குழந்தைகள்

wp-1617602394335.jpg

அவர்கள் பார்வை கூட வேண்டாம், நம் பார்வையில் அவர்கள் பட்டாலே போதும், நம்முள் உள்ளே பூக்களும் வெளியே புன்னகையும் பூக்கின்றன.

எத்தனை இறுக்கமான மனநிலையையும் சூழலையும், ‘ப்பூவா… மம்மம்’ சொல்லி ‘தத்தக்கா பித்தக்கா’ நடை போடும் ஒரு குழந்தை உடைத்துத் தகர்த்தி விடும்.

தூக்க முற்படும் போது ஒரு குழந்தை நம் மீது தாவுகிறது. உண்மையில் அதற்கு முன்பே நம் மனம் அந்தக் குழந்தையின் மீது தாவிவிடுகிறது.

உணர்வுகளை கொண்டு சேர்க்கும் தாலங்களே வார்த்தைகள் என்றாலும் நிறைய வார்த்தைகளை கொட்டி பெரியவர்கள் அதன் முதன்மை இலக்கை நீர்த்துப் போகச் செய்கிறார்கள். குழந்தைகள், எந்த மொழியிலும் சேராத எந்த யாப்புக்கும் உட்படாத இலக்கணத்திலேயே சேராத வார்த்தைகளை எல்லாருக்கும் புரியும்படி சொல்லி விடுகிறார்கள்.  வெறும் ஒரு சில வார்த்தைத் தாலங்களில் உணர்ச்சியை வழிய வழிய தந்து விடுகிறார்கள்.  வெறும் ‘க்காஆஆ!’ போதும் ஒரு குழந்தைக்கு.  ஒரு மழலை இதைச் சொல்லும் போது அந்தக் குழந்தையோடு ஒரு நாள் கழித்துவனுக்கு புரிந்து விடும் அதிலுள்ள உணர்ச்சி!

ஒரு குழந்தையைக் கண்டதும் ‘ஐ.. குழந்தை!’ என்று மனம் உயர எழும்பும் போது நீங்கள் இயற்கையின் உயிர்த்தன்மையில் ஒருமையில் திளைக்கிறீர்கள். ‘அது யாரோட கொழந்த?’ என்று பகுத்துப் பார்த்து அதன் பின் மகிழ்வதா வேண்டாமா என நிற்கும் புள்ளியில் உங்களுக்குள் பிளவு வந்து இருமையில் நிற்கிறீர்கள். ஏதேன் தோட்டத்தில் ஆதாமுக்கு வந்து சேர்ந்த பாழாப்போன இருமை என்று மிர்தாத் வழியே மிக்கேல் நைமியும், ஓஷோவும் சொன்ன அந்த இருமை.

கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தில் சோழ தேசத்து பட்டத்து இளவரசன் ஆதித்த கரிகாலன், ‘ஏன் ஒரு மனிதன் முதுமையடைந்து சாக வேண்டும்? அவனவனுக்கான காலம் வரை அப்படியே இருந்து விட்டு சாகலாம் என்று ஒரு விதி இருந்தால் என்ன?’ என்று பார்த்திபேந்திர பல்லவனையும் வாணர் குலத்து வல்லவரையன் வந்தியத்தேவனையும் பார்த்து கேட்பதாக வரும்.  அதே கோட்டில் ‘ஒரு குழந்தை குழந்தையாகவே எப்போதும் இருந்தால் என்ன?’ என்றெல்லாம் கூட எண்ணிப் பார்த்திருக்கிறேன் பல முறை.  அது நல்லதல்ல என்றும் தெளிந்திருக்கிறேன்.

குழந்தைகள் ஒரு வயது வரம்பிற்கு மேல் தங்களை குழந்தைகள் என்று எவரும் அழைப்பதை விரும்புவதில்லை. ‘நான் இன்னும் கொழந்த  இல்ல. நான் வளந்துட்டேன்!’ என்று காட்டவே முற்படுகின்றன தங்களது செயல்களின் மூலமாக.  ஆனால் வளர்ந்து குழந்தை பெற்ற பெரியவர்கள்  தாங்கள் இன்னும் குழந்தையாகவே பார்க்கப் பட வேண்டும் என்ற ஆழ்மன ஆசையில், தங்கள் இணையை ‘பேபி… பேபி…!’ என்று விளித்துக் கொண்டு அலைகிறார்கள்.

குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி அடுத்த நிலைக்கு வந்து விடுவார்கள். பெற்றோர்கள் மட்டும் எப்போதும் அதே நிலையில், பிள்ளைகள் எவ்வளவு வளர்ந்த போதும் அவர்களை குழந்தைகளாகவே பார்க்கும் பெற்றோர் என்ற அதே நிலையில் உறைந்து போய் நிற்கிறார்கள்.

குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவதே நாம் செய்ய வேண்டிய பெரும் சமூகப்பணி. ஆமாம்… குழந்தைகளுக்கு நாம் செய்யும் பேருதவி குழந்தைப்பருவத்தை அவர்களுக்குத் தருவதே!

‘ஒன்லி சில்ட்ரன் கேன் என்ட்டர் ஹிஸ் கிங்டம்’ என்கிறார்கள். கடவுளின் உலகில் குழந்தைகள் மட்டும்தான் நுழைய முடியும் என்றால்… கிரியையும், சரியையும், ஓகமும், அன்னமளித்தலும், அறப்பணியும், தருமசாலையும், தவப்பயிற்சியும் எதற்கு?  வளர்ந்தவர்கள் நுழையவே முடியாதா? தலை இடிக்குமோ, குறுகிய நுழைவாயிலோ!

குழந்தையாயிருக்கும் போது இறைவன் வருவானாம். வளர்ந்து முதிர்ந்து கனிந்து குழந்தைமை வரும்போது நாம் அவனிடம் போக அவன் உலகின் கதவுகள் திறக்குமாம்.  குழந்தையிலிருந்து வளர்ந்து முதிர்ந்து கனிந்து குழந்தைமை வர வேண்டும். குழந்தைத்தனம் அல்ல, குழந்தைமை! சைல்டிஷ் அல்ல, சைல்ட் லைக், சைல்ட்னஸ்!

குழந்தைகள் வாழ்க!
குழந்தைமை வாழ்க! வாழ்க!

– பரமன் பச்சைமுத்து
மாமல்லபுரம்,
05.04.2021

#Dhuruvan
#ParamanDhuruvan
#Mamallaluram
#Manakkudi

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *