வரும் அந்தக் குழந்தைக்கு தெரியாது

இரவு 2 மணிக்கு ஓர் அழைப்பு, அரை தூக்கத்தில் எடுத்தால், ‘நான் ஜோதி பேசறேன்ப்பா. பாப்பாவுக்கு பனிக்குடம் உடைஞ்சிருச்சி. மகாத்மா காந்தி ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துக்க மாட்றாங்க. கொரோனா டெஸ்ட் எடுக்கனுமாம்! டாக்டர் யாரும் தெரியுமாப்பா?’

அரைத்தூக்கத்தில் சுதாரித்து… ‘டாக்டர்… தெரியுமா தெரியாதேன்னே தெரியல விசாரிக்கனும். இப்ப எங்க இருக்கீங்க?’

‘என்ன செய்யறதுன்னு தெரியல. நடுதெருவுல நிக்கறோம்ப்பா!’

(எனக்கு சங்கடமா போச்சு. கண் கலங்குது)

‘பிரைவேட் ஹாஸ்ப்பிட்டல் பாக்கலாமா? சரி… நீங்க ராஜீவ் காந்தி ஹாஸ்பிட்டல்ஸ் போங்க. அதுக்குள்ள நான் யாரையாவது விசாரிச்சு பிரைவேட் ஹாஸ்ப்பிட்டல்ஸ் தேடறேன். நேரத்தை வீணடிக்காம ராஜீவ்காந்தி போங்க’

அவர்களை போகச் சொல்லிவிட்டு புதுச்சேரி மாணவர்களுக்கு டெக்ஸ்ட் அனுப்புகிறேன். நெட்டிலிருந்து ப்ரைவேட் ஹாஸ்ப்பிட்டல் 4 தேர்வு செய்து விட்டு, கஜலட்சுமிக்கு அழைத்துப் பார்த்தேன்.

அரைத்தூக்கத்தில் எடுத்துவிட்டார் கஜலட்சுமி.
‘ம்மா பனிக்குடம் உடைஞ்சிடிச்சு. எந்த ஹாஸ்ப்பிட்டல்ம்மா? பி வெல் ஹாஸ்ப்பிட்டல்?’

‘போகலாம் பரமன் அங்க. 100 ஃபீட் ரோடு அது!’

‘இல்ல. நல்லாம் க்ளினிக்?’

‘பரமன், நல்லாம் நம்ம அக்‌ஷத் தெரிஞ்சவங்கதான்.’

‘அப்ப, சரிம்மா!’

இதற்கு நடுவில் மலர்ச்சி புதுச்சேரி மாணவர் அக்‌ஷத்திடமிருந்து ‘East Coast Hospital’ என்று பரிந்துரை வருகிறது.

திரும்ப சங்கரியின் நம்பரை அடித்து ஜோதி சித்தியை பிடித்து, ‘ராஜீவ் காந்தி போங்க. அட்மிஷன் பண்ணலன்னா… வாட்ஸ் அப்ல ஒரு பிரைவேட் ஹாஸ்ப்பிட்டல் முகவரி அனுப்பியிருக்கேன் அங்க போகனும்! இப்ப எங்க இருக்கீங்க?’

‘அரியாங்குப்பம்!’

‘சரி ராஜீவ் காந்தி போங்க’.

டாக்டர் அக்‌ஷத் அழைக்கிறான்.

‘பரமன்… மகாத்மா காந்தியில தெரிஞ்ச டாக்டர் இருக்காரு’

‘கோவிட் டெஸ்ட் எடுக்காம சேத்துக்க மாட்டாங்களாம். ராஜீவ் காந்தி போகச் சொல்லிட்டேன். பி வெல் போகலாம்னு யோசிச்சேன். நீங்க ஈஸ்ட் கோஸ்ட் அனுப்ச்சீங்க அக்‌ஷத். இல்லன்னா நல்லாம் கிளினிக்’

‘பரமன், நல்லாம் க்ளினிக் தெரிஞ்சவங்கதான். டாக்டர்ஸ் யாருமே இல்ல. கோவிட் ட்யூட்டில வேற வேற இடத்தில இருக்காங்க. ராஜீவ் காந்தி போகச்சொல்லிட்டீங்க. அதான் பெஸ்ட். அங்க அட்மிஷன் போடனும். போடலன்னா, அடுத்து குளூனி, எங்கயும் சேக்கலன்னா ஜிப்மர்!’

‘சரி!’

ஜோதி சித்தியை அழைத்து
‘எங்க இருக்கீங்க?’

‘ராஜீவ் காந்தி போயிட்டு இருக்கம்பா கார்ல. சங்கரி வீட்டுக்காரர்தான் ஓட்டறாரு’

‘சரி. போயிட்டு கூப்புடுங்க. வெயிட் பண்றேன்!’

திரும்ப அக்‌ஷத் அழைக்கிறார், நிலை தெரிந்து கொள்ள. கஜலட்சுமி வாட்ஸ்ஆப்பில் விசாரிக்கிறார். புதுச்சேரி பேக்கரி சதீஷ் வேறொரு மருத்துவமனை பெயரை அனுப்புகிறார்.

ஜோதி சித்தியை அழைக்கிறேன்.

‘எங்க இருக்கீங்க?’

‘தோ, எறங்கறோம்ப்பா ராஜீவ் காந்தியில’

‘சரி, அட்பிஷன் கெடச்சுரும். போங்க. போயிட்டு பாத்து சொல்லுங்க!’

‘They got down in Rajeev Gandhi’ என்று அக்‌ஷத், கஜலட்சுமிக்கு டெக்ஸ்ட் பண்ணும் போதே, ஜோதி சித்தி அழைக்கிறார், ‘சிவா, இங்க யாருகிட்டயாவது பேசியிருக்கியா?’

‘இல்ல. நேரா அட்மிஷன் கிடைக்கும் போங்க’

10 நிமிடமாய் காத்திருந்து, மூன்று முறை அழைத்துப் பார்க்கிறேன் ஜோதி சித்தி எடுக்கல.

கஜலட்சுமிய அழைத்து, ‘ஸீ… ஊர்லேருந்து வந்துருக்காங்க. நாம எல்லாரும் தூங்காம வெயிட் பன்றது, கால் பண்ணி சொல்லனும்லாம் தெரியாது அவங்களுக்கு. இதுவரைக்கும் ஃபோன எடுக்கல. அப்படீன்னா அங்க அட்மிஷன் ப்ரசீஜர்ல பிஸியா இருப்பாங்க. நல்லது நடக்கும். நீங்க தூங்குங்க!’

டாக்டர் அக்‌ஷத்துக்கும் டெக்ஸ்ட் பண்ணிவிட்டு, லைட் போட்டதும் கண் சுருக்கி புரண்டு படுக்கும் ப்ரியாவைக் கடந்து பாத்ரூம் போயிட்டு வந்து படுத்து விட்டேன்.

தூக்கம் கண்ணை சொக்கும் போது, ஃபோன் துடிக்கிறது.

‘ஹலோ!’

‘வாழ்க! வளர்க!’

( ஏ… இது யார்ரா இது ‘வாழ்க, வளர்க!’ன்னு!?? )

‘அவங்க அங்க டாக்டர்ஸ்ட பேசறாங்கப்பா. அதான் ஃபோன் எடுக்கல. நான் பாத்துட்டு உனக்கு கூப்படேன்’

( குரல் புரிந்து விட்டது!)

‘சாந்தி சித்தி! நீங்களா? நீங்களும் கூடத்தான் இருந்தீங்களா?’

‘ஆமாம்ப்பா. நானும்தான் இருக்கேன்.’

‘ ராஜீவ்காந்தியில அட்மிஷன் போட்டாங்களா?’

‘போடறாங்கப்பா. அதான் பாத்துட்டு இருக்காங்க!’

‘நல்லது சித்தி’

சங்கரி ராஜீவ் காந்தியில் அனுமதிக்கப் பட்டுள்ளார் பிரசவத்துக்கு. ஆணோ பெண்ணோ, வரும் அந்த குழந்தைக்கு டாக்டர் அக்‌ஷத்தையோ கஜலட்சுமியையோ அதிகாலை 2லிருந்து 3 வரை அவர்களை தொடர்பிலேயே வைத்திருந்ததோ தெரியாது. வரும் அந்தக் குழந்தை வரட்டும் நலமாக!

வாழ்க! வளர்க!

  • பரமன் பச்சைமுத்து
    19.05.2021
    03.20am

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *