‘மாஸ்டர்’ – திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து:

wp-1610987970972.jpg

தன் கடந்தகால வாழ்க்கையின் கசப்புகளால் குடிபோதையில் மூழ்கி எதையும் சிரத்தையாக எடுத்துக் கொள்ளாமல் வாழும், ஆனால் மிகச்சிறந்த அறிவும் ஆற்றலும் உள்ளே கொண்ட ஒரு கல்லூரிப் பேராசிரியர் தண்டனையாக சில காலம் ஒரு பள்ளிக்கு பொறுப்பேற்று வரும்போது,  இன்னும் இத்தனை நாட்களை கழித்து விட்டு போய்விடுவேன் என அதே மேம்போக்கு அசிரத்தையில் அங்கும் வாழும்போது, அவரது  வாழ்வில் நடக்கும் நிகழ்வுகள் அவரது வாழ்வையும் அங்கிருப்போரின் வாழ்வையும் மாற்றிப் போடுகின்றன. பள்ளிக்கு ‘வாத்தி’யாக அவர் வந்ததும் நிகழும் நிகழ்த்தும் சம்பவங்களின் அசத்தலான கோர்வை ‘மாஸ்டர்’

கதாநாயகன் என்றால் பலவீனங்களே இருக்கக்கூடாது, எல்லாமும் முடியும், எல்லாமும் தெரியும் என்ற பிம்பத்தை உடைத்து  பலவீனங்கள் கொண்டவராக நாயகனின் பாத்திரத்தை வடிவமைத்து அதை ரசிக்கும் படி தந்ததற்கு லோகேஷ் கனகராஜுக்கு பாராட்டுக்கள்.  விஜய் மாதிரி ஒரு மாஸ் ஹீரோவையும் விஜய் சேதுபதி மாதிரி ஒரு நடிகரையும் வைத்துக் கொண்டு இன்னும் தந்திருக்கலாம் என்று சொல்லலாம் என்றாலும் லோகேஷ் கனகராஜ்  வெற்றி பெற்று விட்டார் என்பதை குறிப்பிட்டே ஆக வேண்டும்.

விஜயின் வயதிற்கும் உருவத்திற்கும் சம்மந்தமே இல்லை. அழகாக ஆகிக் கொண்டே போகிறார். வேண்டியதை தந்து சிறப்பாக செய்திருக்கிறார். தொடக்க காட்சிகளில் சீனியர் நடிகர் கார்த்திக்கின் மேனரிஸத்தை விஜயின் சில காட்சிகள் நினைவு படுத்துகின்றன. கபடி காட்சிகளில் தியேட்டரை அதிர வைக்கிறார். ”நம்மவர்’ மாதிரி கதை, அதே கமல் மாதிரி தாடி கெட் அப்’ என்று மீம்ஸ்கள் வருகின்றன என்றாலும் உண்மையில்லை. இது வேறு நிகழ்வுகள் கொண்ட படம்.    ஒவ்வொரு முறை தன் காதல் கதையை  சொல்லும் விதம், பாடல்களுக்கான நடனம், சண்டைக் காட்சிகள், கதறியழுமிடம் என வேண்டிய இடத்தில் வேண்டியதைத் தந்து நன்றாக செய்திருக்கிறார் விஜய்.

நாயகன் பாத்திரத்தை விட மிக முக்கியத்துவமும், முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரைக்கும் கதையை நிறைத்திருக்கும் வலுவான எதிர்நாயகன் பாத்திரத்தை அலேக்காக தூக்கி நிறுத்தி அசத்துகிறார் விஜய் சேதுபதி. ‘இந்த ஆஸ்ட்ரிச் இருக்கே ஆஸ்ட்ரிச், அதோட முட்டை இவ்ளோ பெருசு இருக்கும்!’ ‘இதே எடத்துல சோத்துக்கு எவ்ளோ கஷ்டப் பட்டோம்’ ‘எவன்டா ஏம்மேல பாட்டிலை அடிச்சது’ ‘ஐ ஆம் வெயிட்டிங்…’ ‘பின்னாடி தள்ளி நேரா ஒக்காறேன்!’ என படம் முழுக்க பல காட்சிகளில் அள்ளுகிறார் விஜய் சேதுபதி.

மாளவிகா மோகனன் நன்று. ‘உண்டியல்’ சிறுவன், பள்ளியில் வரும் வந்த சூப்பர் குரல் வில்லன் பையன், சாந்தனு பாக்யராஜ் என பாத்திரங்களும் நன்று.

இரண்டாம் பாதியில் வரும் அந்த வில் அம்பு விடும் சாகசக் காட்சிக்காகவே படத்தில் இருக்கிறார் போல ஆண்ட்ரியா. அந்த வில் அம்புக் காட்சிகள் தேவையில்லாத ஆணி போலத் தோன்றுகிறது. குறைத்திருக்கலாம்.

அனிருத் பாடல்களிலும் அதை விட அதிகமாய் பின்ணணியிலும் கொடி கட்டியிருக்கிறார்.

விஜய்க்கு இது மிக மிக வித்தியாசமான வேற ஸ்டைலில் வந்துள்ள படம். 

முதல் பாதி நச். இரண்டாம் பாதி ம்… பரவாயில்லை.

வி-டாக்கீஸ் வெர்டிக்ட்: ‘மாஸ்டர்’ – எண்டர்டெய்னர். பார்க்கலாம்.

– திரை விமர்சனம் : பரமன் பச்சைமுத்து

#MasterReview
#Master

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *