வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் ஆடுகளுக்கெல்லாம்!

wp-16185797781242867949624672667898.jpg

தமிழகத்தின் அரசிலை கொஞ்ச காலமாக கவனித்து வருபவர் என்றால் உங்களுக்கு ஸ்டாலின் அவர்களின் பேச்சு நினைவுக்கு வரும், ரொம்ப காலமாக கவனிப்பவர் என்றால் அண்ணாவின் வரிகள் நினைவுக்கு வரும்.

ராஜா அண்ணாமலைபுரத்தின் தெருவொன்றில் ஒரு வீட்டின் பெண்மணி இட்ட சோற்றைத் தின்னும் இந்த ஆட்டையும், அதன் தாடியையும் பார்த்ததும் எனக்கு இரண்டு பேரின் பேச்சுகளும் நினைவில் வந்து போயின. 

மணக்குடியில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஜெயலலிதா தந்த ஆட்டுக்குட்டிகளுக்கு நீண்ட சுளுக்கின் வழியே மரத்தின் மிளாறுகளை இழுத்து ஒடித்துத் தின்னப் போட்ட, என்னைப் பார்த்ததும், ‘அம்மா குடுத்தாங்க இல்ல விலையில்லா ஆடு, அது!’ என்று சொன்ன லட்சுமி அத்தை நினைவுக்கு வருகிறார்.  ‘அம்மா… ஆடு… இலை…ஈதல்…’ என்று ஒன்றாம் வகுப்பு பாடத்தை அன்று வேறு பொருளில் சத்தமாய் சொல்லி நான் சிரித்தது நினைவுக்கு வருகிறது.

அழகாக பளபளவென்று இருக்கிறது இந்த ஆடு.  ஓர் அழகுக் கலைஞரிடம் போய் தாடையைத் தந்து லாவகமாக திருத்தி வெட்டி விடப்பட்டு வளர்த்ததைப் போலத் தோன்றும் தாடியைக் கொண்டிருக்கிறது இந்த ஆடு. என்ன செய்வது, நகரில் மந்தவெளி இருக்கிறது, ஆடும் மாடும் புல் மேய மந்தைவெளி இல்லை. மேய்வதற்கு மந்தைவெளியோ கடித்துண்ண புல்லோ கொடியோ இல்லாத நகரில் கிடைப்பதை உண்டு வாழப் பழகுகின்றன ஆடுகளும் மாடுகளும். ‘வயிற்றுக்கு சோறிட வேண்டும் இங்கு வாழும் ஆடுகளுக்கெல்லாம்!’ என்று யாரோ ஓர் அம்மணி வைத்ததை உண்ணப் பழகி விட்டது இந்தப் பெருநகர தலைநகர ஆடு.

வத்தலகுண்டிலிருந்து தேசிய நெடுஞ்சாலையில் ஒரு முறை பயணித்த போது, வண்டியை நிறுத்தச் சொல்லி இறங்க வைத்து தூரத்தில் மேயும் ஓர் ஆட்டைக் காட்டினார் மலர்ச்சி மாணவர் விஜயதீபன். வத்தலகுண்டு பகுதியில் மட்டும் காணப்படும் ஒரு சிறப்பு ஆடு வகையாம் அது.

செம்மறியாடு, கொடியாடு, கன்னி, மேச்சேரி, ராமநாதபுரம் வெள்ளை என பல வகைகள் ஆடுகள் உண்டிங்கு. வெள்ளாடுகள் என்றால் வெள்ளை ஆடுகள் என்று நினைப்பவர்கள் அதிகமாகிப் போயினர் இன்று. ‘வெள்ளை ஆடுகள்’ ‘வெள்ளாடுகள்’ இரண்டும் வேறு வேறு என்பதும், கருப்பு ஆடுகள் என்று சொல்லப்படும் ஆடுகளின் பெயர் உண்மையில் ‘வெள்ளாடுகள்’ என்பதும் இங்கே பலருக்குத் தெரிவதில்லை என்பதை நகருக்கு வந்த புதிதில் தெரிந்து கொண்டேன். 

அதுசரி… வெள்ளாட்டுக்கறி என்று நம்பி செம்மறியாட்டுக்கறியை வாங்கிப் போய் தின்கிறார்கள் பலபேர் என்பதுதானே நகரத்தின் நிதர்சனம் இன்று.

இது ராமநாதபுரம் வெள்ளையா, மேச்சேரியா, இல்லை வேறு எதாவதா ?

– பரமன் பச்சைமுத்து
சென்னை
16.04.2021

Facebook.com/ParamanPage

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *