மிர்தாத்தின் புத்தகம் – மிக்கேய்ல் நைமி : பரமன் பச்சைமுத்து

wp-1618410412075.jpg

முன் குறிப்பு:

‘உலகிற்கு வெளிப்படுத்தலாம் என்று எனக்கு அனுமதிக்கப்பட்ட புத்தகத்தின் பகுதி இதோடு முடிகிறது… மிச்சத்திற்கான காலம் இன்னும் வரவில்லை!’  என்று எங்கோ லெபனானில் ஒரு மூலையில் மிக்கேய்ல் நைமி எழுதி வைத்ததை ‘இதை படியுங்கள், ஒரு முறையல்ல 10,000 முறை படியுங்கள்!’ என்று  வெளி உலகிற்கு சத்தமாக சொல்லி
இப்படியொரு நூலை உலகிற்குக் காட்டிய ஓஷோவிற்கு (அல்லது ஓஷோ வழியே காட்டப்பட்ட நூலுக்கு)… மலர்ச்சி வணக்கம்!

………….

அதில் போனால் உயிருடன் திரும்பவே முடியாது என்று கூறப்படுவதும், சாதரணமாக மனிதர்கள் எவரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியா குத்துப்பாறைகளால் ஆனதுமான கடினமான பாதையில் மலையுச்சியை நோக்கி, ஏழு ரொட்டித் துண்டுகளையும் ஓர் ஊன்றுகோலையும் வைத்துக் கொண்டு ஏறுகிறான்  ஒருவன். அராரத் மலைத் தொடரிலுள்ள பால் மலையின் உச்சி சிகரத்தில் நூற்றியைம்பது ஆண்டுகளாக ஒரு மடாலயத் துறவி வாழ்கிறாராம், மனிதர்களைக் கண்டாலே பிடிப்பதில்லையாம் அவருக்கு, மனிதர்களைக் கண்டால் ஓடி விடுவாராம். அவரைக் காண வேண்டும் என்றவொரு பெருவேட்கையில் கடினப் பாதையில் ஏறுகிறான் அவன்.

ஆதிப்பெருவெள்ளக் காலத்தில் இறைவன் கட்டளையை சிரமேற்று மூன்றடுக்கு பேழை செய்து பதினைந்து சோடி உயிரினங்களை உள்ளே வைத்துக்கொண்டு தன் குடும்பத்தோடு பயணித்த நோவா, 150 நாட்கள் நீரில் மிதந்து ஒதுங்கியதாகச் சொல்லப்படுகிற பால் மலை பலிபீடச் சிகரத்தை நோக்கி ஏறுகிறான் அவன். நோவாவின் கட்டளைப்படி அவனது மகன் சேம் அந்தக் கப்பலை ஒரு மடாலயமாக அமைத்தானாம். அந்த மடாலயத்தின் தலைமை குருவாக இருந்தவர்தான் நூற்றைம்பது ஆண்டுகளாக அங்கே தனியே இருக்கிறாராம். மனிதர்களை வெறுக்கும் பார்த்தால் ஓடிவிடும் அவரைப் பார்க்கத்தான் அந்த பலிபீடச் சிகரத்தை நோக்கி இந்த மனிதன் ஏறுகிறான்.

ஏற முடியா, குத்தீட்டிகளைப் போன்ற கூர்மை கற்களும் பாறைகளும் நிரம்பிய வழியில் கைகளாலும் கால்களாலும் கடந்து ஏறுகையில் காலணிகள் பிய்ந்தும் கைகள் சிராய்த்தும் போயின என்றாலும் தொடர்கிறான்.  பசியும் சோர்வும் அவனைத் தின்ன, கொண்டு வந்த ரொட்டியை அவன் தின்ன எத்தனித்த போது, எங்கிருந்தோ அவ்வளவு உயர மலையில் அந்த இடத்திற்கு வந்த புல்லாங்குழல் வாசிக்கும் ஆட்டிடையன், எல்லா ரொட்டிகளையும் பிடுங்கி கடித்துத் துப்பி மண்ணில் எறிகிறான். இருந்த உணவும் இல்லாது போக, பசியும் சோர்வும் ஏமாற்றமும் ஆட்கொள்ள பல்லைக் கடித்துக்கொண்டு ‘இரவுக்குள் உச்சி’ என்ற இலக்கில் மேலும் ஏறுகிறான்.

எலும்புத் துளைக்கும் குளிரிலும் எதிரிலிருப்பது தெரியா இருளிலும் தவழ்ந்து தவழ்ந்து ஒரு குகையை அடைகிறான். அங்கே அவன் அணிந்திருக்கும் உடையும் உறுவப்பட்டு அம்மணமாக வெளியில் தள்ளப்படுகிறான். எலும்பு துளைக்கும் குளிரில் ‘இதென்ன கொடுமை, உணவும் பிடுங்கப்பட்டது, உடையும் உறுவப்பட்டது, ஊன்று கோலும் எடுத்துக் கொள்ளப்பட்டது. விளக்கும் இல்லாமல் கண் தெரியா அடர் இருளில் கடுங்குளிரில் அம்மணமாய் வெளியே தள்ளப்பட்டேனே!’ என்று வெளியே கால் வைக்கிறான்.  மேகங்களுக்கும் அப்பால் உயர்ந்து நிற்கும் மலையிலிருந்து கடலின் ஆழங்கொண்ட கருங்குழி பள்ளத்தாக்கில் விழுகிறான்.  விழுந்தால் எலும்பு கூடத் தப்பாத ஆழ கருங்குழியின் அடி நோக்கி உடல் கீழே போகப் போக நினைவு தப்புகிறது.

நினைவு திரும்பும் போது பாறையில் படுத்திருக்கிறான். துறவி போன்ற தோற்றம் கொண்ட படு வயதான மனிதரொருவர் அவன் வாயில் சிறிது தண்ணீர் ஊற்றுகிறார்.

‘நீங்கள் யார்?’

‘நான் சமாதம். இந்த மடாலயத்தின் தலைவராக இருந்தேன்!’

‘ஓ… நீங்களா அது. மனிதர்களைக் கண்டால் ஓடி விடுவீர்கள் என்றார்களே!’

‘நூற்றியைம்பது ஆண்டுகளாக உன்னை எதிர் பார்த்து உனக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்’

‘எனக்கா? நான் வருவேன் என்று எப்படி தெரியும்?’

‘நீ வருவாய் என்று அவர் சொன்னார்’

‘அவர் ? யார்?’

‘மிர்தாத்’

‘எதற்காக?’

‘இதை உன்னிடம் கொடுக்கச் சொன்னார்!’

….

இப்படி சுவாராசியப் படுத்துகிறது முதல் பகுதியான மூன்று அத்தியாயங்கள்.  அதன் பிறகு வருவதுதான் உண்மையான ‘மிர்தாத்தின் புத்தகம்’.

அதன் பிறகு வருவதை நான் விமர்சிக்கவோ கருத்து சொல்லவோ போவதில்லை. ‘ஒரு முறையல்ல 10,000 முறை படிக்கப் பட வேண்டிய புத்தகம். இவன் எழுதவில்லையென்றால் நான் எழுதியிருப்பேன். படவா ராஸ்கல்! இவன் எழுதிவிட்டான்!’ என்று ஓஷோ சிலாகித்த பரிந்துரைத்த நூலின் வரிகளை, சாதாரணமாக ஒரு கதை வாசிப்பதைப் போலக் கடக்க முடியவில்லை.  வரிகளில் வார்த்தைகள் வாழ்வின் அடர்த்தியும் கனமும் உறைந்து கிடக்கின்றன, ஒளிந்து கிடக்கின்றன. கிட்டத்தட்ட ஜென் சூத்ரத்தை படிக்கும்  ஒரு மாணவனைப் போல சில வரிகளை மறுபடியும் மறுபடியும் படிக்க வேண்டியுள்ளது. புரிந்து கொண்டது போலத் தோன்றினாலும், மறுமுறை வேறொன்றாகப் புரிகிறது. இன்னும் பலமுறைகள் படிக்க வேண்டும் என்பது மட்டும் தெளிவாகப் புரிந்தது. தமிழில் இதை மொழிப்படுத்த எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் புவியரசு என்பது புரிந்தது. ஆங்கில மூலத்தில்,  படிப்பதே கடினம் என்ற  நடையில் எழுதியிருப்பார் என்று சொல்கிறார்கள் (‘சித்தர்கள் நடை போல’ எழுதியிருப்பார் போல) என்றாலும் ஆங்கிலத்திலும் இதைப் படித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் வந்துள்ளது.

கடைசி சில அத்தியாயங்கள் நாம் கட்டி வைத்திருக்கும் பல அனுமானங்களை அடுக்குகளை உடைத்து நொறுக்குகிறது.

இன்னும் பல முறைகள் படித்து புரிந்து கொள்ள உள்வாங்க வேண்டியிருக்கிறது என்ற போதிலும் ஒன்றைச் சொல்ல முடிகிறது என்னால் – சிறந்த நூல் இது.

நிச்சயம் படியுங்கள், சில முறையேனும்.

நூல் : மிர்தாத்தின் புத்தகம்
             ( மூலம் : புக் ஆஃப் மிர்தாத் )
நூலாசிரியர்: மிக்கேய்ல் நைமி
தமிழில் : புவியரசு
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்.

– பரமன் பச்சைமுத்து
சென்னை
14.04.2021

#BookOfMirdad
#MirdadinPuthakam
#KanParamanPachaimuthuam
#ValarchiTamilMonthly
#ParamanBookReview
#StayWithPositive
#ParamanReview
#MikhailNaimy
#ParamanPachaimuthu
#GandhiKannadhasan

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *