உறுதியோடு உயர்வோம்

திமுக முன்னிலை என்று ஊடகங்கள் செய்தி வெளியிடும் இவ்வேளையில், வீட்டிற்குள்ளேயே மாஸ்க் அணிந்து சமூக இடைவெளியில் வாழும் நிலையில் இருப்பது சங்கடம்தான் என்றாலும் இருக்கிறோம்.

கோவிட் பாஸிட்டிவ் வந்த அத்தையை மருத்துவமனையில் சேர்த்து விட்டோம். மகள் ஓர் அறையில் தன்னை அடைத்துக் கொண்டு தனிமைப் படுத்திக் கொண்டாள். சுவருக்கு அந்தப்பக்கம் இருப்பவளிடம் செல்ஃபோனில் பேசுகிறோம். கதவருகே பாக்குமட்டை தட்டில் உணவு வைக்கிறோம். நான்கு நாட்களாகின்றன அவளை நேரடியாகப் பார்த்தும் பேசியும். திடீரென உள்ளே ஓடிப் போய், அணைத்துக் கொண்டு ‘எப்படியிருக்க செல்லம்! லவ்யூ ஸோ மச்!’ சொல்ல வேண்டும் போல் உள்ளது.

இன்று இந்தப்புறம் எங்களோடிருக்கும் இன்னொரு மகளும் சளியால் சங்கடப்படுகிறாள். முகரும் உணர்வு இல்லையென தோன்றுவதாகச் சொல்கிறாள். டெஸ்ட் கொடுத்திருக்கிறேன். முடிவு வரட்டுமென காத்திருக்கிறேன்.
பெரிய மகள், சிறிய மகள், மனைவி என ஆளுக்கொரு அறையில். நான் ஹாலில்.

எனக்கு போடப்பட்ட இரண்டு தவணை கோவாக்ஸின் தடுப்பூசி, ப்ரியாவுக்கு போடப்பட்ட கோவிஷீல்டு முதல் தவணை தடுப்பூசி அரணாக நின்று இறையருளோடு எங்களை காக்கிறது. இல்லையென்றால் தொற்று உறுதி செய்யப்பட்ட அத்தையை காரில் உடன் வைத்துக் கொண்டு பெரும்பாக்கம் குளோபல் மருத்துவமனை வரை சென்று அடுமதிக்கு முயற்சித்து திரும்ப வரமுடியுமா? கீழ்ப்பாக்கம் ஆர்த்தி ஸ்கேனுக்கு கூட்டிப் போய் சிடி ஸ்கேன் எடுத்திருக்க முடியுமா?

தொற்றில் இருக்கும் 75 வயது அத்தை மருத்துவமனையில் குணம்பெற்று வருகிறார். ஒரு தவணை கோவிஷீல்டு இவருக்கு ஓரளவு எதிர்ப்பு சக்தியைத் தந்திருக்கிறது என்று எண்ணுகிறேன்.

பூர்ணிமா நீத்து, டாக்டர் முருகுசுந்தரம், தீபா நாயர், ராமு பெருமாள், ரமா ராமச்சந்திரன் என மலரவர்களும் நண்பர்களும் அவரவர் இடத்திலிருந்தே உடன் நிற்க இறைவன் அருள் செய்திருக்கிறான்.

இறைவன் அருளால் வெகு விரைவில் குணம் பெற்று நிற்போம்.

கருவாக்கி உருவாக்கி எனையாண்டு
காத்தருளும் இறைவா நன்றி!

  • பரமன் பச்சைமுத்து
    சென்னை
    02.05.2021

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *