எனக்கு ஐஜியத் தெரியும்…

தொண்ணூறுகளின் துவக்கத்தில் ரைட்சாய்ஸில் சர்வீஸ் இஞ்சினியராக வேலை பார்த்த அந்தக் காலங்களில் சரவணபவனில் காலை உணவு உண்ணும் போது, ‘ஏய் பரமன், அந்த டேபிள்ல பாரு நடிகர் விவேக்!’ என்று பாலசந்தர் சுட்டிக் காட்டியது இன்னும் நினைவில் நிற்கிறது. வெள்ளைச் சட்டையும், கண்ணாடியும் அணிந்து வழித்து வாரப்பட்ட தலைமுடி சகிதமாக வெறுமனே உட்கார்ந்திருந்தார் விவேக். உணவு உண்டு முடித்து பில்லுக்காக காத்திருந்தாரோ, அல்லது வேண்டிய உணவை சொல்லிவிட்டு காத்திருந்தாரோ தெரியவில்லை. அதன் பிறகு பல காலைகளில் அவரை சரவணபவனில் பார்த்திருக்கிறேன். பக்கத்து டேபிளில் இருந்த அவரிடம் பேசியதே இல்லை.

அதன் பிறகு எப்போதோ, பார்க்காமல் விட்டுப் போன ‘மனதில் உறுதி வேண்டும்’ பார்த்த போது, ‘ஒரு நாள் என் பேரு பேப்பர்ல வரும்’ என்று சிரித்துக் கொண்டே சொல்லும் சுகாசினியின் அந்தத் தம்பி மனம் கவர்ந்தார். ‘ஏய், நம்ம தி நகர் சரவணபவன் விவேக்!’ என்று நினைவில் வந்தார்.

நான் ஐடி துறையில் உச்சத்தில் இருந்த போது விவேக் தமிழ்ப் படங்களில் உச்சத்தில் இருந்தார். ரஜினிக்கு அப்புறம் படத்திற்கு வெளியே பஞ்ச் டயலாக்குகள் பயன்படுத்தப்பட்டது விவேக்குக்குத்தான் என்பது என் எண்ணம்.  ‘எப்பிடி இருந்த நான் எப்பிடி ஆயிட்டேன்!’ அவரது ஹிட்டடித்த பஞ்ச்.

வசனங்களை மிக மிக தெளிவாக அழுத்தம் திருத்தமாக உச்சரிப்பார் மனிதர். ‘ அடேய்… உங்களுக்கு பொங்கலே கிடையாதேடா!’ என்பது ஓர் உதாரணம்.

ரன், சாமி, மின்னலே, தில், தூள் போன்ற படங்களில் விவேக் இல்லாமல் நினைத்தேப் பார்க்க முடியாது.

லாரிக்கு அடியிலிருந்து வெளிவந்து, ‘ஆங்… வண்டிய அப்படியே பார்க் பண்ணிட்டு ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தேன்!’ என்பதெல்லாம் அந்தக் கால உச்சம். ‘எனக்கு ஐஜியைத் தெரியும்!’ என்ற அந்த காட்சிக்கு சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.

‘அதான்… சொன்னேனே! மைனர் குஞ்ச சுட்டுட்டேன்னு!’

‘நீங்க பட்டையைப் போடுவீங்களோ, நாமத்தைப் போடுவீங்களோ, யானை விட்டையைப் போட்டதை பாத்தேளே?’ 

‘என் வலது கையை காணும்’ ‘ரெட்டப் பாலத்துல விழுந்ததே அதை நீங்க எடுத்தக்கலியா?’

‘கொடியேத்திருக்கு, முட்டாய் குடுத்துருக்கு. அப்ப கட்சிதானே!’

‘ஃபிகரப் பாத்த உடனே ஃப்ரண்ட கட் பண்ணிட்டவன் எனிமிதானே!’

‘அடேய்… சந்தரபாபு நாயுடு திருப்பதியில லட்டுக்கு பதிலு ஜிலேபிய மாத்திட்டாருங்கறதுல்லாம் ஓவருடா!’

‘சிவாஜி… நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி!’

‘இது காஞ்சிபுரம் கஞ்சிராதானே?’
‘இல்ல, கும்பகோணம் குஞ்சிரா!’

‘அடப்பாவிங்களா… பாவாடை சித்தரா ஆக்கிட்டீங்களேடா!’

‘காக்கி நாடா உன்னுது. பாவாடை நாடா என்னுது’

‘தங்க புஷ்பம் சார்’

காக்கா பிரியாணி, ஆல்தோட்ட பூபதி என விவேக்கின் காட்சிகள் மறக்கவே முடியாதவை.  கவிஞர் வைரமுத்துவாக வேடமிட்டு வந்து பாட்டி வடை சுட்ட கதையை சொன்ன விதத்தில் அசந்து போனவர்களில் நானும் ஒருவன். அதுவும், ‘பாட்டி பாராத சமயம்’ ‘கந்தக வடையை கவ்விச் சென்றது கார்மேக காகம்’ ‘யௌவன கிழவி’ ‘தீவுத்திடலுக்குள் திடுமென வந்த திரிஷாவே’ ‘நகராட்சிப் பூங்காவிற்குள் வந்த நமீதாவே!’ என்ற இடங்களும் அதற்கு அவர் காட்டும் உடல் மொழி குரல் ஏற்ற இறக்கங்களும் அட்டகாசமானவை.

நடிகர் என்பதைத் தாண்டி பொதுநலத்தில் இறங்கி் நின்று உயர்ந்து நின்றார் விவேக். மார்க்கெட் போன பின்பு அல்ல, மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் போது நடிப்பதை சில காலம் நிறுத்தி வைத்து விட்டு, அப்துல் கலாம் அவர்களின் பேரில் மாணவர்கள், மரம் நடுதல் என பொதுநலத்தில் இறங்கியவர் மனிதர்.

நான்கு மாதங்களுக்கு முன்பு விவேக்கின் நெருங்கிய நண்பரும் எனது நண்பருமான டாக்டர் முருகுசுந்தரம், ‘விவேக்கின் பொன்மொழிகள்’ என்ற பெயரில் அவரது சிந்தனைகளை ‘புக்மார்க்’காக கொண்டு வர விரும்பி நம்மிடம் கேட்க, பழைய சரவண பவன் விவேக்கை மனதில் நினைத்துக் கொண்டே அதை வடிவமைத்து அச்சிட்டும் தந்தோம். விவேக் அதை ரசித்துப் பார்த்தாராம்.

திரைப்படங்களில் பொதுநலனுக்காக நல்ல கருத்துகளை சொன்னவர், திரைப்படங்களை நிறுத்தி விட்டு பொதுநலனுக்காக செயல்கள் புரிந்தவர், கடைசி நாளில் கூட  ‘அரசு மருத்துவமனையில்தான் ஊசி போட்டுக் கொண்டேன். பயப்பட வேண்டாம்!’ என்று பொதுநலனுக்காகவே சேவை செய்து வாழ்வை முடித்துக் கொண்டார்.

காலம் எப்போது யாரை அழைத்துக் கொள்ளும் என்பது தெரிந்து கொள்ளவே முடியா புதிர்.  லட்சக்கணக்கான மரங்கள் வைத்தார் இந்தப் பூமியின் மீது.
பல பிறவிகள் எடுத்து செய்ய வேண்டிய நல்லதை ஒரே பிறவியில் சீக்கிரம் முடித்து விட்டால், ‘என் செல்லமே, சீக்கிரம் முடிச்சிட்டியா, அப்ப இங்க வந்துரு, என் கூட இரு… வா!’ என்று அழைத்துக் கொள்வான் போல இறைவன்.

பல ஊர்களில் லட்சக்கணக்கான மரங்களையும், லட்சக்கணக்கான மக்களின் இதயத்தில் தன்னையும் ஊன்றி வைத்துவிட்டுப் போய் விட்டார் விவேக்.

தி நகர் சரவணபவனில் அருகிலிருக்கும் டேபிளில் இருந்த போது பேசாததைப் போலவே,  வாழ்விலும் அருகிலிருக்கும் டேபிளில் இருந்த போதும் அவரிடம் பேசாமலே விட்டு விட்டேன்.

போய் வாருங்கள் விவேக்! உங்கள் இடத்தை நிரப்ப யாராலும் முடியாது.

இறைவனடியில் இளைப்பாருங்கள்!

பிரார்த்தனைகள்!

– பரமன் பச்சைமுத்து
17.04.2021

#ActorVivek
#Vivek
#RipVivek

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *