ஊரடங்கு நேரத்தில் உணவு

🌸

ஊரடங்கில் சாலையோரம் வாழும் வீடற்ற மனிதர்களுக்கு உணவு தேவைப்படலாமே, எவராவது கொடுப்பார்கள் என்றாலும் கண்டு வைத்தால், வழி சொல்லி இடம் சொல்லி அனுப்பலாமே என்று ஆர் ஏ புரத்திலிருந்து மயிலை கோயில் குளம் வரை நடந்தேன்.

மந்தவெளிவெளி எல்லையில் மயிலை துவங்கும் இடத்தில் இரட்டை சுவாசக் கவசமணிந்த காவலர்கள் வரும் ஒன்றுரண்டு வாகனங்களை நிறுத்தி கேள்விகளால் சோதனைகள் செய்து கொண்டிருந்தனர்.

உணவு விநியோகிக்கும் ஸோமோட்டா, ஸ்விகி வண்டிகள் அதிகமாகவும், ஒன்றிரண்டு கார்களும் காணப்பட்டன சாலையில்.

ராமகிருஷ்ண மடம் சாலையும், தெற்கு மாட வீதியும் இவ்வளவு காலியாக இருந்து பார்த்ததே இல்லை.

தெற்கு மாட வீதியில் ஒரு கடை வாசலில் தங்கியிருக்கும் முதியவரொருவர் தலை, கை கால் முகம் என ஒரு பாட்டில் தண்ணீரில் ஊற்றிக் குளித்ததைக் காண முடிந்தது.

ரத்னா கஃபே திறந்திருக்கிறது, உணவு பார்சல் கேட்டு வருபவர்களுக்காக.

கபாலீசுவரர் கோவிலின் பின் கோபுரத்திற்கும் குளத்திற்கும் இடையிலுள்ள, எப்போதும் புரோகிதர்களாலும் கிளி சோதிடம், குறி சொல்பவர்களாலும், வாகனங்களாலும் நிறைந்திருக்கும் அந்த சிறிய தெரு பூனை கத்தும் சத்தம் கூட கேட்கும் படி அமைதியாக இருந்தது.

கபாலீசுவரர் ஆலய பின் கோபுர கொடிமரம் வழியே தூரத்தில் கருவரையில் உள்ளிருக்கும் லிங்கத்தை விளக்கைப் பார்க்க முடிகிறது. வழிபடும் ஒரு பெண்மணியை பார்க்க முடிந்தது.

முருகன் சன்னிதியில் உள்ளிருக்கும் முருகனை இங்கே தெருவிலிருந்தே பார்த்து கைகூப்ப முடிந்தது. ஒரு சாஸ்திரிகள் வணங்குவதை காண முடிந்தது ( பார்க்க படம் ).

குளத்தி்ன் மறுபுரம் சரவண பவன் உள்ள வீதி வெறிச்சோடி கிடக்கிறது. பார்சல் உணவுக்காக சரவண பவன் திறந்தே இருக்கிறது.

ஏதோ ஒரு நம்பிக்கையில் சரவண பவன் வாசலில் இரண்டு பெண்மணிகள் பூ விற்கிறார்கள். ‘பூ வோணுமா சார்!’ என்று நம்மையும் கேட்கிறார்கள்.

இடது திரும்பினால்…

இருபுறமும் இருக்கும் ஐந்து பேருந்து நிழற்குடைகளிலும் கிடக்கிறார்கள் மக்கள். வெறிமனே கிடக்கிறார்கள். சிலர் அமர்ந்திருக்கின்றனர். இவர்களுக்கு யாரேனும் உணவு தருவார்கள்தான்.

ஒருவேளை ஊரடங்கு நேரத்தில் வீடற்றவர்களுக்கு உணவு அளிக்கும் பணியை செய்பவர் நீங்கள் என்றால்,
மயிலை குளத்தையொட்டிய பேருந்து நிழற்குடைகளுக்கு செல்லுங்கள். ( குமரன் சில்க்ஸ், அல்லயன்ஸ் பதிப்பகம் அருகிலும் எதிர்ப்புறத்திலும்) 50 பேர் உள்ளனர்.

எல்லோருக்கும் உணவளிக்கும் இறைவன் இவர்களுக்கும் அளிக்கட்டும். அது உங்கள் மூலமாகக் கூட நடக்கட்டுமே!

வாழ்க!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *