேர்ந்து பட்டையைக் கிளப்புவோம் என்பது என் அசைக்கமுடியாத நம்பிக்கை. சரி, இப்போது என்ன செய்யலாம். உள்ளே திறமை இருக்கிறது, வாழ்க்கையில் நிறைய சாதிக்க வேண்டும் என்று ஆர்வம் இருக்கிறது. இன்றைய உலகிற்கு ஆங்கிலம் தேவை அவ்வளவுதானே, அறிந்து கொண்டால் போச்சு.

ஆங்கிலம் கற்றுக்கொள்ளுங்கள். அடிப்படை ஆங்கிலமும் கற்றுக் கொள்ள வெறும் 30 மணிநேரங்கள் போதுமாம். இது ஆங்கிலத்தின் அப்பன்கள் என்று சொல்லப் படும் பிரிட்டிஷ் கவுன்சிலின் ஆங்கிலம் கற்பிக்கும் துறை சொல்கிறது. தினம் ஒரு மணிநேரம் பயிற்சி என்றாலும், ஒரு மாதத்தில் கற்றுக் கொள்ளலாம். ஒரு மொழி தேவைப் படுகிறது, கற்றுத் தேர்வோம். அவமானப் படத்தேவையில்லை.

 

‘நான் நெறையா இங்கிலீஷ் ஸ்பீகிங் கோர்ஸ் போயிருக்கேங்க. ஆனாலும், சரளமா பேசறது, வரலைங்க!’ என்பது சிலரின் கேள்விகளாக இருக்கலாம்.

சரளமாக பேச, இங்கிலீஷ் வகுப்புக்கள் போதுமா, அல்லது வேறு என்ன செய்ய வேண்டும்? அடுத்த வாரம் பார்ப்போம்.

 

(ஆளுமை கொள்வோம்…)

ப்ரியமுடன்,

பரமன் பச்சைமுத்து

….

பின்வரும் குறிப்புடன் இக்கட்டுரை பிரசுரமாகியிருக்கிறது:

வாசகர்கள் இந்த தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளை, கேள்விகளை [email protected] மின்னஞ்சலுக்கு அனுப்பலாம்.

….

நன்றி:  சுரா வின் ‘எம்ப்ளாய்மென்ட் மாஸ்டர்’

 

aalumai3.jpg - Copy

1 Comment

  1. sarlaanand

    Excellent article I m reading regularly…even I also can’t speak English fluently sometimes I feel ashamed in front of others ..but after reading this article I realised that nothing is impossible everything is possible…thanks a lot …

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *